full screen background image

DSP- சினிமா விமர்சனம்

DSP- சினிமா விமர்சனம்

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ’96’ படத்தில் திரிஷா ஒரு காட்சியில் விஜய் சேதுபதியிடம் போனில் கேட்பார், “தூரமா போயிட்டியா ராம்?” என்று..! உடனே விஜய் சேதுபதி உருக்கமாக, “நீ விட்ட இடத்திலதான் நிற்கிறேன்” என்பார்.

இந்த வசனத்தை சற்று மாற்றிப் போடுவோம்.. இயக்குநர் பொன்ராமிடம் விஜய் சேதுபதி கேட்டிருக்க கூடும், “கதையில புதுசா எதுனா இருக்கா?” என்று..! உடனே பொன்ராம், “பழசையே புதுசா ஏத்துக்கிற பக்குவம் ரசிகனுக்கு இருக்கு” என்று சொல்லிருக்கலாம். உடனே வி.சே.-யும் “ஓகே டூட் டூ இட்” என்றிருப்பார் போல.!!!

இந்த ‘DSP’ படத்தைப் பார்க்கும்போது இப்படியான விசயங்கள்தான் நம் மனதில் தோன்றுகின்றன.

சரி அப்படி என்ன கதை..?

திண்டுக்கல்லில் குடியிருக்கும் விஜய் சேதுபதி வீட்டிற்கு செல்லப் பிள்ளை. நண்பர்களோடு சரக்கு, அவ்வப்போது ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கும் நாயகியோடு லவ்ஸ் என திரிபவர்.

அதே ஊரில் ஒரு டெரர் வில்லன். அவர் அரசியல்வாதிகளின் தொடர்பால் கட்டப் பஞ்சாயத்து உள்பட எல்லாக் கெட்டதுகளையும் செய்கிறார். தமிழ் சினிமாவின் பழைய பஞ்சாங்கப்படி ஹீரோ குடும்பத்தை வில்லன் சீண்டுகிறார். அதற்கான சூழல் கதையில் வருகிறது. உடனே விஜய் சேதுபதி ஆக்சன் காட்டுகிறார். அது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கிறது. அதனால் விஜய் சேதுபதி ஊரைவிட்டு சென்னைக்குச் செல்கிறார்.

அங்கு கடும் பயிற்சி செய்து போலீஸ் DSP-ஆக மாறி அதே திண்டுக்கல்லுக்கு வில்லனை குண்டுக் கல்லில் போட்டு உதைக்க வருகிறார்.

அப்புறம் என்ன? DSP vs வில்லன்தான். வி.சே. வில்லன் கதையை எப்படி முடிக்கிறார் என்பதே மீதி வதை.. Sorry கதை..

விஜய் சேதுபதி துளியும் ஆர்வத்தைக் காட்டாமல் ஏனோதானோவென நடித்துள்ளார். சேதுபதி என்ற படத்தில் போலீஸ் கேரக்டருக்கு ஏற்றாப்போல் உடலையும், நடிப்பையும் நன்றாக கொடுத்த விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் எந்தச் சிரத்தையும் எடுக்கவில்லை.

ஹீரோயின் படத்தோடு ஒட்டவே இல்லை. புகழ், சிங்கம் புலி இருவரும் அவர்களே காமெடி செய்து அவர்களே சிரித்துக் கொள்கிறார்கள்.

இமான் இசையில், “நல்லா இரும்மா ரொம்ப நல்லா இரும்மா” என்ற பாடல் மட்டுமே வொர்த்து. அந்தப் பாடலுக்கான காட்சியமைப்பும் சிறப்பு. ஆனால் அதே நேரம், பின்னணி இசை என்ற பெயரில் இமான் செய்திருப்பது வன்கொடுமை. நம் காதுகளை கிழியோ கிழி என கிழிக்கிறது பேக்ரவுண்ட் ஸ்கோர்! ஒளிப்பதிவிலும், படத் தொகுப்பிலும் போதிய வீரியம் இல்லை.

ஒரு நல்ல திரைக்கதை, அதற்கான நல்ல காட்சிகளே அதுவே எடுத்துக் கொள்ளும் என்று சினிமா ஆர்வலர்கள் சொல்வார்கள். இந்த ‘DSP’ படத்தில் திரைக்கதை படு வீக்காக இருப்பதால் நல்ல காட்சிகளுக்கு ஏகப்பட்ட பஞ்சம் இருக்கிறது.

விஜய் சேதுபதி போன்ற பெரிய ஹீரோ கிடைத்தும், ஒரு நல்ல ஆக்‌ஷன் ட்ராமா படத்தை கொடுக்கத் தவறிவிட்டார் இயக்குநர் பொன்ராம்.

RATING : 2 / 5

Our Score