‘கத்தி’ படத்தை சுற்றி வளைத்து பலரும் கத்தியால் குத்திக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு பெரிய கத்திக் குத்துக்கு சிகிச்சை கிடைத்துவிட்டது..!
எப்போதும் பெரிய படங்களென்றால் அதன் ஆடியோ ரிலீஸை சோனி கம்பெனிதான் கைப்பற்றும். ஆடியோ விற்கிறதோ இல்லையோ.. பெரிய படங்களின் ஆடியோ உரிமை தன் கையில் இருப்பதுதான் தனக்கு பெருமையும், மரியாதையும் என்று அக்கம்பெனி நினைப்பதால் சில நேரங்களில் வசூலுக்கு மிஞ்சும் அளவுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து ஆடியோ உரிமையை பெற்றுக் கொள்ளும்.
ஆடியோ உரிமை வாங்குவதில் முன்னணியில் இருக்கும் சோனி, ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையையும் வாங்குவதில் ஆரம்பத்தில் முனைப்பு காட்டியது. ஆனால் ‘கத்தி’ படத்திற்குக் கிடைத்த கத்திக் குத்துக்களை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு தங்களது கம்பெனிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நினைத்து கடைசி நிமிடத்தில் ஜகா வாங்கிவிட்டது. இந்த ஜகாவுக்கு இசையமைப்பாளர் அனிருத்தின் அநியாயமான தாமதமும் ஒரு காரணம் என்கிறார்கள்..
சமீபத்தில்தான் விஜய் அனிருத்தை அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பிறகு கடைசியாக இரண்டு பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார். அது எப்படியிருக்குது என்றாலும் வேறு வழியில்லாமல் அதைத்தான் ஷூட் செய்ய அடுத்த வாரம் லண்டன் செல்லவிருக்கிறது படக்குழு.
இந்த நிலைமையில் இந்த வாரம் ஈரோஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குநராக பொறுப்பேற்ற செளந்தர்யா ரஜினிகாந்த் தனது நிறுவனத்தின் சார்பில் செய்த மிகப் பெரிய ஒப்பந்தம் இந்தக் ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையை தங்களது ஈரோஸ் நிறுவனத்திற்காக பெற்றதுதான்..
யாருமே வாங்காமல் போனால் அது மரியாதையாக இருக்காது என்பதால் லைகா மொபைல் நிறுவனத்தை அழைத்து வந்த ஐங்கரன் நிறுவனம் தனது சார்பு நிறுவனமான ஈரோஸ் ஆடியோவின் மூலம் ‘கத்தி’ படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளது..
எது எப்படியிருந்தாலும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்கிற கதையாக விஜய்யும், முருகதாஸும் நடந்து கொள்கிறார்கள்..!
இது எங்கே போய் முடியுமோ..?