நடிகர் தனுஷ் தனது சொந்த அக்காள் மகனான பவிஷ் நாராயணனை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்காகவே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜாவும் தாயார் விஜயலட்சுமி இணைந்து தயாரித்து உள்ளனர்.
நாயகன் பவிஷ் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு இப்பொழுது ஒரு ஹோட்டலில் செஃப்பாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய அம்மா சரண்யா பொன்வண்ணன். அப்பா ஆடுகளம் நரேன்.
பவிஷுக்கு பெண் பார்த்து வருகின்றனர் அவருடைய தாயும், தந்தையும். இப்போது கடைசியாக பிரியா வாரியரை பெண் பார்க்கச் செல்கின்றனர். ப்ரியாவின் வீட்டுக்கு மகன் பவிஷை அழைத்துச் செல்கிறார்கள் பெற்றோர்கள். அப்போதுதான் பிரியாவும் பவிஷும் பள்ளிக் காலத்து தோழர்கள் என்று..!
“நாங்க ரெண்டு பேருமே ஸ்கூல் மேட்ஸ். எங்களுக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தெரியும்.. அதனால இந்தக் கல்யாணத்துல நுழையறதுக்கு முன்னாடி நாங்க பழகி, பாத்துக்குறோம். எங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..” என்று கேட்கிறார்கள். இரு தரப்புப் இதற்கு பெற்றோர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.
இப்போது பவிஷூம், பிரியாவும் அடிக்கடி சந்தித்து பேசி கொள்கிறார்கள் அப்போது பவிஷ் தன்னுடைய முன்னாள் காதலியான அனிகா சரேந்தரைப் பற்றி பிரியாவிடம் சொல்கிறான். இந்த நேரத்தில் அனிகாவின் திருமண பத்திரிக்கை பவிஷூக்கு வந்து சேர்கிறது.
பிரியாவின் வற்புறுத்தலால் பவிஷ் தன்னுடைய நண்பர்கள் இருவருடன் இணைந்து அனிகாவின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கோவா வருகிறார். கோவாவில் பவிஷ் தன்னுடைய முன்னாள் காதலியை சந்திக்க நேர்கிறது. இதற்குப் பிறகு அந்த திருமணத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் பவிஷ், தனுஷ் எப்படி ஒரு சின்னப் பையனாக பள்ளிக் கூட மாணவன் தோற்றத்தில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தாரோ அதேபோன்ற தோற்றத்தில்தான் இருக்கிறார்.
ஸ்கூல் பையன், கல்லூரி பையன் என்று இரண்டுவித கெட்டப்பும் இவருக்கு கச்சிதமாக பொருந்தும். அந்த அளவுக்கு மிகவும் யூத்தாகவே இருக்கிறார். சரியான சமயத்தில்தான் இவருடைய அறிமுகம் நடந்துள்ளது.
அறிமுகம் என்பதால் இவருடைய நடிப்பை பற்றி விஸ்தாரமாக நாம் பேச வேண்டிய தேவை இல்லை. ஒரு கல்லூரி மாணவன் அதற்குப் பிறகு வேலை பார்க்கும் ஒரு இளைஞன்.. அதற்குப் பிறகு காதலன்.. என்ற மூன்றுவிதமான கேரக்டர்களில் தம்பி பவிஷ் சரியாகவே நடித்திருக்கிறார்.
அனிகாவுடன் காதலில் விழும் தருணத்திலிருந்து தானே காதலை முறித்துக் கொள்ளும் வரையிலும் ஒரு துள்ளலான எதிர்பார்ப்போடு கூடிய நடிப்பை காண்பித்து இருக்கிறார் பவிஷ். அனிகாவின் அப்பாவான சரத்குமாரிடம் முதலில் அமைதியாக பேசிப் பிறகு சரிக்கு சமமாக தானும் ஒரு கெத்தாக அமர்ந்து கொண்டு வீராப்பாக பேசுகின்ற அந்த நடிப்பில் பவிஷை நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.
கோவா கல்யாணத்திற்கு சென்று எப்படியாவது அனிகாவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஏங்கி தவிக்கும் அந்த பழைய காதலின் முகமும்.. இன்னொரு பக்கம் பிரியாவுடனான காதலும் வளர்ந்திருக்கும் குழப்பத்தையும் தெளிவாக காட்டி இருக்கிறார் பவிஷ்.
