ஒரு சினிமாவை பார்க்க வைக்க என்னவெல்லாம் செய்வார்கள் என்பதிலேயே படத்தின் தரத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இப்போது அதையும் தாண்டி, எங்களது படத்தைப் பாருங்கள்.. உங்களுக்கு அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்புத் தருகிறோம் என்கிறார்கள்.
வித்தியாசமான கேன்வாஸிங்கா இல்ல..?
இன்று வெளியான ‘என் நெஞ்சைத் தொட்டாயே’ என்கிற திரைப்படத்தின் விளம்பரம் இதைத்தான் சொல்கிறது.
சென்னையில் முக்கிய இடங்களில் பேனரில் எழுதி அதனை தொங்கவிட்டிருக்கிறார்கள். அந்தப் படமே இன்றைக்கு சென்னையில் 3 தியேட்டர்களில் காலை காட்சியாக மட்டுமே திரைக்கு வந்துள்ளது. அதற்கே இப்படியொரு விளம்பரம்..
அவர்களின் பட விளம்பரத்தில் சொல்லியிருப்பது இதுதான்..!
“என் நெஞ்சைத் தொட்டாயே’ படத்தினை திரையரங்கத்தில் பார்த்து, படம் பற்றிய விமர்சனத்தை எழுதி, அதனோடு படத்தின் ஐந்து டிக்கெட்டுகளின் ஒரு பகுதியையும், உங்களின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புவோருக்கு நடிகர் திரு.தனுஷ் துவக்கி வைக்கவிருக்கும் எங்களது அடுத்த படைப்பான ‘படித்தவன்’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகன், கதாநாயகி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுக்கப்படும்.
முகவரி
குரு சூர்யா மூவிஸ்
92/A-19, பி.வி.ராஜமன்னார் சாலை
கே.கே.நகர்
சென்னை-600 078.
website : gurusuryamovies.com
நடிக்க விருப்பமிருக்கும் கலைஞர்களே.. கம்பெனி தேடி நாயாய் அலைய வேண்டாம். என் நெஞ்சைத் தொட்டாயே திரைப்படத்தை நோக்கி ஓடுங்கள்.. 5 டிக்கெட்டுகளை வாங்குங்கள். படம் பார்ப்பதும், பார்க்காததும் உங்களது விருப்பம். இதில் சொல்லியபடியே அவர்களுக்கு அனுப்பி வாய்ப்புகளை கச்சிதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!
இது டகால்டு வேலையாக இருப்பின் அதற்கு இந்தக் கம்பெனி எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்பதையும் இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆமா.. இந்த விஷயம் ‘படிக்காத’ ஹீரோ தனுஷுக்கு தெரியுமா..?