‘தல’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இந்த மாதம் 9-ம் தேதி ரிலீஸ் என்று சொல்லியிருந்த நிலையில் இன்னமும் ஷூட்டிங் பாக்கியிருக்கிறது என்று சொல்லி 20 நாட்கள் ஒத்திப் போட்டார்கள்.
இம்மாதம் 29-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தும் நிலையில் இப்போது இன்னும் தள்ளிப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
29-ம் தேதிக்கு தள்ளிப் போகிறது என்று அறிவித்த தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக இதனை வெளியில் சொல்லவில்லையென்றாலும், இந்தப் படத்தை வெளிநாடுகளில் திரையிட உரிமம் பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம் இச்செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
“என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது..” என்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஐங்கரன் நிறுவனம் சொல்லியுள்ளது.
என்ன விவகாரம் என்று விசாரி்த்து பார்த்ததில் “என்னை அறிந்தால்’ திரைப்படம் இன்னமும் சென்சார் செய்யப்படவில்லை. அது எப்போது என்பதும் தெரியவில்லை என்பதால்தான் இந்த தள்ளி வைப்பு..” என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
ஆனால் இன்னொரு தரப்பினரோ இது சப்பை மேட்டர். ஒரு மிகப் பெரிய தயாரிப்பாளர், மிகப் பெரிய படம் என்றால் உடனுக்குடன் சென்சார்ஷிப் செய்ய வைக்க அவர்களால் முடியும். உண்மை அதுவல்ல..
இப்போது பொங்கலுக்கு வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘ஐ’, ‘ஆம்பள’, ‘டார்லிங்’ ஆகிய மூன்று படங்களுமே நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தூக்கிவிட்டு்ததான் ‘என்னை அறிந்தால்’ படத்தை திரையிட முடியும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும், சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களும் இதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறார்களாம்.
“இப்போது தியேட்டர்களில் 65 சதவிகிதத்துக்கும் மேல் கூட்டம் வரும்போது ஏன் படத்தைத் தூக்குறீங்க…?” என்று பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்க.. வசூலே பிரதானம் என்ற எண்ணத்தில் இருக்கும் தியேட்டர்காரர்களும் இதற்கு இணங்கிப் போயிருக்கிறார்கள்.
இப்போதைக்கு குறைவான தியேட்டர்களில் ‘என்னை அறிந்தால்’ படத்தைத் திரையிட்டால் அது வசூலை பாதிக்கும் என்பதால்தான் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என்கிறது கோடம்பாக்கத்து செய்தி.