full screen background image

தேவ் – சினிமா விமர்சனம்

தேவ் – சினிமா விமர்சனம்

‘சிங்கம்-2’, ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது படைப்பாகத் தயாரித்துள்ள திரைப்படம் இது.

படத்தில் கார்த்தி நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்ராஜ், இசை – ஹாரிஸ் ஜெயராஜ், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – தாமரை, கபிலன், விவேக், ரஜத் ரவிஷங்கர், சண்டை இயக்கம் – அன்பறிவு, தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், நடன இயக்கம் – தினேஷ், ஷோபி, உடைகள் வடிவமைப்பு – நீரா கோனா, டிசைன்ஸ் – டுனீ ஜான், புகைப்படங்கள் – ஆனந்த்குமார், ஒப்பனை – வி.முருகன், தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.கணேஷ், பி.எஸ்.ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பாளர் – கே.வி.துரை, முதன்மை தயாரிப்பு – ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விநியோகம் – முரளி சினி ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.லஷ்மண்குமார், அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் தயாரிப்பாளரான ஹெச்.முரளி இந்தப் படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்திருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஒரு வருட கால இடைவெளிக்குப் பின்பு கார்த்தியின் நடிப்பில் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது.

கார்த்தி மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்தவுடனேயே அம்மாவை இழந்தவர். அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் தொழிலுக்குப் போகாமல் தன் மனம் எதை விரும்புகிறதோ அதைத் தேடிச் செல்கிறார்.

சிறு வயதிலிருந்தே அவருக்கு பயணம் மிகவும் பிடித்தமானது. புதிய, புதிய இடங்களைப் பார்க்க வேண்டும், சாகசச் செயல்களைச் செய்ய வேண்டும் என்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் கார்த்தி.

இதற்காக தனது பள்ளிக் காலத்திலிருந்து இப்போதுவரையிலும் நண்பனாக இருக்கும் விக்னேஷ், மற்றும் தோழி அமிர்தாவுடன் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார். கார்த்தி பணக்காரர். ஊர் சுற்றுவதில் தப்பில்லை. நம்ம நிலைமை அப்படியில்லையே என்று நினைக்கும் விக்னேஷ், கார்த்திக்கு எப்படியாது கல்யாணம் செய்து  வைத்துவிட்டால் நாம் தப்பிக்கலாம் என்று நினைத்து காதல் செய்ய தூபம் போடுகிறார்.

ஒரு பொண்ணை பார்த்தாலே காதல் உணர்வு வரும். எனக்கு அப்படி யாரைப் பார்த்தும் வரலியே என்கிறார் கார்த்தி. இதற்காக விக்னேஷ் ஒரு ஐடியா கொடுக்கிறார். முகநூலில் பார்த்தாவது காதல் செய் என்று தூண்டிவிடுகிறார். இவர்களின் நச்சரிப்பு தாங்காமல் இதற்கு ஒப்புக் கொள்ளும் கார்த்தி முகநூலை நோண்ட, அவரது கண்ணில் படுவது ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம்.

ரகுல் ப்ரீத் சிங் லண்டனில் மிகப் பெரிய செல்வந்தர். கார்பரேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தான் கைக்குழந்தையாக இருக்கும்போதே தன்னையும், அம்மாவையும் நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப் போன தன் அப்பாவை இப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார். எல்லா ஆண்களுமே இப்படித்தான்  என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய அம்மா ரம்யா கிருஷ்ணன்.

ரகுலுக்கு முகநூலில் பிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்கிறார் கார்த்தி. ஆனால் அது நாலாயிரத்து சொச்ச ரெக்வஸ்ட்டுகளோடு ஒன்றாக காத்துக் கொண்டிருக்கிறது. கார்த்தி சென்னை திரும்பிய நேரத்தில் ரகுலும் சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார். அவரை விரட்டிப் பிடித்து ஐ லவ் யூ சொல்கிறார் கார்த்தி.

முதலில் இதை ஏற்க மறுக்கும் ரகுல் பின்பு ஒத்துக் கொள்கிறார். இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள். மும்பையிலிருந்து சென்னைவரையிலும் சாலை வழியாகவே பைக்கில் ஒன்றாக வருகிறார்கள்.

இடையில் தன் தந்தை தன்னிடம் ஒப்படைத்த பில்டிங் காண்ட்ராக்ட் சம்பந்தமான தொழிலில் கார்த்தி மும்முரமாக ரகுலிடம் பேச முடியாமல் போகிறது. இந்தத் திட்டத்தின் பூமி பூஜை தினத்தன்று தன் குடும்பத்தாரிடம் ரகுலை அறிமுகம் செய்து வைக்க அவரை அழைத்து வருகிறார் கார்த்தி.

