பெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..!

பெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..!

வரும் பிப்ரவரி 17 அன்று ‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது.

இதில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளருக்கான பதவிகளை தவிர மீதி அனைத்திற்கும் தற்போதைய பெப்சியின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணியினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில் ‘பெப்சி’க்கு எதிராக South India Cine and T.V. Outdoor Technicians Union அமைப்பின் சார்பில் அதன் தலைவரான தனபால் வழக்கு தொடுத்திருந்தார்.

தங்கள் யூனியனை ‘பெப்சி’ தொழிலாளர்கள் சம்மேளனத்தில் சேர்த்துக் கொள்வதுடன், தேர்தலில் பங்கெடுக்கவும் அனுமதிக்க வேண்டுமென வழக்கு தொடுத்திருந்தார். ‘பெப்சி’ அமைப்பின் சார்பில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பதில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று இவ்வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டின் துவக்கத்தில் டெக்னீசியன் யூனியன் அளவுக்கு அதிகமான சம்பளம், பேட்டா மற்றும் கட்டுப்பாடுகளை விதித்ததால் தயாரிப்பாளர் சங்கம் இதனை ஏற்க மறுத்தது.

இந்தப் பிரச்சினையின் காரணமாக டெக்னீசியன் யூனியன் திடீரென்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. தயாரிப்பாளர் சங்கம் இது குறித்து தனது கடுமையான அதிருப்தியை பெப்சியிடம் தெரிவித்தது.

இது தொடர்பாக ‘பெப்சி’ சார்பில் இரண்டு பக்கமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் டெக்னீசியன் யூனியன் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்தது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கென தனியாக ஒரு டெக்னீசியன் யூனியனைத் துவக்கியது.

பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர டெக்னீசியன் யூனியன் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பெப்சி அமைப்பு உத்தரவிட்டது. ஆனாலும் இந்த உத்தரவை டெக்னீசியன் யூனியன் ஏற்க மறுத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதையடுத்து ‘பெப்சி’யின் முடிவை எதிர்த்து தனியாகச் செயல்பட்ட டெக்னீசியன் யூனியனை ‘பெப்சி’யின் பொதுக் குழு ‘பெப்சி’ அமைப்பில் இருந்தே நீக்கிவிட்டது.

தங்களது நீக்கத்தை எதிர்த்து டெக்னீசியன் அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நேரத்தில் ‘பெப்சி’யின் தேர்தலும் வந்துவிட்டதால் இத்தேர்தலில் தங்களது சங்கமும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி புதிய மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘பெப்சி’ தேர்தலில் அந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் டெக்னீசியன் யூனியன் கலந்து கொள்ள உத்திரவிட முடியாது என்று கூறி தள்ளுபடி செய்துவிட்டது.

தற்போதைய தலைவரான ஆர்.கே.செல்வமணி, முறைகேடாக தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத்தான் இந்தச் சங்கத்தை ‘பெப்சி’ அமைப்பில் இருந்து நீக்கினார் என்று இப்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் எதிரணியினர் கூறி வரும் நேரத்தில், இந்த நீதிமன்ற உத்தரவு ஆர்.கே.செல்வமணி தரப்பினருக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது.

முறைப்படியாக ‘பெப்சி’ அமைப்பின் பொதுக் குழு கூடி, அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடுதான் டெக்னீசியன் யூனியனை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆர்.கே.செல்வமணிக்கு தனிப்பட்ட விரோதமோ, நோக்கமோ எதுவும் இல்லை.

தயாரிப்பாளர்கள் இறங்கி வந்து பேசிய பின்பும் அந்த யூனியனின் நிர்வாகிகள் அவர்களை மதிக்காமல் தொடர்ந்து நடந்து கொண்டதால்தான் இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டி வந்தது.

கடந்த முறை ‘பெப்சி’ தலைவர் பொறுப்பில் இருக்கும்போது தனக்குப் பெரிதும் மனத் துயரைத் தந்த விஷயம் இதுதான் என்று செல்வமணியே இப்போதுவரையிலும் வருந்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

நீதிமன்றத்தின் இந்த தள்ளுபடி உத்தரவு, ‘பெப்சி’ தேர்தலில் என்ன விளைவை கொடுக்கும் என்று இரண்டு அணியினரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்..!

Our Score