நட்பு, காதல், இரக்கம், சோகம், கோபம், ஆத்திரம் என்ற அத்தனையையும் கொஞ்சம் கலந்து கட்டி ஒரு இயக்குநருக்குரிய நடிகராக தன்னைக் காட்டியிருக்கிறார் பவிஷ். இவருக்கு ஒரு வளமான எதிர்காலம் உண்டு. மனதார வாழ்த்துகிறோம்.
நாயகியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரனின் அந்த அழகான முகமும், கண்கள் காட்டும் கவிதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அப்பாவை எதிர்த்து தன்னுடைய காதலை வளர்த்துக் கொண்டே வரும் அனிதா கடைசியாக திடீரென்று தன்னிடம் பாராமுகம் காட்டி தன்னை அவாய்ட் செய்து கொண்டே போகும் பவிஷிடம் காரணத்தைக் கேட்டு பொங்குகின்ற அந்தக் காட்சியில் அவருடைய மொத்த நடிப்பையும் காண்பித்து இருக்கிறார்.
இன்னொரு பக்கம் பிரியா வாரியார் முதல்முறையாக தான் நடித்த எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் கவர்ச்சி காட்டாமல் மிக அடக்கமான ஒரு பெண்ணாக… ஒரு பிரண்டாக.. ஒரு காதலியாக… ஒரு வருங்கால மனைவியாக… அனைத்துவித நடிப்பையும் காண்பித்து இருக்கிறார்.
கோவாவில் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதனின் நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அவரது அறிமுக காட்சியில் அவருக்கு தமிழ் தெரியாது என்று நினைத்து பவிஷூம் அவரது நண்பரும் பேசம் பேச்சுகளும், பின்பு உண்மை தெரிந்த இவர்கள் வழிவதும் மிகப் பெரிய காமெடி.
அஞ்சலியை காதலிப்பதாக நினைத்து பவிஷின் நண்பன் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சுக்களும் சரவெடியாக ஒரு காமெடியை கொடுத்து இருக்கிறது. அதேபோல் அவருடைய மனசுக்குள் இருக்கும் இன்னொரு காதலியாக நடித்திருக்கும் ஒரு அழகு பெண்மணி, அவரும் இந்தப் படத்தின் கதையை நகர்த்துவதற்காக கடைசி வரையில் இவர்களுடனே வந்து உதவி இருக்கிறார்.
ஒரு பணக்கார அப்பாவாக.. பாசமுள்ள அப்பாவாக சரத்குமார் தன் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். மிக குறைந்த காட்சிகள் என்றாலும் ஒரு கெத்து குறையாமல் அவர் பேசுகின்ற பேச்சு அந்தக் கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறது.
ஆடுகளம் நரேனும், சரண்யா பொன்வண்ணனும் அப்பா அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஹீரோவின் நண்பர்களாக நடித்திருந்த இரண்டு பேருமே மிக மிக சிறப்பு. இன்னொரு பக்கம் அனிகாவை திருமணம் செய்யும் மாப்பிள்ளையும் தன்னுடைய அடக்கமான ஒரு நடிப்பை காண்பித்து அவரும் இறுதியில் என்ட்ரியாகி நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.
லயன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு இந்தப் படம் ஹை குவாலிட்டியில் ஹையஸ்ட் பட்ஜெட்டிலும் தயாரிக்கப்பட்ட படம் என்பதை காட்சிக்கு காட்சி விளக்கி சொல்கிறது. அவ்வளவு அழகான ஒளிப்பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பாடல் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதிலும் கோவாவில் நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் பிரியங்கா மோகன் மடிசார் கட்டிக் கொண்டு ஆடுகின்ற அந்த காட்சியை படமாக்கியவிதம் சிம்ப்ளி சூப்பர்.
மேலும் பாடல் காட்சிகளிலும் மான்டைட் சாட்சிகளிலும் மிக அழகாக நம்மை சொக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் லயன் பிரிட்டோ.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்றைய இளைஞர்களிடையே ஹிட் அடித்திருக்கிறது. சோகப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய அளவில் அமைந்திருக்கிறது.
