full screen background image

எனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா – சினிமா விமர்சனம்

Vels Film International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், Ondraga Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், வெங்கட சோமசுந்தரம், Escape Artists Motion Pictures நிறுவனத்தின் சார்பாக அதன் தயாரிப்பாளர் எஸ்.மதன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சசிகுமார், செந்தில் வீராசாமி, சுனைனா, வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். ராணா டக்குபதி ஒரு சின்ன ரோலில் நடித்துள்ளார்.

எழுத்து, இயக்கம் – கவுதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவு – ஜாமோன் டி.ஜான், மனோஜ் பரமஹம்சா, இசை – தர்புகா சிவா, படத் தொகுப்பு – பிரவீன் ஆண்டனி, கலை இயக்கம் – ராஜீவன், சண்டை இயக்கம் – சில்வா, உடைகள் வடிவமைப்பு – உத்தாரா மேனன், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. படத்தின் மொத்த நேரம் 2 மணி 36 நிமிடங்கள்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திரைப்படம் நான்காண்டு இடைவெளியில் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. பல்வேறு பைனான்ஸ் பிரச்சினைகளையும் தாண்டி திரைக்கு வந்திருப்பதே ஒரு சாதனைதான்.

பொள்ளாச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ரகு என்னும் தனுஷ் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அந்தக் கல்லூரியில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் லேகா என்னும் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

அவனும் நோக்க.. அவளும் நோக்க காதல் பற்றிக் கொள்கிறது. ஒரு ஹீரோயின்.. ஒரு சாதாரண ஸ்டூடண்ட் என்றில்லாமல் காதல் இருவருக்குள்ளும் தீயாய் பரவ.. அந்தப் படத்தின் இயக்குநரான செந்திலுக்கு இது தெரிய வருகிறது.

சின்ன வயதில் இருந்தே நாயகியை வளர்த்து வந்த செந்தில் நாயகியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்துதான் படத்தைத் துவக்கி அதில் நாயகியாகவும் நடிக்க வைக்கிறார். ஆனால் செந்திலையும், நடிப்புத் தொழிலையும் பிடிக்காத நாயகி நாயகனுடன் எஸ்ஸாகிறார்.

தன்னுடைய சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு நாயகியை அழைத்து வந்து தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார் தனுஷ். அங்கேயும் செந்தில் அண்ட் கோ தேடி வந்து மிரட்டுகிறது. இதனால் பயந்து போன நாயகி தான் செந்திலுடனேயே சென்றுவிடுவதாகச் சொல்லிவிட்டு அவர்களுடனையே சென்றுவிடுகிறார்.

இதையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் தனுஷ். அடுத்த நான்கு வருடங்கள் முடியும் நிலையில் தனுஷின் தங்கைக்கு கல்யாணம்  நிச்சயமாகியிருக்கும் சூழல்.. தனுஷின் காணாமல் போன அண்ணனான திரு தற்போது மும்பையில் இருப்பதாகவும், அவருக்கும், தனக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லி நாயகி லேகாவே போன் செய்து தனுஷை மும்பைக்கு அழைக்கிறார்.

தனுஷ் லேகாவுக்காக இல்லையென்றாலும் தனது அண்ணன் திருவைப் பார்க்க விரும்பியும் மும்பைக்கு ஓடோடி வருகிறார். வந்த இடத்தில் தனது அண்ணன் திரு என்னும் சசிகுமார் அண்டர் கிரவுண்ட் போலீஸ் ஆபீஸர் என்றாலும் இப்போது மிகப் பெரிய கேங் லீடராக மற்றவர்களுக்கு அறியப்பட்டவராகவும், அவரை போலீஸ்காரர்களிலேயே சிலரும், பிற கேங் குழுக்களும் கொலை செய்ய தேடி வருவதையும் அறிகிறார்.

அதே நேரம் லேகா பாலிவுட்டில் பெரிய நடிகையாக இருந்தாலும் இன்னமும் அவள் செந்திலிடம் அடிமை போல் இருப்பதை தெரிந்து கொள்கிறார் தனுஷ். இப்போது அண்ணனையும், லேகாவையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு வருகிறது. காப்பாற்றினாரா..? இல்லையா…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

2000-ம் ஆண்டுகளின் இளசுகளை கவரும்விதத்தில் காதலை காட்சிப்படுத்துவதில் சிறந்தவரான கவுதம், இந்தப் படத்திலும் அதையே முன்னிறுத்தியிருக்கிறார். கூடவே குடும்ப செண்டிமெண்ட், அண்ணன், தம்பி பாசம், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதை.. மும்பை டான்களின் கதை.. என்று அனைத்தையும் ஒன்று சேர்த்து கொடுத்திருப்பதால் இது என்ன மாதிரியான படம் என்பதைக் கணிக்கவே முடியவில்லை.

