full screen background image

‘எனக்குள் ஒருவன்’ ‘லூசியா’விலிருந்தும் வித்தியாசமானது.. – நடிகர் சித்தார்த் உறுதி..!

‘எனக்குள் ஒருவன்’ ‘லூசியா’விலிருந்தும் வித்தியாசமானது.. – நடிகர் சித்தார்த் உறுதி..!

‘கிரவுட் பண்டிங்’ என்கிற வார்த்தையை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்தது ‘லூசியா’ என்கிற கன்னடப் படம்.

ஒரே நபர் முதலீடு செய்து ஒரு படத்தைத் தயாரிப்பதைவிட, பல பேர் சேர்ந்து ஒரு படத்தைத் தயாரிப்பதில் ரிஸ்க் குறைவு என்பதாலும், மிக குறைந்த தொகை என்பதாலும் மிக எளிதாக கடனாகத் திரட்ட முடியும் என்பதாலும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது இந்த ‘லூசியா’ என்ற திரைப்படம்.

65 லட்சம் ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கன்னடவுலகத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல மடங்கு தொகையை வசூல் செய்து கொடுத்திருக்கிறது.

இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றவர்கள் படத்தின் தரம் குறித்தும், கதை குறித்தும், மேக்கிங் குறித்தும் வியப்போடு வெளியில் பேச ஓவர் நைட்டில் இந்தப் படம் இந்தியாவெங்கும் பிரபலமானது.

படத்தின் ஹீரோ ஒரு சினிமா தியேட்டரில் வேலை செய்பவர். பல சினிமாக்கள் அங்கே வாராவாரம் திரையிடப்பட அந்த சினிமாக்களை பார்த்து பார்த்து தான் ஒரு கனவுலகில் வாழ்ந்து வருகிறார். நிஜவுலகில் சினிமா தியேட்டர் ஊழியராக இருந்து கொண்டு கனவுலகில் ஒரு புகழ் பெற்ற நடிகராகவும் வாழ்கிறார். இதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

இதன் திரைக்கதையாக்கமும், இயக்கமும், நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக இருந்ததினால் படம் மாபெரும் வெற்றியினைத் தொட்டது.

அப்போது அடுத்த கேள்வியாக எழுந்தது, இது எந்தெந்த மொழிகளிலெல்லாம் ரீமேக் செய்யப்பட காத்திருக்கிறது என்பதுதான். இதோ தமிழில் ‘எனக்குள் ஒருவனாக’ அடுத்த மாதம் 3-ம் தேதி வெளிவர காத்திருக்கிறது.

ஹீரோவாக சித்தார்த் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். தீபா சன்னதி என்ற கன்னட நடிகை ஹீரோயின். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை – சந்தோஷ் நாராயணன். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க.. அபி அண்ட் அபி நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. மிக எளிமையாக பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தார்கள் படக் குழுவினர்.

முதலில் பேசிய இயக்குநர் பிரகாஷ், “ரீமேக் படமென்றாலும் அப்படியே காட்சிக்குக் காட்சி காப்பி செய்யாமல் தமிழுக்கேற்றாற்போல் சிலவைகளை மாற்றம் செய்திருக்கிறோம். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இது பிடிக்குமென்று நினைக்கிறோம்..” என்றார்.

DSC_0879

அடுத்து பேசிய நடிகர் சித்தார்த் அனைவருக்கும் சேர்த்து வைத்து பொங்கித் தீர்த்துவிட்டார்.

“இந்த ‘லூசியா’ படத்தை பார்த்திட்டு நாமதான் இதை தமிழ்ல செய்யணும்னு நினைச்சு பிளான் பண்ணியிருந்தேன். ஆனால் நான் வாங்குறதுக்குள்ள சி.வி.குமார் ஸார் வாங்கிட்டாருன்னு தெரிஞ்சவுடனே ஷாக்காயிட்டேன். நமக்கு முந்திட்டாரேன்னு வருத்தமாத்தான் இருந்தது. ஆனாலும் நல்ல படத்தை நாம விடக் கூடாதுன்னு நினைச்சு அவரை நேரில் சந்தித்து, இந்தப் படத்துல நானே நடிக்கிறேனேன்னு சொல்லி கமிட் ஆயிட்டேன்..

இதுல ஒரு சுவாரசியம்.. இன்னிக்குவரைக்கும் ‘லூசியா’ படத்தை சி.வி.குமார் ஸார் பார்க்கவேயில்லை. படத்தைப் பார்க்காமலேயே வாங்கிட்டார். இயக்குநர் பிரசாத்தின் ஸ்கிரிப்ட்டை படிச்சிட்டு முழு நம்பிக்கையோட இந்த பிராஜெக்ட்ல இறங்கியிருக்காரு.

இந்தப் படத்தை ‘லூசியா’வின் ரீமேக் என்று ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது. ‘லூசியா’ படத்தின் அடிப்படை கருவை மட்டும் எடுத்துக் கொண்டு திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்திற்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்களை படிச்சுப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். அப்படியொரு கவிதை வடிவில் எழுதியிருக்கிறார் இயக்குநர். அந்த கேரக்டருக்கு ஏற்றாற்போல் அந்த வசனங்களும் பொருத்தமாக இருந்தது. நிச்சயமா ‘லூசியா’ பார்த்தவங்களுக்கு இந்தப் படம் வித்தியாசமாத்தான் இருக்கும். ‘லூசியா’ படத்தை இயக்கிய இயக்குநர் பவன்குமாருக்கே இந்த ‘எனக்குள் ஒருவன்’ படம் நிச்சயம் ஒரு புது படம் போலதான் தெரியும்.

