full screen background image

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – சினிமா விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – சினிமா விமர்சனம்

இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.திருமலை இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் அசோக்செல்வன் நாயகனாகவும், அவந்திகா மிஸ்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஊர்வசி, அழகம்பெருமாள், படவா கோபி, சோனியா போஸ், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைநிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவுகணேஷ் சந்திரா, படத்தொகுப்புஜெரோம் அலன், கலை இயக்கம்எஸ்.ஜெயச்சந்திரன், பத்திரிக்கை தொடர்புடீம் எய்ம், எழுத்து, இயக்கம்பாலாஜி கேசவன்.

ஊர்வசி, அழகம் பெருமாள் தம்பதியினரின் ஒரே மகனான அசோக்செல்வன் சென்னையில் இருக்கும் தனது அக்காள் சோனியா போஸின் வீட்டில் ங்கியிருந்தபடியே சினிமாவில் உதவி இயக்குநர் வேலை செய்து வருகிறார்.

அசோக்செல்வன் தற்போது திரைப்பட இயக்குநரான பாலாஜி தரணிதரனிடம் உதவி இயக்குநராக இருக்கிறார். பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் காண்டாமிருகம்என்ற படம் தற்போது வெளியாகி அட்டர் பிளாப் ஆகியுள்ளது.

இந்த நேரத்தில் அசோக் செல்வன் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்யும் அவந்திகா மிஸ்ராவை பார்த்தவுடன் மதி மயங்கி, காதலிக்கிறார். அவந்திகாவும் அசோக்செல்வனின் நேரடி காதல் அப்ரோச்சை பார்த்து சித்தம் கலங்கிப் போய் டெல்லிக்குப்போய் வேலை செய்ய வேண்டிய சிச்சுவேஷனைக்கூட கேன்சல் செய்துவிட்டு அசோக்செல்வனைக் காதலிக்கத் துவங்குகிறார்.

இந்த நேரத்தில் அசோக் செல்வனின் பெண் நண்பியின் அபார்ஷனுக்கு அசோக் செல்வன் உதவி செய்யப்போய் இந்தக் குழப்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் காதலர்கள் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.

ஆனாலும் அந்த நண்பியே நேரில் வந்து விளக்கம் சொல்லிய பிறகு காதலர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். அசோக்செல்வனின் தங்கை திருமணத்திற்காக கிராமத்துக்குச் சென்ற நேரத்திலும் அங்கேயும் ஒரு குழப்பம் ஏற்பட்டு மீண்டும் காதலர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது.

இறுதியில் அசோக் செல்வன் மீண்டும் தன் காதலி அவந்திகா மிஸ்ராவுடன் இணைந்தாரா?.. இல்லையா?.. என்பதை சொல்லும் படம்தான் இந்த எமக்குத் தொழில் ரொமான்ஸ்திரைப்படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன் காதல் நாயகனாக, இளமை துள்ளும் நடிப்பில் தனது கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார். படிக்கும் வயதிலிருந்தே ரொமான்ஸ் ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார் என்பதை அவரது அம்மா எடுத்துவிடும்போது தவியாய் தவிக்கும் நடிப்பில் நம்மையும் சிரிக்க வைக்கிறார்.

காதலியுடன் ஊடல், கூடல், அம்மாவிடம் செல்லம், அப்பாவிடம் கோபம், நண்பர்களுடன் கேலி, கிண்டல் என்று படம் நெடுகிலும் இன்றைய 2கே அடல்ட் கிட்ஸ்களின் அல்லக்கையாகவே தோன்றியிருக்கிறார் அசோக்செல்வன்.

நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ராவின் அழகு முகம் பார்க்கப் பார்க்கப் பிடிக்கிறது. சைவமாகவே பாடல் காட்சிகளில் நடித்திருப்பதால் இன்னும் கொஞ்சம் பிடித்துப் போகிறது. டப்பிங் வாய்ஸ் என்றாலும் சிறிதும் பிசிறு தட்டாதவகையில் உதட்டசைவில் சேர்த்திருக்கிறார்கள்.  

அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி தனது வழக்கமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். மகனை கணவரிடமிருந்து காப்பாற்ற வேண்டி, அவ்வப்போது நெஞ்சி வலி வந்திருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் படுத்து டிராமா போடுவது செம காமெடிதான். கிளைமாக்ஸில் எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து செமத்தியாக காமெடி செய்து அந்தக் காட்சியை அதகளம் செய்துள்ளார் ஊர்வசி.

வழக்கமான அப்பாவாக அழகம் பெருமாள், மாமாவாக இருந்தாலும் நண்பனைப் போல நடந்து கொள்ளும் படவா கோபி, கண்டிப்பான அக்காவாக வரும் சோனியா, கிளைமாக்ஸில் டாக்டராக நடித்து வயிற்றைப் பதம் பார்த்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். 

அவ்வப்போது வில்லங்கம் செய்து வைக்கும் பகவதி பெருமாளும், அவரது மனைவியும், அசோக் செல்வனின் நண்பியும்கூட காமெடி செய்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இனிமையான இசையைக் கொடுத்திருக்கும் நிவாஸ் கே.பிரசன்னா பின்னணி இசையில் மட்டும் அடக்கி ஆண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்தை மிகப் பெரிய பட்ஜெட் படமோ என்று கேட்க வைத்திருக்கிறது.

காதலர்களுக்குள் ஏற்படும் புரிதல் இல்லாத பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதி நகைச்சுவையில் தலை தெறிக்க ஓடுகிறது. இதுவே படத்தை நகைச்சுவை படம் என்று சொல்லவும் வைத்திருக்கிறது.

கதையுடன் காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வகையில் நகைச்சுவையாக, ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இதைக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். அவருக்கு நமது பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

குடும்பத்துடன் பார்த்து சிரிக்கலாம்..!

RATING : 3.5 / 5

 

Our Score