எம்பிரான் – சினிமா விமர்சனம்

எம்பிரான் – சினிமா விமர்சனம்

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் நாயகனாக நடிகர் ரெஜித் நடித்திருக்கிறார். நாயகியாக கன்னட நடிகை ராதிகா ப்ரீத்தி அறிமுகமாகியுள்ளார். இவர்களோடு மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன், பி.சந்திரமவுலி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இசை – பிரசன்னா பாலா, ஒளிப்பதிவு – புகழேந்தி, படத் தொகுப்பு – மனோஜ், கலை இயக்கம் – மாயவன், சண்டை பயிற்சி – டான் அசோக், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, நடன இயக்கம் – தீனா மற்றும் விஜி.  இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிருஷ்ண பாண்டி தனது முதல் படமாக இயக்கியிருக்கிறார் .

எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்துவிட்டோம். ஆனால் இன்னமும் சொல்லப்படாத காதல் கதைகளும் இருக்கின்றன என்பதைப் போல வந்திருக்கிறது இத்திரைப்படம்.

இது ஒரு தலைக்காதல். அதிலும் ஒரு திருத்தம். எப்போதும் தங்களது காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக காதலன்கள்தான் காதலிகள் பின்பாக அலையோ அலை என்று அலைவார்கள். இதில் கொஞ்சம் வித்தியாசமாக காதலி, ஒரு தலையாய் காதலன் பின்பு அலைந்து திரிகிறார்.

நாயகன் ரெஜித் ஒரு மருத்துவர். வீட்டில் அம்மா மட்டுமே. நாயகி ராதிகா தனது தாத்தா மெளலியின் பாதுகாப்பில் வாழ்கிறார். மெளலி ஒரு கோவிலில் பூசாரியாக இருக்கிறார்.

ஒரு இடத்தில் ரெஜித்தை பார்த்த ராதிகா, அவர் யார் என்று தெரியாமலேயே அவரை மனதுக்குள் காதலிக்கத் துவங்குகிறார். பின்பு ரெஜித்தை பின் தொடர்ந்து அவர் ஒரு மருத்துவர்.. அவரது மருத்துவமனை.. அவரது அம்மா யார் என்பதையெல்லாம் கண்டறிகிறார்.

ரெஜித்திற்கு பெண் பார்க்கும் படலத்தைத் துவக்குகிறார் அவரது தாயார். அதுவும் மெளலியின் சேவகம் செய்யும் கோவிலுக்கே வந்து பூஜையுடன் தனது முதல் பெண் தேடும் படலத்தைத் துவக்குகிறார் ரெஜித்தின் அம்மா.

இதற்கிடையில் நாயகியும் ரெஜித்திடம் தனது காதலைச் சொல்வதற்காக முயல்கிறார். ஆனால் அது முடியாமல் போகிறது. இந்தக் காதல் நாயகியை சவலைப் பிள்ளையாக்க.. பேத்தியின் நிலை கண்டு தாத்தாவுக்கு மன வருத்தமாகிறது.

தாத்தா துருவித் துருவிக் காரணம் கேட்டவுடன் பொய்யில்லாமல் உண்மையைச் சொல்லிவிடுகிறார் நாயகி. நாயகனும், அவரது அம்மாவும் தினமும் தான் பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு வருபவர்கள் என்பதால் நாயகனின் அம்மாவிடம் தான் பேசுவதாக வாக்குறுதி அளிக்கிறார் தாத்தா மெளலி.

இடையில் திடீரென்று நாயகிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. இதற்காக நாயகியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார் தாத்தா. செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட இதில் தாத்தா இறந்து போகிறார். நாயகி உயிர் பிழைத்தாலும் கோமா ஸ்டேஜில் நாயகன் வேலை பார்க்கும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இதற்கடுத்த நாளில் இருந்து நாயகனின் தூக்கத்தில் ஒரு தொந்தரவாக கனவு ஒன்று ஊடுறுவுகிறது. அந்தக் கனவில் ஒரு விபத்து, ஒரு மருத்துவமனை, ஒரு பெண் என்று மாறி, மாறி வந்து அவரைத் தொந்தரவு செய்கிறது. அந்தக் கனவைத் துரத்த முயன்று தோற்றுப் போன நாயகன், அந்தக் கனவுக்குள் ஊடுறுவ நினைக்கிறார்.

