இந்தப் படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி, ஆசிஷ் வித்யார்த்தி, பிரவீணா, கும்கி அஷ்வின், காளி வெங்கட், ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘தடம்’, ‘தூள்’, ‘கில்லி’ படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை – ஜான் பீட்டர், படத் தொகுப்பு – சுதர்ஷன், கலை இயக்கம் – மைக்கேல் ராஜ், நடன இயக்கம் – ராதிகா, சாந்தி, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, ஒப்பனை – ராமச்சந்திரன், ஆடை வடிவமைப்பு – பாரதி, பாடல்கள் – ஏக்நாத், மக்கள் தொடர்பு – செல்வா, எழுத்து, இயக்கம் – நவீன் கணேஷ்.
சென்னையில் ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த். இந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகளான பூஜா ஜாவேரிக்கும், ஸ்ரீகாந்துக்கும் இடையில் காதல் பிறக்கிறது.
இந்த நேரத்தில் தனது அம்மா பிரவீணாவுடன் சொந்த ஊருக்குப் பயணமாகிறார் ஸ்ரீகாந்த். போன இடத்தில் பிரவீணாவின் காதல் திருமணத்தால் அந்த ஊரே இரண்டாகப் பிரிந்து.. ஊர்க் கோவில்கூட இன்னமும் கட்டி முடிக்கப்படாமல் இருப்பது தெரிகிறது. இதனால் ஊர்க்காரர்கள் பிரவீணாவைத் திட்டுகிறார்கள்.
மனமுடைந்து போன பிரவீணா அதே ஊரில் வாழ்ந்து வரும் தனது சொந்த அண்ணன் மகளான வித்யா பிரதீப்பை ஸ்ரீகாந்துக்கு அங்கேயே வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார். கையோடு சென்னைக்கு அழைத்து வந்து தம்பதிகளுக்குத் தனிக்குடித்தனமும் வைத்துக் கொடுக்கிறார் பிரவீணா.
வித்யா பிரதீப் பேய், பிசாசு என்றாலே பயப்படுகிறார். இந்தச் சூழலில் அந்த வீட்டில் ஏதோ ஒரு சக்தி உடன் இருப்பதாக வித்யாவுக்கு சந்தேகம் வருகிறது. பயந்த குணம் கொண்ட வித்யா பிரதீப்பை மேலும், மேலும் பயப்படுத்தும் அளவுக்கு அமானுஷ்ய வேலைகளும், சித்து வேலைகளும் அந்த வீட்டில் நடக்கின்றன. இது எல்லை மீறிப் போக, வித்யா பிரதீப் ஒரு நாள் தற்கொலை செய்து இறந்து போகிறார்.
சில காலம் கழித்து ஸ்ரீகாந்த் தனது பழைய காதலியான பூஜா ஜாவேரியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு வித்யா பிரதீப் அனுபவித்த அதே மாதிரியான அமானுஷயங்களை அந்த வீட்டில் உணர்கிறார்.
ஸ்ரீகாந்தின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாமல் பூஜா ஜாவேரி அவரைவிட்டு விலகிப் போக.. வீட்டில் பேயின் ஆட்டம் அதிகரிக்கிறது. இதை அடக்க ஆஷீஷ் வித்யார்த்தி என்ற பிரபலமான பேய் ஓட்டும் நிபுணரை அணுகுகிறார் ஸ்ரீகாந்த்.
அவரும் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு மிகப் பெரிய ரகசியம் ஒன்றைக் கண்டறிகிறார். அது என்ன என்பதும்.. கடைசியில் ஸ்ரீகாந்தின் பேய் பிரச்சினை தீர்ந்ததா..? பூஜா ஜாவேரி திரும்ப வந்தாரா..? வித்யா பிரதீப்பின் தற்கொலைக்குக் காரணம் என்ன..? என்பதெல்லாம் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
வித்யா பிரதீப்புக்கு இந்தப் படம் மிகப் பெரிய அடையாளமாக இருக்கப் போகிறது. அவரது அழகான உருண்டை கண்களே மிகப் பெரிய நடிப்பைக் காண்பித்திருக்கின்றன. பேயை கண்டும், அமானுஷ்யத்தைக் கண்டும் பயந்து, நடுங்கும் காட்சிகளில் நடிப்பைக் கொட்டியிருக்கிறார் வித்யா பிரதீப்.
இவருக்கு நேரெதிராக இன்னொரு நாயகியான பூஜா ஜாவேரி ஒரு பாடல் காட்சியில் கிளாமரை அள்ளித் தெளித்திருக்கிறார். பேயோட்டும் ஆஷிஷ் வித்யார்த்தி கம்பீரமாக சிறிது நேரமே வந்தாலும், ஸ்ரீகாந்தை ஓட்டி கதையை நகர்த்த உதவியிருக்கிறார்.
இவர்களிடையே நாயகன் ஸ்ரீகாந்தும் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்து நானே இந்தப் படத்தின் நாயகன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். பிரவீணா அழகான அம்மாவாகவும், டெல்லி கணேஷ் பாசமான பெரியப்பாவாகவும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் தன் திறமைகளை ஒளிவு, மறைவில்லாமல் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார். பேய்களின் அட்டகாசம், அமானுஷ்ய சக்தியின் ஆட்டம், பயப்பட வைக்கும் காட்சிகள் என்று அனைத்திலும் கோபிநாத்தின் ஒளிப்பதிவுதான் படத்தைப் பெரிதும் தாங்கிப் பிடித்திருக்கிறது.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் பின்னணி இசையில் காதைக் கிழித்திருக்கிறார்கள். கலை இயக்குநர் ஆஷிஷ் வித்யார்த்தியின் வீட்டை அழகாக, வித்தியாசமாகக் காட்டி ஒரு கவன ஈர்ப்பை செய்திருக்கிறார்.
மிரட்டலாக பேயின் மிரட்டலைக் காட்டியிருக்கிறார் சண்டை இயக்குநர். படத் தொகுப்பாளரின் பணியில் சற்று மந்தம். பல இடங்களில் டப்பிங் வாய்ஸ் சின்க் ஆகவில்லை. இதையெல்லாம் எப்படி படத் தொகுப்பாளர் அனுமதித்தார் என்றே தெரியவில்லை.
படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது பாதி படத்திலேயே நமக்குத் தெரிந்துவிட்டது. அப்புறம் எப்படி படத்தின் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருக்கும்..?
வித்யா பிரதீப்பின் சாவில் ஸ்ரீகாந்துக்கு இருக்கும் பங்களிப்பு கதையை, சாதாரணமாக ஓப்பன் செய்வதால் நம் மனதில் அது குறித்த எந்த எபெக்ட்டும் எழவில்லை. இதனாலேயே ஸ்ரீகாந்த் செத்தால் சாவட்டும் என்பதாகவே நாம் நினைக்க.. படமும் அதுபோலவே முடிந்துவிட்டது..!
எக்கோ – எதிரொலிக்க மறந்துவிட்டது..!
RATING : 2 / 5