வந்த இடத்தில் கார்த்தி இங்கேயே தொழில் செய்யப் போகிறார் என்பதை அறிந்த ரகுல் யாரையுமே சந்திக்காமல் அங்கேயிருந்து ஓடுகிறார். தன் அருகிலேயே எப்போதும் இருக்கப் போகிறாய் என்று நினைத்துதான் காதலித்தேன் என்கிறார் ரகுல். ஆனால் கார்த்தியோ அதுவும் முக்கியம். தொழிலும் முக்கியமாச்சே என்கிறார்.

ஆனால், ரகுல் இதை ஏற்றுக் கொள்ள மறுத்து லவ் பிரேக் அப் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். இதனை கார்த்தி ஏற்க முடியாமல் தவிக்கிறார். இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிராமத்து இளைஞனாக.. பொறுப்பான குடும்ப இளைஞனாக.. பிரிந்த குடும்பத்தைச் சேர்க்க நினைக்கும் ஒரு மகனாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கேரக்டரில் நடித்துவிட்டு இப்படி பொசுக்கென்று அல்ட்ரா மாடர்ன் பையனாக மாறிவிட்டால் அவரது ரசிகர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியுமாம்..

பணக்காரர். அம்மா அன்புக்கு ஏங்கியவர். அப்பாவின் பாசத்திற்கு தலை வணங்குகிறார். காதலிக்கு உண்மையாக இருக்க நினைக்கிறார். அதே சமயம் தன் குடும்பத்தையும் கவனிக்க நினைக்கிறார். இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

பார்க்கத் தோரணையாக பணக்காரத்தனத்திற்கு கார்த்தி கச்சிதம். விக்னேஷின் ஓயாத புலம்பலைக் கேட்டும், கேட்காமலும் அவரை விட்டுவிடாமல் தனக்குத் தோதாக கூடவே வைத்துக் கொண்டு செய்யும் அலம்பலை ஓரளவு ரசிக்க முடிகிறது. ஆனால் விக்னேஷ் பாவமாச்சே என்ற எண்ணத்தில் இதெல்லாம் ரொம்பத் தப்பு என்றும் சொல்லத் தோன்றுகிறது.

ராகுல் ப்ரீத்துடன் ரொமான்ஸ் காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார் என்றாலும் அழுத்தமில்லாத காதல் என்பதாலும், ஒத்துவராத காதலாச்சே என்கிற திரைக்கதையினாலும் எல்லாம் வீணாகிப் போய்விட்டது.

ஆனாலும், விக்கி, அமிர்தாவுடன் சேர்ந்து கொண்டு கார்த்தி அடிக்கும் லூட்டி, ராகுல் ப்ரீத் சிங்கை காதலிக்க வைக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கிறது.

நாயகி ராகுல் ப்ரீத்சிங் இதுவரை நடித்த படங்களிலேயே இந்தக் கதாபாத்திரம்தான் வலுவானது என்பதை அவரே ஒப்புக் கொள்வார். பணக்காரத் திமிர்த்தனத்தை தனது முகபாவனையிலேயே காட்டுகிறார்.

அழகி என்பதை குளோஸப் காட்சிகள் காட்டுகின்றன. மிக அழகி என்பதை பாடல் காட்சிகள் உணர்த்துகின்றன. நடிப்பும் வரும் என்பதை இடைவேளைக்கு பின்பு வரும் அனைத்துக் காட்சிகளிலும் உணர்த்தியிருக்கிறார்.

கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ். மகனுக்காகவே தனது வாழ்க்கையைத் துறந்து வாழ்ந்த தனது ஏக்கத்தை அழகாக காட்டியிருக்கிறார். மருத்துவமனை படுக்கையில் ஸாரிப்பா என்று கார்த்தி சொல்லும்போது எதுக்குப்பா என்று சொல்லி பேசும் அந்தக் காட்சியில் பிரகாஷ்ராஜின் அனுபவ நடிப்பு வெல்கிறது.

இதேபோல் ரகுலின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன். தன் வாழ்க்கையைப் போல தன் மகள் வாழ்க்கையும் சூன்யமாக இருக்கக் கூடாது என்பதற்காக மகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி.. மகளின் ஈகோ பிரச்சினையை கண்டித்தும் சொல்லிப் பார்க்கிறார். இந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார் ரம்யா.

