பெப்சி தலைவர் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி..!

பெப்சி தலைவர் தேர்தலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெற்றி..!

‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்ச் சினிமாவில் தொழிலாளர்களுக்கான அமைப்பில் உச்சபட்ச அமைப்பான பெப்சிக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியோடு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ‘பெப்சி’யின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியே மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மூர்த்தி, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு கலை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சண்முகமும், சண்டை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் சோமசுந்தரம் என்கிற சுப்ரீம் சுந்தரும் போட்டியிட்டனர்.

பொருளாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் சுவாமிநாதனும், தயாரிப்பு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்திரனும் போட்டியிட்டனர்.

fefsi-election-2019-selvamani-team

இந்த மூன்று பதவிகளுக்கு மட்டுமே போட்டி ஏற்பட்டுள்ளதால், இவைகளுக்கு மட்டுமே இன்று தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் இருந்த 66 வாக்குகளில் மேக்கப் யூனியன் நிர்வாகிகளில் ஒருவர் மட்டும் வாக்களிக்க வராததால் 65 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி 49 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மூர்த்தி 16 வாக்குகளை பெற்றார்.

பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில் செல்வமணி அணியைச் சேர்ந்த சண்முகம் 50 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர் 15 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பொருளாளர் பதவிக்கான தேர்தலில் செல்வமணி அணியைச் சேர்ந்த சுவாமிநாதன் 47 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சந்திரன் 18 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.

துணைத் தலைவர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு தலா 5 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

இதன்படி துணைத் தலைவர்களாக இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் தீனா, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீதர், நடன இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் ஷோபி, டிரைவர்கள் சங்கத்தின் சார்பில் செந்தில், நளபாக ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

துணைச் செயலாளர்கள் பதவிக்கு ஸ்டில்ஸ் போட்டோகிராபர்கள் சங்கத்தின் சார்பில் ராஜா, சினி ஏஜெண்ட் சங்கத்தின் சார்பில் ரமண பாபு, ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கிரி, எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் சம்பத், மகளிர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீப்ரியா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் அணியினரே கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியினர் 2019-2021-ம் ஆண்டு வரையிலும் பெப்சி நிர்வாகத்தைக் கவனிப்பார்கள்..!

Our Score