கொஞ்சம் முயன்று பார்த்த பின்பு நாயகி பற்றிய அடையாளங்கள் நாயகனுக்குத் தெரிய வருகிறது. தான் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே இருக்கும் நாயகியை அடையாளம் கண்டு கொள்கிறார் நாயகன். உண்மையான காதலோடு, கோமா ஸ்டேஜில் இருக்கும் நாயகியை உயிர்ப்பிக்க வைக்கவும் முயல்கிறார் மருத்துவரான நாயகன்.

இந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா..? கடைசியில் நாயகியின் நிலை என்னவாகிறது..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகன் ரெஜித் ஏற்கெனவே இயக்குநர் விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் அறிமுகமானவர்.  பேசும்விதத்தில் கொஞ்சம் மலையாள வாசனை அடித்தாலும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம். மருத்துவர் வேடத்துக்குப் பொருத்தமானவர் என்றாலும், நடிப்பை வரவழைக்கவும், நடிக்க வைக்கவும் திரைக்கதையில் காட்சிகளே இல்லை என்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை. வருகின்ற காட்சிகளில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

நாயகியான கன்னட நடிகை ராதிகா ப்ரீத்தி அழகாக இருப்பதாலேயே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் போலும். அனைத்து காட்சிகளிலும் ஒரேமாதிரியான முக பாவத்தையே காட்டியிருக்கிறார். இயக்குதல் சரியில்லாமல் இருப்பதால் இவரை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.

ஏதோ கொஞ்சம் நடித்திருப்பவர்கள் நாயகனின் அம்மாவான கல்யாணியும், நாயகியின் தாத்தாவா மெளலியும்தான். மெளலிக்கு நாடக அனுபவம் கை கொடுக்க ஏற்ற, இறக்க வசன உச்சரிப்புடன் ஒரு அன்பா தாத்தாவை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். கல்யாணியும் அப்படியே..!

இசையமைப்பாளர் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருப்பதே பெரிய விஷயம். ஆனால் இசை கவரவில்லை. ஒளிப்பதிவாளர் புகழேந்தியின் ஒளிப்பதிவுதான் படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.  மிகக் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அளவுக்கு தனது பணியைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.

படத்தில் மொத்தமே 5 பிரதான கதாபாத்திரங்கள்தான் என்பதால் திரைக்கதை அங்கே, இங்கே என்று போகாமல் கனவுலகத்துக்குள்ளேயே சுற்றிவிட்டது.

இருந்த திரைக்கதையிலும் ஆங்காங்கே ஓட்டை, விரிசல்கள். பொதுவாக ஆண்கள்தான் பெண்கள் பின்னாலேயே அலைந்து, திரிந்து காதலை வளர்க்க பெரும்பாடு படுவார்கள். இதில் வித்தியாசமாக நாயகி நாயகனின் பின்னாலேயே அலைந்து திரிவதெல்லாம் புதுமைதான். ஆனால் அதில் ஒரு சுவாரஸ்யமோ, ஈர்ப்போ இல்லையே..

மருத்துவரான நாயகனைப் பார்க்க வேண்டி தனக்கு ஏதாவது காயத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் நாயகி, கத்தியை வைத்து சீன் காட்டும் காட்சியையே 10 நிமிடங்களுக்கு மேல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லீங்களா இயக்குநரே..?

இதோடு கோமா நிலையில் இருக்கும் ஹீரோயினை கடத்திச் செல்லும் திரைக்கதையெல்லாம் இந்தக் கதைக்குத் தேவையில்லாதது. நேரம்தான் வீணானது. இப்படி திரைக்கதையில் பல திசை தெரியாத முட்டல்களும் உள்ளன.

ஒரு ஆத்மா கனவில் வந்து தொந்திரவு செய்து காதலை சேர்த்து வைக்கும் ஒரு வித்தியாசமான காதல் கதைக்கு, இந்தத் திரைக்கதை போதவில்லை.  இன்னமும் அழுத்தமான காட்சிகளும், திரைக்கதையும், நடிப்பும் தேவையாய் இருக்கிறது. அதனை இயக்குநர் திரையில் கொண்டு வர தவறிவிட்டார்.

இந்த ‘எம்பிரான்’ அதிகம் கவரவில்லை..!

Our Score