என்ஜாய் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா ராஜாசிங் தயாரித்துள்ள திரைப்படம் ‘எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்.’
இப்படத்தில் விஜி சந்திரசேகர் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக கிரண் , நாயகிகளாக மேக்னா ஏலன், நியா கிருஷ்ணா இருவரும் நடித்துள்ளனர்.
மேலும், என்ஜாய் ராஜா, தென்னவன், சாப்ளின் பாலு, இந்து மதி, டி.என்.எஸ்.சின்னவர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – என்ஜாய் கிரியேஷன்ஸ், தயாரிப்பாளர் – அபிநயா ராஜாசிங், கதை திரைக்கதை வசனம் இயக்கம் – கே.எஸ்.சரவணன், அபுபக்கர், ஒளிப்பதிவு – சிவசங்கரன், இசை – தேவ் ஓங்கார், பாடல்கள்- வினோத் ஆச்சார்யா, படத் தொகுப்பு – ஜி.எஸ்.சேகர், வினோத் ஆச்சார்யா, நடன இயக்கம் – ரமேஷ் கமல், சண்டை இயக்கம் – திரில் சேகர்.
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் கே.எஸ்.சரவணன், “இத்திரைப்படம் கடல் வாழ் மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதை. ஒரு மீனவக் குப்பத்தின் தலைவராக இருப்பவர் சந்திரா. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைப்பவர். அதேபோல் செய்தும் வருகிறார். அதே குப்பத்தில் வசித்து வரும் நான்கு படகு உரிமையாளர்கள் தங்களது தொழிலுக்குப் போட்டியாக இருக்கும் சந்திராவை கொலை செய்ய முயல்கிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் மீனவர் குப்பத்து சங்கத்தின் தலைவரான சந்திரா காணாமல் போகிறார். அவரது ஒரே மகனான கதிர், தனது அம்மாவை தேடுகிறார். காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கிறார்.
காணாமல் போன சந்திரா திரும்பக் கிடைத்தாரா.. அல்லது கொலை செய்யப்பட்டிருந்தாரா.. என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம். குளுகுளவென்ற பாடல் காட்சிகளும், பரபரப்பான சண்டை காட்சிகளும் படத்தில் உள்ளது..” என்றார்.
படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மணல்மேல்குடி, பேச்சிப்பாறை, நாகர்கோவில் போன்ற இடங்களில் 45 நாட்கள் நடந்தது.
இப்படத்தின் இசையை இயக்குநர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இத்திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.