சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் நவீன தொழில் நுட்பக் கலைகளில் பிரசித்தி பெற்ற நிறுவனம். அந்த நிறுவனத்தினர், மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய முழு நீள திரைப்படமாக உருவாக்கப் போகிறார்களாம்.
“1980-களில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடராகவும் அதற்கு பின்னர் புத்தகமாகவும் வெளிவந்து எல்லோரையும் கவர்ந்த ‘என் இனிய எந்திரா’ மற்றும் 1987-ல் அதே ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘மீண்டும் ஜீனோ’ தொடர் இரண்டுமே ரசிகர்கள் கண்டு களிக்கும்வகையில் திரைப்படமாக உருவெடுக்க இருக்கின்றன.
இந்தக் கதைகள் வெளி வந்த நேரத்தில், விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் என்பதை நமக்கு கண் முன் காட்டியது. விஞ்ஞான வளர்ச்சி பற்றிய விவரமான இந்த கதைகளை படமாக்க, விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமாக உள்ள இப்போதைய காலகட்டமே சிறந்தது” என்கிறார் பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியும், இப்படங்களின் இயக்குனருமான சித்தார்த்.
“Virtual graphics என்ற தொழில் நுட்பம் மூலம் நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்துவிட்டு, இடம்-பொருள் ஆகிய மற்ற விஷயங்களை தொழில் நுட்ப முறையில் ஒரு இடத்தில் இருந்தே படமாக்கும் இந்த முறையால் திரைப்படம் படைப்பது மிக எளிதான விஷயம்…” என்கிறார் சித்தார்த்.
‘என் இனிய இந்திரா’ திரைப்படம் மிக பிரமாண்டமாக நாற்பது கோடி ரூபாயில் தயாரிக்கப்படவுள்ளது. சென்னை தவிர, இங்கிலாந்தில் Pirates of the caribbean, Iron man 2, மற்றும் கோச்சடையான் படங்களின் Motion capture technology வல்லுனர்கள் இயங்கும் Centroid motion capture ஸ்டுடியோவிலும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.