விக்னேஷின் அலப்பறைகள் பாதி ஓகே.. மீதியெல்லாம் வீண்தான். சில இடங்களில் மட்டுமே உதடு பிரிந்து சிரிக்க முடிகிறது. தோழியாக நடித்திருக்கும் அம்ருதாவின் நடிப்பும் ஓகேதான். ஒரு காட்சியில் ரகுலின் கண்களே தன்னைக் கவர்வதாக சொல்கிறார் கார்த்தி. ஆனால் உண்மையில் படத்தில் ரகுலின் கண்களைவிட இந்த அம்ருதாவின் கண்களே காதலை ஈர்க்கும்வகையில் இருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன. ‘அனங்கே சினுங்குதே’, ‘ஒரு நூறு முறை’, ‘எங்கடி நீ போன’ என்ற பாடல்கள் கேட்பதற்கு இனிமை. ஆனால் ஏற்கனவே கேட்ட டோனில்..! பின்னணி இசையில் மட்டும் வழக்கமான ஹாரிஸின் முத்திரை. இனிமேலெல்லாம் பாடல்களின் ஆயுசு தியேட்டர்வரைக்கும்தான் என்பதற்கு இத்திரைப்படத்தின் இசையும் ஒரு சான்று.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் ஒளிப்பதிவுதான் படத்தில் இருக்கும் ஒரேயொரு ஆறுதல். உக்ரைன், சான் பிரான்சிஸ்கோ, இமயமலை என்று பல இடங்களையும் சுற்றிப் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது இத்திரைப்படம்.

உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ள மில்கி வே காட்சிகள், லண்டன், சானஅ பிரான்சிஸ்கோவில் ஆடும டூயட்டுகள்.. அதிகாலையில் பறவைகள் கூட்டமாக பறந்து செல்லும் காட்சி, இமயமலையின் அடிவாரம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் பனிப் புயல் என ஒரு பிரமிப்பான காட்சியமைப்புகளை படமாக்கியிருக்கிறார்கள். அற்புதம் என்றே சொல்லலாம். காட்சிக்குக் காட்சி ஹை கிளாஸ் திரைப்படம் இது என்பதை உணர்த்தும்வகையில் ஒளிப்பதிவு இருக்கிறது. பாராட்டுக்கள்.

படத்தில் இருக்கும் பிரச்சினையே காதலர்கள் பிரிவுக்கான காரணம் அழுத்தமாக இல்லாததும், அதன் திரைக்கதை சோபையாக இருப்பதுதான். இதனாலேயே படத்தை ரசித்து பார்க்க முடியவில்லை. மனைவிக்காக அப்பாவைவிட்டு வெளிநாடு போய் செட்டிலாவது என்பதை திரை ரசிகர்களால் ஏற்கவே முடியாது. இந்த இடத்தில் வேறு ஒரு பொருத்தமான காரணத்தைக் காட்டியிருக்கலாம்.

தன்னுடைய அப்பாவை போலவே எல்லா ஆண்களும் இருப்பார்களும் என்கிற ரகுலின் எண்ணத்தை உடைக்கும்விதமாக அழுத்தமான காட்சியில்லாமல் வெறும் வசனத்திலேயே திரைக்கதையை நகர்த்தியிருப்பதால் ரகுலின் மனமாற்றங்களும், ஈகோ பிரச்சினைகளும் ரசிகர்களின் மனதை பாதிக்கவே இல்லை.

கார்த்தி, ரகுல் இடையேயான காதல், மோதல் கதையை இன்னும்கூட கொஞ்சம் சுவாரஸ்யமாக, ஜாலியாக எடுத்திருக்கலாம். இயக்குநரின் தவறுதான் இது.

படத்தின் கிளைமேக்ஸ் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் காட்சியாக வைத்திருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு திரைக்கதைக்கு உதவியிருக்கிறது என்பது தெரியவில்லை. எதற்காக இமயமலை காட்சியை இயக்குநர் வைத்தார் என்றும் தெரியவில்லை. படத்திலேயே மிக மோசமான திரைக்கதை இதுதான்.

படத்தின் துவக்கத்தில் விக்னேஷ் கார்த்தி-ராகுல் கதையைச் சொல்வதே சுவாரஸ்யமற்று இருக்கிறது. இதற்குப் பதிலாக நிஜமாகவே நடப்பதுபோலவே மாற்றியிருந்தால்கூட அதில் ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும்.

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகளின் குறைவினால்தான் படம் பற்றிய ஒரு கணிப்புக்கு வர முடியாமல் போய்விட்டது. வெற்று வசனத்தாலேயே படத்தை நகர்த்த முனைந்திருக்கிறார் இயக்குநர். இதுவும் அவருக்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாக ஆகிவிட்டது.

காதல் கதையை மையமாக வைத்து இதுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் எண்ணற்ற படங்கள் வந்துவிட்டன. புதிய படமெனில் இதுவரையில் பார்த்திராத ஒரு காதலைத்தான் சொல்ல வேண்டும். அதுதான் ரசிகர்களைக் கவரும். இதில் அதைச் செய்யாததுதான் தவறாகிவிட்டது.  

அறிமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கரின் அடுத்தப் படம் வெற்றிப் படமாக அமையட்டும்.

 

Our Score