‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ.ஆர்.என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ‘லெவன்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்‘ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி‘ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி‘ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்‘ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கான இசையை டி.இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத் தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி–யிடம் ‘கலகலப்பு 2′, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, மற்றும் ‘ஆக்ஷன்‘ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்தப் புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரெண்டான சஸ்பென்ஸ், திரில்லர் வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
அரவிந்தன் என்ற நவீன் சந்திரா சென்னையில் போலீஸ் துணை கமிஷனராக வேலை செய்து வருகிறார். அந்த நேரத்தில் சென்னையில் தொடர்ச்சியாக சில கொலைகள் நடைபெறுகின்றன. இந்தக் கொலைகள் அனைத்துமே ஒரே மாதிரியான கொலைகளாக இருக்கின்றன.
ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் கொலை செய்து உடல்களை எரித்து வைத்திருக்கிறார்கள். இந்தத் தொடர் கொலைகளை விசாரித்து வரும் இன்னொரு துறை கமிஷனர் திடீரென்று ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் கோமாவில் மூழ்கி போகிறார்.
இதனால் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கிறார் கமிஷனர் ஆடுகளம் நரேன்.
வழக்கை விசாரிக்கத் துவங்கும் நவீன் சந்திராவுக்கு எந்த ஒரு துப்பும் முதலில் கிடைக்கவில்லை. பின்பு விசாரிக்க, விசாரிக்க மேலும் குழப்பம்தான் வருகிறதே ஒழிய… தீர்வு காண வழி கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில்தான் அடுத்து நடக்கும் ஒரு கொலையில் உடலில் நரம்பியல் பிரச்சனைக்காக வைக்கப்படும் பிளேட் ஒன்று கிடைக்கிறது. அந்த பிளேட்டை துருப்பிச் சீட்டாக வைத்து நவீன் சந்திரா அந்த வழக்கை தீவிரமாகத் துப்பு துலக்குகிறார்.
நவீன் சந்திரா இந்த வழக்கை விசாரித்து முடித்தாரா..? இந்த படுகொலைகளை செய்தது யார்? இதை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா? ஏன் இந்த படுகொலைகள் நடந்தன..? என்பதற்கெல்லாம் விடைதான் இந்தப் படத்தின் திரில்லர் பாணியிலான திரைக்கதை.
படத்தின் மையக் கருவை வெளியில் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரசியம் சுத்தமாக இருக்காது. அதனால் எதனால் கொலை… அதற்கான பின்னணி என்ன… என்பதை சொல்லவே முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையை மிக நேர்த்தியாக வைத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.
நாயகனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா ஏற்கனவே தெலுங்கில் பல படங்களில் நாயகனாக நடித்தவர். தமிழிலும் பல வெப் சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடித்தவர். இவர் ஹீரோவாக நடித்து தமிழில் வந்திருக்கும் முதல் படம் இது.
ஒரு துடிப்பான போலீஸ் அதிகாரி என்கின்ற தோரணையில் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் ஒரு மிடுக்கான தோற்றத்திலேயே படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். கடைசிவரையிலும் வில்லன் யார் என்பது நம்மிடம் சொல்லாமலேயே கதையை நகர்த்தும்விதமாக இவர் நடித்திருக்கும் நடிப்புதான் படத்தில் மிகப் பெரிய பலம்.
பெஞ்சமின், பிரான்சிஸாக நடித்திருக்கும் அந்த இரட்டையர்களை மனதாரப் பாராட்ட வேண்டும். அவர்களுடைய அற்புதமான, இயல்பான நடிப்புதான் படத்தை முழுமையாக நம்மை ஏற்க வைத்திருக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..!
அபிராமி, ஒரு அழகான ஆசிரியையாக, அன்பான அம்மாவாக… இப்படி ஒரு ஆசிரியை நமக்கு கிடைக்க மாட்டார்களா என்பதுபோல தன்னுடைய நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
நவீன் சந்திராவின் விசாரணை குழுவில் இருக்கும் திலீபன் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார்.
தாராவாக நடித்திருக்கும் ரித்விகா, சஞ்சனாவாக நடித்திருக்கும் ரியா ஹரி தீரனாக நடித்திருப்பவர், கமிஷனராக நடித்த ஆடுகளம் நரேன் என்று பலருமே சிறப்பான இயக்கத்தினால், சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
படம் மிக அதிகமான காட்சிகளில் இரவு நேரத்தில் மட்டுமே படமாக்கப்பட்டிருப்பதால் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு தரமானதாகவே உள்ளது. பல இடங்களில் சஸ்பென்ஸ், திரில்லரை பதிவாக்கும்விதமாக கேமரா கோணங்களிலும், கேமராவை பயன்படுத்தியவிதத்திலும் ஒளிப்பதிவாளர் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய தூணாக இருந்திருக்கிறார்.
டி.இமானின் பின்னணி இசை அபாரம். பல இடங்களில் இது ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் என்பதை சொல்லாமலேயே சொல்ல வைத்திருக்கிறது அவரின் பின்னணி இசை.
சஸ்பென்ஸ், திரில்லர் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை நமக்கு மிக எளிதாக புரியும் வகையிலும் எடிட்டிங் செய்து கொடுத்திருக்கிறார் பட தொகுப்பாளர் ஸ்ரீகாந்த். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
ஒரு சின்ன சத்தம்கூட படத்தை தன்மையை மாற்றி விடும் அபாயம் இருப்பதால் சவுண்ட் டிசைனர் மிக கச்சிதமாக வடிவமைத்து ஒவ்வொரு சவுண்டையும் உற்று கவனித்து ஒலியை கொடுத்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத்தின் முடிவில் நமக்கு தோன்றுவது எதிர்பாராத ஒரு டிவிஸ்ட். நிச்சயம் இப்படி இருக்காது என்று நாம் யோசிக்காத வண்ணம் திரைக்கதையை அவ்வளவு அழகாக எழுதி நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
போரடிக்காமல் கடைசிவரையில் கொண்டு சென்று, ஸ்கிரீனை விட்டு கண்களை அகல விடாமல் செய்துவிட்டாலே அந்த படம் நிச்சயம் ஒரு தரமான படம் என்று சொல்லலாம். அந்த வகையில் இந்த லெவன் திரைப்படம் நிச்சயம் ஒரு தரமான சஸ்பென்ஸ், திரில்லர் படம்தான்.
அவசியம் தியேட்டரில் பார்க்கலாம்.
RATING : 3.5 / 5