தனுஷுக்கு ‘அசுரனு’க்கு முந்தி வந்திருந்தால் சிறப்பாக வந்திருக்கும். பிந்தியதால் தனுஷின் தோற்றப் பொலிவு இதில் காமெடியாக இருக்கிறது. பிற படங்களின் காதலன் போல் இல்லாமல் கண்களாலேயே காதலை தெறிக்கவிடும் காட்சிகளில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. இதற்கு தனுஷும் சொற்ப அளவில் உதவியிருக்கிறார்.

இடைவேளைக்குப் பின்பு நாயக பிம்பத்தை வளர்த்தெடுப்பதுபோல ஆக்சன் காட்சிகளில் துள்ளி விளையாடுகிறார் தனுஷ். காதல் தோல்வியால் காதலிகளை மட்டுமே குறை சொல்லும் வழக்கமான ஹீரோவாகவும், காதலியின் கண்ணீர்க் கதையைக் கேட்டுவிட்டு “இப்படியிருக்கும்ன்னு நான் நினைக்கலியே..?” என்று உருகி சட்டென்று மனம் மாறும் காதலனாகவும் நடித்திருக்கிறார் தனுஷ்.

இடைவேளைக்கு முன்பு பல காட்சிகளில் காதலிக்கு வரைமுறையில்லாமல் முத்தத்தைக் கொடுத்தவர், இடைவேளைக்குப் பின்பும் அதே பாணியில் முத்தத்தை வாங்கிக் கொள்கிறார். ஆக மொத்தம்… அடுத்தத் தலைமுறையின் காதலர்களுக்கு இதுதான் காதல் என்று சொல்லிக் கொடுக்கவும் செய்துவிட்டார். இனி அவர்கள் பாடு..!

மேகா ஆகாஷூக்கு இது முதல் படமாக வந்திருக்க வேண்டியது. தவறிவிட்டது. சின்ன வயது  குழந்தைத்தனமான முகம். கண்களே ஆயிரம் கதைகளைப் பேசும் என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

செந்திலைப் பார்த்து பயப்படும் கதையை இவரே தன் வாயால் சொல்லியிருந்தால் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சாவது நமது மனதில் அமர்ந்திருக்கும். அது இல்லாமல் போனதால் இவர் மீதான சிம்பதி வரவேயில்லை. அழகாகவும், அமைதியாகவும் இருந்தாலே போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும்..!

திருவாக சசிகுமார். தன்னுடைய திரையுலக வரலாற்றிலேயே முதல்முறையாக சில, பல ஆங்கில வசனங்களை பேசியிருக்கிறார். இருந்தும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் ரசிகர்களுக்குத் தெளிவாகப் புரியாததால் குழப்பத்திலேயே ரசிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

வில்லன் குபேரனாக செந்தில் வீராசாமி. கதையில் உதவியும், படத்திற்கு வசனத்தையும் எழுதி படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் இவருக்கு நமது பாராட்டுக்கள். இவரது வில்லத்தனத்தைக் காட்ட இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியே போதுமானது.

பாலிவுட்-மாபியா கும்பல் தொடர்பு பற்றி பல திரைப்படங்கள் வந்துள்ள போதிலும் தமிழில் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறோம். இத்தனை செய்தும் இவருக்கும் வாய்ஸ் ஓவரில் கதை சொல்லி இவருடைய சேப்டரை புரியாமலேயே ஆக்கிவிட்டார் இயக்குநர்.

வேல.ராமமூர்த்தி தன்னுடைய திரைப்படங்களிலேயே இந்தப் படத்தில் நடித்திருப்பதை இனிமேல் வெளியில் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறோம். அந்த அளவுக்கு செட் பிராப்பர்ட்டீஸ் போல வந்து போயிருக்கிறார்.

இரண்டு ஒளிப்பதிவாளர்களான ஜோமோன் டி.ஜானும், மனோஜ் பரமஹம்சாவும் விளையாடியிருக்கிறார்கள். அத்தனை காட்சிகளும் லட்டு என்பதைப் போல படமாகியிருக்கிறது. கலர் கிரேடிங்கில்கூட குறைவு, அதிகமில்லாமல் ஒன்றுபோலவே கடைசிவரையிலும் காட்சியளிக்கிறது.

இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் பாடல்களில் ‘மறு வார்த்தை பேசாதே’, ‘விசிறி’ ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், இவைகளைவிடவும் பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்து வாய்ஸ் ஓவர் வசனங்களை ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இடம் கொடுத்து சிறப்பளித்திருக்கிறார் தர்புகா.

படத் தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனிதான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நான் லீனியர் முறையில் முன்னும், பின்னும் நகரும் திரைக்கதையில் சற்றும் குழப்பம் ஏற்படாத வண்ணம் காட்சிகளை கத்தரித்திருக்கிறார். இதற்கு உறுதுணையாக வாய்ஸ் ஓவரிலும் குழப்பமே இல்லாத வண்ணம் வசனங்களை பார்த்து, பார்த்து எழுதியிருக்கிறார்கள்.. பாராட்டுக்கள்.

தொழில் நுட்பம் இந்தப் படத்தில் சிறந்து விளங்கினாலும் படமாக்கலிலும், திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இயக்குநர் அழுத்தம் கொடுக்காமல் விட்டதினால் பலருக்கும் கதை சரிவரப் புரியவில்லை என்பதுதான் உண்மை.

படத்தின் மிகப் பெரிய மைனஸே படம் நெடுகிலும் இருக்கும் வாஸ்ய் ஓவர்தான். என்னதான் கவுதமுக்கு தன்னைப் பற்றி பெரிய எண்ணம் இருந்தாலும் ரசிகர்களையும் தாண்டி சாதாரண பொது ஜனங்களும் படம் பார்க்க வருகிறார்கள் என்பதையும் அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.

அவருடைய வாய்ஸுக்காகவே படம் ஓடிவிடும் என்றோ.. தன்னுடைய குரலுக்காகவே தனது ரசிகர்கள் ஏங்கித் தவிக்கிறார்கள் என்பது போலவும் படத்துக்குப் படம் தன்னை முன்னிலைப்படுத்துவது ஓவர் கான்பிடன்ஸ் மிஸ்டர் கவுதம்..!!!

இது போதாதென்று கண்ணில் படும் லாஜிக் எல்லை மீறல்களும் படம் பற்றிய பார்வையில் ஓட்டையைப் போட்டிருக்கின்றன. 2 முறை துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் சிறிதும் சோர்வடையாமல் சண்டைக்கு வாடா.. வாடா.. என்று எழுந்து வந்து, பாய்ந்து வந்து சண்டையிடும் தனுஷை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

மும்பை போலீஸ் ஹெட் ஆபீஸில் ஒரு அஸிஸ்டெண்ட் கமிஷனரின் அறைக்குள் நுழைந்து தேடும் தனுஷை அங்கே யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதெல்லாம் செம காமெடி. பொள்ளாச்சிக்கு தேடி வந்து மிரட்டும் செந்திலை பார்த்து வேல.ராமமூர்த்தி அடங்கிப் போவதுகூட திரைக்கதையின் வசதிக்காகத்தான் என்பது போலத்தான் தெரிகிறது.

திரு எங்கே என்ற கேள்விக்கு “அவருக்கு நிறைய வேலைம்மா.. வர முடியலை..” என்று சொல்லி தனுஷ் சமாளிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். இப்படி எத்தனை நாளைக்குச் சொல்லி அவர் சமாளிப்பாராம். படத்தின் மிகப் பெரிய பேக் டிராப்பே இந்தக் காட்சியில்தான் அடங்கியிருக்கிறது.

இயக்குநர் கதை, திரைக்கதையில் எல்லாவித சமரசத்தையும் செய்துவிட்டுத்தான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் என்றாலும் இதுபோன்று எழும் கேள்விகளை கேட்காமல் இருக்க முடியவில்லை.

காதலியை மீட்கும் கதையா.. அல்லது, அண்ணனை மீட்கும் கதையா என்னும் கருவில் ஏதாவது ஒன்றை மட்டும் மையமாக வைத்து திரைக்கதையை எழுதி, வாய்ஸ் ஓவரில் படத்தை நகர்த்தும் வேலையைவிட்டுவிட்டு காட்சிப் படிமங்களிலேயே கதையைச் சொல்லியிருந்தால் இப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..!

Our Score