புறாவழி தூது, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மக்கள் இடத்தில பிரபலமாய் இருப்பது சமூக வலைத்தளங்கள்.
அந்த சமூக வலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாய் எடுத்து கொண்டு, ‘சென்னை-28-II’ படத்தை மிக சரியான முறையில் விளம்பரப்படுத்தி வருகின்றனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய குழுவினரும்.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் தென்னகத் தலைமைச் செயலகமான ஹைதராபாத்தில் நடைபெற்ற பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி மூலம், திரைப்படங்களை விளம்பரப்படுத்தும் யுக்தியில் புதியதொரு சாதனையைப் படைத்திருக்கின்றனர் ‘சென்னை 28 – II’ அணியினர். தொகுப்பாளர் ரம்யா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், ‘மிர்ச்சி’ சிவா, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த், மகேஸ்வரி, நாகேந்திரன் மற்றும் படத் தொகுப்பாளர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
ஒரே நேரத்தில் 8 லட்சம் ரசிகர்களை ஈர்த்த இந்த நேரலை நிகழ்ச்சியை 5000 பேர் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி 2,50,000 இணையத்தளவாசிகளும், 6000 கருத்துக்களும் இந்த நேரலை நிகழ்ச்சிக்கு பதிவானது என்பது மேலும் சிறப்புதான்.
‘சென்னை-28-II’ படக் குழுவினரும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ரசிகர்களும் பங்கு பெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சுமார் 55 நிமிடங்கள் நடைபெற்றது.
கேள்வி பதில், கிரிக்கெட் தொடர்பான வினாடி வினா போட்டி, ‘சென்னை-28-II’ படத்தின் பாடல்களை திரையிடுவது என பல சிறப்பம்சங்கள் பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் இடம் பெற்று, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
எப்போதுமே அதிகம் பேசாத இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களோடு கலந்துரையாடியது, ஒட்டு மொத்த இணையத்தளவாசிகளையும் அதிகளவில் கவர்ந்து விட்டது.
‘சென்னை-28–II’ படத்தின் ‘நீ கிடைத்தாயோ’ பாடலின் பிரத்யேக காட்சிகளை இந்த பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.
“ஒரு திரைப்படத்தை முறையாக சமூக வலைத்தளங்களில் எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள், ‘ட்ரெண்ட் லௌட்’ நிறுவனம். இதுவரை யாரும் கண்டிராத புத்தம் புதிய யோசனையை வழங்கி, எங்களுடைய ‘சென்னை-28-II’ படத்தை ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்துவரும் ‘ட்ரெண்ட் லௌட்’ நிறுவனத்திற்கு நன்றிகள்…..” என்கிறார் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான வெங்கட் பிரபு.