full screen background image

டிராகன் – சினிமா விமர்சனம்

டிராகன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோகர், இந்துமதி, மரியம் ஜார்ஜ், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிக்கும் இது ஏ.ஜி.எஸ். என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26-வது படைப்பாகும். இந்தப் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆவார். இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஷ்வர்யா கல்பாத்தி பங்காற்றுகிறார்.

லியோன் ஜேம்ஸ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், பிரதீப் ஈ. ராகவ் படத் தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது. நிர்வாக தயாரிப்பாளர்: எஸ்.எம். வெங்கட் மாணிக்கம், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தை ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

லவ் டுடே என்ற ஒரே ஒரு படத்தின் மூலமாக திடீரென்று தமிழ் ரசிகர்களின் மத்தியில் ஹீரோவாக பிரபலமான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

இன்றைய 2.கே கிட்ஸ்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஒரு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஓ மை கடவுளே படத்தின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து.

டி.ராகவன் என்ற இயற்பெயர் கொண்ட ஹீரோ பிரதீப், பள்ளியில் முதல் மாணவனாக வந்தவர். பிளஸ் டூவில் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராக வந்தவர். அவருடைய கெட்ட நேரம்.. பரிசாக கழுத்தில் விழுந்த தங்கச் சங்கிலியுடன் தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணிடம் வந்து தான் அவளைக் காதலிப்பதாக சொல்கிறார்.

ஆனால் அந்த மாணவியோ ஒரு ரவுடியை அடையாளம் காட்டி “எனக்கு அவனைப் போன்றவர்களை மட்டுமே பிடிக்கும். அதனால் அவனைத்தான் காதலிக்கிறேன். நீ எனக்கு வெறும் நண்பன் மட்டும்தான்..” என்று சொல்லி உதாசீனப்படுத்துகிறார்.

இதைக் கேட்டவுடன் பிரதீப்பின் மனமும், குணமும் ஒரே நிமிடத்தில் மாறுகிறது. பெண்களுக்கு ரௌடியாக இருந்தால் மட்டும்தான் பிடிக்கும் போலிருக்கிறது என்று நினைப்பவ கல்லூரி படிப்பில் ரௌடியாக மாறுவதாக உறுதி கொள்கிறார்.

சொன்னது போலவே வேலூரில் இருக்கும் ஏ.சி.எஸ். கல்லூரியில் பி.டெக். மாணவராக சேர்கிறார் பிரதீப். இப்பொழுது அவருடைய பெயர் டி.ராகவன் அல்ல. அதில் சில மாற்றங்களை செய்து டிராகன் என்று ஒரு பெயரெடுத்து கல்லூரியில் மிகவும் ஃபேமஸான ரவுடியாக வலம்  இருக்கிறார். கடைசி ஆண்டில் 48 அரியர்ஸ்களை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடன் படிக்கும் அனுபமா பரமேஸ்வரனையும் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறார் டிராகன். கல்லூரியில் இவருடைய அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் கல்லூரி பிரின்சிபாலான மிஷ்கின், இவரை கல்லூரியில் இருந்து வெளியேற்றுகிறார்.

வெளியில் வந்தவர் “கல்லூரி படிப்பை நான் முடித்துவிட்டேன். சர்டிபிகேட் இன்னும் தரவில்லை..” என்று வீட்டில் பொய் சொல்கிறார். ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகப் பொய் சொல்லிவிட்டு தன்னுடைய நண்பர்களின் வீட்டில் அமர்ந்து கொண்டு தண்ணியடித்துக் கொண்டு சிகரட்டை குடித்துக் கொண்டு போக்கிரித்தனமாக வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய நண்பர்களிடமே 18,000 ரூபாயை கடனாகப் பெற்று அந்த பதினெட்டாயிரம் ரூபாயை அப்படியே அப்பாவிடம் கொடுத்துவிட்டு மறுபடியும் அந்த செலவு இந்த செலவு என்று சொல்லி அந்த 18,000 அப்படியே வாங்கிக் கொண்டு வந்து தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரது காதலி அனுபமா தனக்கு வேறு ஒரு ஆளோடு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று சொல்லி அவரிடம் இருந்து விடைபெறுகிறார். இது பிரதீப்பின் மனதை மிகவும் சோகமாக்குகிறது. வலியை உண்டாக்குகிறது.

அனுபமாவின் வருங்கால கணவர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்பதால்தான் தன்னை அனுபவமாக கைவிட்டுப் போனதாக பிரதீப் நினைக்கிறார். அதனால் அந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஒரு ரூபாய் கூடுதலாக சம்பளம் கிடைக்கும் வேலைக்கு போக முடிவெடுக்கிறார்.

இது போன்ற வேலையை வாங்கித் தரும் ஒரு ஏஜென்சியை அணுகி அவர்களுக்கு பணம் கொடுத்து போலியான பி.டெக். சர்டிபிகேட் கொடுத்து போலியான இண்டர்வியூவை அட்டென்ட் செய்து வேலைக்கு செல்கிறார்.