இதுல ரெண்டு கேரக்டர்கள் பண்ணியிருக்கேன். ஆரம்பத்துலேயே ஒரு கேரக்டரை முழுசா முடிச்சிட்டு அடுத்த கேரக்டரை செய்றேன்னு இயக்குநர்கிட்ட சொல்லியிருந்தேன். அது மாதிரியேதான் முதல்ல ஹீரோ கேரக்டரை முடிச்சிட்டு அப்புறமாத்தான் தியேட்டர் வேலையாள் கேரக்டரை செஞ்சேன். அதுக்காக பெரிசா ஒண்ணும் மாத்திக்கலை. முகத்தை கொஞ்சம் கருப்பாக்கினேன். சாயம் பூசுனேன்.. எனக்கே என்னை அடையாளம் தெரியலை..

20 நாள்தான் தியேட்டர்ல ஷூட்டிங் செஞ்சோம். அப்போ வேடிக்கை பார்க்க வந்தவங்க என்னைய அடையாளம் தெரியாமல் என்கிட்டயே ‘ஹீரோ யாரு.. எங்க இருக்காரு?’ன்னு கேட்டாங்க. ‘இன்னும் வரலை..’ ‘உள்ள இருக்காரு..’ ‘மேக்கப் போட்டுட்டிருக்காரு’ன்னு சொல்லி நானே அனுப்பி வைச்சேன். கூட நடிச்ச நரேன் ஸாரே என்னைக் கண்டுபிடிக்காம, நான் லேட்டா வர்றேன்னு நினைச்சு திட்டிட்டாரு.. இப்படியொரு காமெடி தினமும் நடந்துக்கிட்டிருந்துச்சு.

இந்தப் படம் ரிலீஸ் நேரம் ‘ஸ்கூல்ல எக்ஸாம் டைம். ஏன் இப்போ ரிலீஸ்?’ன்னு கேக்குறாங்க. எங்க படத்துக்கு முன்னாடி ‘காக்கிசட்டை’ மாதிரியான பெரிய படங்களும் வரப் போகுது. அவங்க எந்த நம்பிக்கைல ரிலீஸ் பண்றாங்களோ அந்த நம்பிக்கைலதான் நாங்களும் ரிலீஸ் பண்றோம்.

அடுத்த வருஷத்துல இருந்து போன வருஷம் மார்ச் மாதம் வந்த ‘எனக்குள் ஒருவன்’ ஜெயிச்சுருச்சுல்லே. அந்த நம்பிக்கைலதான் எங்க படத்தை ரிலீஸ் பண்றோம்னு சொல்லி நிறைய பேர் தங்களது படத்தை ரிலீஸ் செய்வாங்க. அந்தப் பெயரும் எங்களுக்குக் கிடைக்கும்ல்ல.

நான் தெலுங்குல படம் பண்ணி 3 வருஷமாச்சு. இப்பவும் அங்க என்னைக் கூப்பிட்டுக்கிட்டேதான் இருக்காங்க. நான்தான் தமிழ்ல பல தரப்பட்ட படங்களை பண்ணிக் கொடுத்துட்டு அப்புறமா அங்க போகலாம்னு இருக்கேன். எனக்கு இப்போ இருக்குற சாக்லேட் பாய், அழகான பையன்ற இமேஜையெல்லாம் இந்தப் படம் மாத்தும்னு நம்புறேன்.. இனி எந்த மாதிரி கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம்னு இயக்குநர்கள் இந்தப் படத்தைப் பார்த்து முடிவுக்கு வருவாங்க..” என்றார் பெருமையுடன்..

“இப்படி தொடர்ந்து வித்தியாசமான கதைகள்லேயே நடிக்கிறீங்களே.. கமர்ஷியல் லைன்ல போறதுக்கு விருப்பம் இல்லையா..?” என்று கேட்டதற்கு இன்னொரு நீண்ட கதையைச் சொன்னார் சித்தார்த்.

“எம்.பி.ஏ படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள்ள சேர்ந்தேன். எங்கப்பா ‘எதுக்குப்பா இது?’ன்னுகூட கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்..

இந்த 12 வருடங்கள்ல 25 படங்கள்தான் நடிச்சிக்கேன். போதுமான அளவுக்கு சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், பாரின்ல ஆடுற டூயட்டுல யாராவது ஒரு ஹீரோயினுக்கு பூ கொடுக்கிற மாதிரிதான் நடிச்சிட்டிருந்திருக்கணும். எனக்கு அது பிடிக்கலை.. வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?

ஆனாலும், கமர்ஷியலுக்கு நான் எதிரியில்லை. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன்.. ‘சிங்கம்’ மாதிரியான படத்துல நடிக்க மாட்டேன்னு நானா சொன்னேன்..? எனக்கு அந்த ஸ்கிரிப்ட் வரலை. அதுனால நடிக்கலை. எனக்கு எது சரியா வரும்னு இயக்குநர்கள் நினைக்கிறாங்களோ அதுல பெஸ்டா நடிக்கிறேன். நடிப்பேன். ஆக்க்ஷன் ஸ்கிரிப்ட் நல்லதா அமையும்போது நிச்சயமாக அதில் நடிப்பேன்..!” என்றார்.

நல்லது.. படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score