1980-களில் வெளிவந்த ‘வாழ்வே மாயம்’, ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் மையக் கருவை போலவே இந்த படத்தின் மையக் கருவும் அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
அப்போதைய காலகட்டத்திற்கு அது ஓகே என்றாலும் இப்போதைய காலகட்டத்திலும் அதே போல்தான் கதையை அமைக்க வேண்டுமா என்ற சந்தேகம் விழுகிறது. சாதாரணமாகவே இப்போதைய இளைஞர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
“உங்கப்பாவுக்கு கேன்சராம். அதனால் இப்போதைக்கு அவர் கூடவே இருந்து பாத்துக்க. ஒரு ஒரு வருஷம் கழிச்சு நம்ம காதலை மறுபடியும் ரீஓபன் செய்து கொள்ளலாம்” என்று நாயகன், நாயகியிடம் சொல்லிவிட்டு போயிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்கிறது. இதைச் சொல்லியே திரைக்கதையை மாற்றி வைத்திருக்கலாம்.
படத்தின் முதல் பாதையில் கொஞ்சம் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் எஸ்கலேட்டரில் அப்படியே அழகாக கொண்டு போவது போலவும் திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ். பாராட்டுக்கள்தான்.
இன்றைய பொறுப்பில்லாத இளைய தலைமுறையினருக்குப் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதையும் ஒரு தவறான திரைக்கதை மூலமாக சொல்லியிருந்தாலும் படத்தின் இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று சொல்லி இருப்பது நம்மை மேலும் அதிர்ச்சியாக்குகிறது.
ஏனெனில், இந்தப் படத்தில் ஒரே ஒரு வசனத்தின் மூலமாக இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் சிதைத்து விட்டார் இயக்குநர் தனுஷ். படத்தின் ஹீரோவான பவிஷ், ஒரு காட்சியில் “இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதற்காகத்தான் நான் கிளம்பி வந்தேன்..” என்கிறார்.
இது எவ்வளவு பெரிய தவறான ஒரு விஷயம் என்பதை யோசித்துப் பாருங்கள். காதலர்கள் இருவரும் பிரிந்தாகிவிட்டது. பிரிந்த காதலி தனக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டார். ஆனாலும், ஒரு நாகரீகம் கருதி பழைய காதலனை மறக்காமல் திருமணத்திற்கு ஒரு மரியாதைக்காக அனுப்பி இருக்கிறார்.
ஆனால் அந்த மரியாதையை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தியே தீருவேன் என்று சொல்வதெல்லாம் எந்த வகையில் நியாயம்? இதெல்லாம் உண்மையான காதல் இல்லை. அந்தக் கேரக்டரை இந்தக் காட்சி சிதைத்துவிட்டது. இதிலேயே இந்தப் படமும் கவிழ்ந்து விட்டது என்றே சொல்லலாம்.
அதே சமயம் படம் நெடுகிலும் ஆங்காங்கே வருகின்ற அதீத மதுவருந்தும் காட்சிகள் நிச்சயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆண்களே குடிக்க கூடாது என்று சொல்லி வரும் நிலையில் பெண்களும் குடிக்கலாம் என்று குடியை நார்மலைஸ் செய்வது போல இந்த படத்தில் சொல்லி இருப்பது நிச்சயம் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பேக் டிராப்பாக முடிந்திருக்கிறது.
இளைஞர்களுக்கு நீங்கள் நல்ல வழியைக் காட்டுகிறீர்களோ.. இல்லையோ… பரவாயில்லை.. ஆனால் கெட்ட வழியை மட்டும் காட்டி விடாதீர்கள்.
ஏற்கனவே திரைப்படங்களில் ஹீரோக்கள் குடிப்பதைத்தான் தங்களது நிஜ வாழ்க்கையில் அப்படியே ஃபாலோ செய்து கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள். அதனால்தான் குடியை ஆண்களோடு கூடவாவது கொஞ்சம் நிறுத்திக் கொள்ளுங்கள் இயக்குநர்களே என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தில் காட்டியிருப்பதுபோல பெண்களும் தாராளமாக குடிக்கலாம் என்று சொல்வது அந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இயக்குனருக்கு இந்த ஒரு விஷயத்திற்காகவே நமது வன்மையான கண்டனங்கள்.
RATING : 3 / 5