சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் தியேட்டர் வசூல் விபரம் வெளியானது..!

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் தியேட்டர் வசூல் விபரம் வெளியானது..!

நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன்’ படத்தின் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’. இந்தப் படத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை மாதவ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி காபா தயாரித்திருந்தார்.

திரு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத் தொகுப்பு செய்திருந்தார். எஸ்.தமன் இசையமைத்திருந்தார். இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருந்தார்.

இந்தப் படம் கடந்த ஜனவரி 14-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் வெளியானது. மேலும் அதே நாளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

படம் வெளியானபோது கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தயாரிப்பாளரைத் திருப்திபடுத்தும் அளவுக்கு வசூல் கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தற்போது அந்தப் படத்தின் உண்மையான வசூல் விபரத்தினை, பிரபல விநியோகஸ்தரான சிங்காரவேலன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி படத்தைத் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தருக்குக் கிடைத்த பங்குத் தொகை இவ்வளவுதான் :

கோயம்புத்தூர் பகுதி ஷேராக 61,65,229 ரூபாயும்,

மதுரை பகுதியின் ஷேராக 70,27,196 ரூபாயும்,

சேலம் பகுதி ஷேராக 41,94,150 ரூபாயும்,

திருச்சி பகுதி ஷேராக 58,22,964 ரூபாயும்,

தென்னாற்காடு-வட ஆற்காடு மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து 87,45,550 ரூபாயும் தியேட்டர் வசூலாகக் கிடைத்துள்ளது.

இதன் மொத்த மதிப்பு : 3 கோடியே 19 லட்சத்து, 55 ஆயிரத்து 89 ரூபாய்.

இதில் படத்தின் வெளியீட்டுச் செலவான 77 லட்சத்து 57 ஆயிரத்து 409 ரூபாயைக் கழித்துக் கொண்டு பார்த்தால் விநியோகஸ்தருக்கு இந்தப் படத்தின் தியேட்டர் வசூல் மூலமாகக் கிடைத்த மொத்தத் தொகை 2 கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 480 ரூபாய்.

ஆனால், விநியோகஸ்தருக்கு தயாரிப்பாளர் இந்தப் படத்தை விற்ற தொகை 4 கோடியே 10 லட்சம் ரூபாய்.

இதனால் விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட நஷ்டத் தொகை 1 கோடியே 68 லட்சத்து 2 ஆயிரத்து 320 ரூபாயாகும்.

ஆக இந்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்தாலும், விநியோகஸ்தருக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கிறது.

Our Score