ஆனால் அந்த வேலை பிரதீப்புக்கு மிகவும் பிடித்தமான பாடமாக இருந்ததால் அதில் எப்படியோ திறன் பெற்று அதே அலுவலகத்தில் மேனேஜர் லெவலுக்கு உயர்கிறார் பிரதீப். இப்பொழுது அவருடைய சம்பளம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடு வாங்கிவிட்டார் பிரதீப். அந்த வீட்டுக்கு இன்ஸ்டால்மெண்ட் கட்டுகிறார். இன்னொரு பக்கம் இவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு எடுக்கிறார்கள்.

மிகப் பெரிய கோடீஸ்வரரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் காயாடு லோகரை பெண் பார்த்து பிரதீப்பிற்கு நிச்சயம் செய்கிறார்கள். வாழ்க்கையில் சந்தோஷத்தின் உச்சத்தில் பிரதீப் இருக்கும் இந்த நேரத்தில் தான் திடீரென்று ஒரு நாள் தற்செயலாக அவரது கல்லூரியின் பிரின்சிபாலான மிஸ்கின் இவரை சந்திக்க நேர்கிறது.

மிஷ்கினுக்கு இவருடைய பித்தலாட்டங்கள் எல்லாம் தெரிந்தவுடன் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அவனுடைய வாழ்க்கையை குலைக்க விரும்பவில்லை என்று சொல்லும் மிஷ்கின், “மூன்று மாத காலம்  கல்லூரிக்கு வந்து படித்து அந்த 48 அரியர்ஸையும் பாஸ் செய்துவிடு. இல்லாவிட்டால் நான் உன்னுடைய அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிடுவேன்..” என்றும் மிரட்டுகிறார்.

இதற்கு பிறகு என்ன நடக்கிறது? பிரதீப் மிஷ்கினின் இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டாரா.. 48 ரியர்ஸ்களை பாஸ் செய்து விட்டாரா அல்லது முடியாது என்று சொல்லி வாழ்க்கையில் திசை திரும்பினாரா என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள சுவையான திரைக்கதை.

பிரதீப் என்ற ஒரு இளைஞனை மையமாக வைத்து இந்தப் படம் முழுவதும் நகர்ந்து இருக்கிறது. அவ்வளவு பெரிய கதையையும் சுமந்திருக்கிறார் பிரதீப். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

அவருடைய ஒவ்வொரு ஸ்கிரீன் நடிப்பும், பழைய தனுஷை பார்த்தது போலவே இருக்கிறது. உண்மையாக சொல்லப் போனால் தனுசுக்கு அடுத்த வாரிசு என்று நிச்சயமாக பிரதீப்பை சொல்லலாம். அந்த அளவுக்கு தன்னுடைய தேர்ந்த நடிப்பை இந்தப் படத்தில் பல காட்சிகளில் காட்டி இருக்கிறார் பிரதீப்.

இவருடைய நடிப்பில் உச்சம் கௌதம் மேனனின் அறையில் ஒரு கத்திக் கூப்பாடு போட்டு காட்டுவது தான். அதேபோல் மிஷ்கினிடிம் சவால் விட்டு பேசுவதும் கடைசியாக மிஸ்கின் கிட்ட போய் எப்படியாவது இந்தப் பிரச்சினையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சும்போதும் ஒரு தரமான நடிப்பினை காண்பித்திருக்கிறார் பிரதீப்.

ரௌடியாக தன் வீரியத்தைக் காட்டும்போதும், கடைசியாக ஒரு அமைதியான பிரதீப்பாக நாம் காண்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள். அந்த வித்தியாசத்தை தன்னுடைய பாடி லாங்குவேஜிலும் காட்டி அசர வைத்திருக்கிறார்.

முதல் காதலியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரனின் மிக அழகான நடிப்பும், அமைதியான நடிப்பும், அனுசரணையான நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய ஒரு பலம் என்று சொல்ல வேண்டும்.

அவர்தான் பிரதீப்பை “வெறும் 30% மார்க் எடுத்தாலே போதும்தானே.. உன்னை யார் பஸ்ட் கிளாஸ் மார்க் எடுக்க சொன்னா… அதையாவது பாஸ் பண்ணி சர்டிபிகேட் வாங்கிட்டு போயேன்..” என்று அவரை தூண்டிவிட்டு அவருக்கு நிறைய உதவிகள் செய்கின்றபோது நிச்சயமாக ஐ லவ் யூ அனுபமா என்று சொல்லத் தோன்றுகிறது.

அழகு ராணியாக வந்திருக்கும் காயாடு லோகர் நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதுமுகம்தான். பல நடிகைகளின் கலவையாக காட்சி அளித்தாலும் ஸ்கிரீனில் அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது அவரது அழகு. சொக்க வைக்கும் அழகு. அவருக்கு முன்பு பிரதீப் ஒண்ணுமே இல்லை என்பது நமக்குத் தெரிகிறது இயக்குநருக்கு தெரிந்ததா.. இல்லையா… என்று தெரியவில்லை.

