முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பட்டினப்பாக்கம்’.
இந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ‘ஈகோ’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ திரைப்படங்களில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சாயாசிங், யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராணா, படத் தொகுப்பு – அதுல் விஜய், இசை – இஷான் தேவ், தயாரிப்பு நிர்வாகம் – மோகன மகேந்திரன், சிகை அலங்காரம் – வினயா தேவ், சண்டை பயிற்சி – ரன் ரவி, ஒலிக்கலவை – கிருஷ்ணமூர்த்தி, படக் கலவை – நந்தகுமார், ஒலி வடிவமைப்பு – ராண்டி ராஜ், உடைகள் – முரளி, இணை தயாரிப்பு – சுகுமார் தெக்கபெட், மக்கள் தொடர்பு – நிகில், திரைக்கதை, இயக்கம் – ஜெயதேவ்.
படம் பற்றி இயக்குநர் ஜெயதேவ் பேசும்போது, “சில நேரங்களில் நாம் எடுக்கும் சரியான முடிவுகூட தவறான சூழல் மற்றும் தவறான இடங்களால் தவறான செயலாகிவிடும். அதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
பட்டப் படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான்.
இதற்காக ஹீரோ சிலரை குறி வைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக அவனுக்கு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கலில் மாட்டியவர்களின் கதி என்ன..? நாயகன் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
இந்தப் படத்துக்கும் சென்னையில் இருக்கும் பட்டினப்பாக்கம் பகுதிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கிரைம் திரில்லர் ஜானர் படமான இதில் 21 முக்கிய கேரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றித்தான் படமே நகரும். இந்தப் படத்தில் கலையரசன்தான் நடிக்க வேண்டும் என்று காத்திருந்து நடிக்க வைத்திருக்கிறேன்..” என்றார்.
“மலையாளியான நீங்கள் தமிழில் படம் இயக்க வந்தது ஏன்..?” என்று கேட்டதற்கு, “மலையாளத்தில் பொதுவாக ரசிகர்கள் அனைவருமே சினிமாவை தங்களது வாழ்க்கையில் ஒரு பகுதியாக.. ஏன் வாழ்க்கையாகவே நம்புவார்கள். அதனால்தான் ரியலிஸ்ட்டிக்கான திரைப்படங்கள் மலையாளத்தில் பெரும் வெற்றியடைகின்றன. ஆனால் தமிழில் அப்படியல்ல. இங்கே ‘இதுவொரு சினிமா’ என்கிற புரிதல் தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஸோ.. மலையாள ரசிகர்களைவிடவும் தமிழ் ரசிகர்கள்தான் பெஸ்ட்டு.. இதனால்தான் நன்கு யோசித்து இந்தப் படத்தை தமிழில் எடுத்திருக்கிறோம்..” என்றார்.
பட்டினப்பாக்கம் படத்தை S.P.சினிமாஸ் நிறுவனம் உலகமெங்கும் விரைவில் வெளியிடவுள்ளது.