இவருக்கும் நடிப்பதற்கு ஒரு அட்டகாசமான ஒரு வாய்ப்பை இயக்குநர் கொடுத்திருக்கிறார். சென்னை ஏர்போர்ட் வாசலில் “ஏதோ எனக்கு தப்பா படுது. நீ என்கிட்ட கொண்டு பொய் சொல்லலில.. நான் நிறைய ஏமாந்துட்டேன் மறுபடியும் ஏமாற தயாராக இல்லை..” என்று கண்ணீருடன் அவர் பேசுகின்ற பேச்சு நிச்சயமாக பாராட்டுக்குரியது.. நம் மனதை கொஞ்சம் லேசாக பிசைந்துவிட்டது அவருடைய நடிப்பு.

பிரதீபின் அப்பாவாக நடித்திருக்கும் மரியம் ஜார்ஜின் இயல்பான  நடிப்பு அற்புதம். அதிலும் கடைசி காட்சிகளில் பிரதீப் அவருடைய காலில் விடுகின்றபொழுது ரசிகர்கள் அத்தனை பேருமே கைதட்டி விட்டார்கள். அந்த கை தட்டலை வரவைத்துவிட்டது மிக எளிமையான, சாதாரணமான மரியம் ஜார்ஜின் நடிப்பு. கங்கிராட்ஸ் சார்.

அதேபோல் பிரதீப்பின் அம்மாவாக நடித்த இந்துமதியின் நடிப்பும் சிம்ப்ளி சூப்பர். மகன் என்ன கேட்டாலும் செய்து தந்து கொண்டே இருக்கும் தன்னுடைய கணவரை கண்டிக்க முடியாமல், கடைசியாக ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து அவேசமாக அத்தனை கேள்விகளை அள்ளி வீசும் இந்த அம்மா நிச்சயமாக எல்லார் வீட்டிலும் இருக்கிறார்கள். அந்த அம்மா கதாபாத்திரத்தை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

பிரதீப்பின் நண்பர்களாக நடித்த அத்தனை பேருமே தங்களுடைய சிறந்த நடிப்பை காண்பித்திருக்கிறார்கள். கல்லூரியில் குட்டி டிராகன் என்ற பெயரில் சுற்றி வரும் அந்த சின்ன பையனும் தன்னுடைய நல்லதொரு நடிப்பை காண்பித்திருக்கிறான்.

சிறந்த ஒளிப்பதிவு என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிப்பதிவு எந்தவிதத்திலும் குறைவில்லை. அட்டகாசமான ஒளிப்பதிவை காண்பித்து இருக்கிறார். கல்லூரி காட்சிகள், வெளிப்புற காட்சிகள், வீடுகள் என்ற அத்தனை இடங்களிலுமே கேமரா வொர்க் அழகோ, அழகு. பாடல் காட்சிகளில் பம்பரமாக சுற்றி சுழன்று காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸின் இசையில் கல்லூரி கொண்டாட்டங்கள் உடன் காதல் பாடல்களும் ஓகே ரகம்தான்.

இந்த படத்திலும் வழக்கம்போல குடி, சிகரெட் என்று போதை வஸ்துகளை மிக அதிகமாக பயன்படுத்தியிருப்பதை வன்மையாக்க் கண்டிக்கிறோம். இப்படித்தான் நடக்கிறது.. இயல்பைத்தான் காட்டுகிறோம் என்று சொல்லி சொல்லியே இந்த போதை வஸ்த்துகளை மிக அதிகமாக நம்முடைய இளைஞர்கள் மனதில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளம் இயக்குநர்கள்.

இந்தக் கொள்கையை கொஞ்சம் மாற்றிக் கொள்ளும்படி நாளைய எதிர்காலத்தை மனதில் கொண்டு இயக்குநர்களிடத்தில் நாம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவனுக்கு துரோகம் செய்துவிட்டு காலம் முழுவதும் அந்த துரோகத்தை மனதில் வைத்துக் கொண்டு தூங்க முடியாமல் தவியாய் தவிப்பதற்கு பதிலாக அவனிடம் வெளிப்படையாக அதைச் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த துரோகத்தை மனதில் இருந்து நீக்கினால் நிம்மதியாக வாழலாம் என்று என்பதுதான் இந்த படத்தின் மூலமாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நமக்கு சொல்லி இருக்கும் செய்தி.

பிரதீப் கடைசியாக தன் தவறை உணர்ந்து அனைத்தையும் வெளிப்படையாக சொல்லிவிட்டு திருமணத்தைக்கூட முறித்துக் கொண்டு அமைதியாக வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தோற்றம் நிச்சயம் பாராட்டுக்குரியது. அழகான ஒரு கவிதையாக இந்தப் படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். நிச்சயமாக அதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிச்சயமாக இந்தப் படம் பாராட்டப்பட வேண்டிய படம்தான். போதை சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர ஒரு அழகான ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். அனைவருக்கும் தேவையான மெசேஜ்தான். அனைவரும் இதை ஏற்று பின்பற்றினால் நிச்சயமாக ஒவ்வொருவரும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score