‘டான்’ படத்தில் இருந்த அரசியல் பற்றிய வசனத்தைக் கேட்டு திகைத்துப் போன உதயநிதி ஸ்டாலினிடம் அந்தப் படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் “ஸாரி” கேட்ட சம்பவம் நேற்றைக்கு நடந்த அந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன்-பிரியங்கா மோகன் நடிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருக்கும் ‘டான்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சோழிங்கநல்லூரில் இருக்கும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த ‘டான்’ படத்தை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலமாக வெளியிட இருக்கிறார்.
இதனால் இந்த விழாவுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் படத்தின் டிரெயிலரை வெளியிட்டார்.
ஆனால், இந்த டிரெயிலரின் கடைசியில் “பேசாம நீ அரசியல்ல இறங்கிரு” என்று சிவகார்த்திகேயனிடம் துணை நடிகரான விஜய் கூற, அதற்கு சிவகார்த்திகேயன் “அங்க போனா நிறைய பொய் சொல்லணுமே” என்று பதில் சொல்கிறார்.
இதைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் திகைத்துப் போனாலும் சிரித்துவிட்டார். அவரது அருகில் அமர்ந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதியிடம் எதையோ சொல்லி சமாளித்து அவரை அனுப்பி வைத்தார்.இதன் பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “நானே எதிர்பார்க்கலை.. இந்த சீன் இதுல வரும்ன்னு.. இந்தப் படத்தைத் துவக்கும்போதே இந்தப் படத்தை உதயநிதி ஸார்தான் வெளியிடப் போறாருன்னு எங்களுக்கு சுத்தமா தெரியாது. கதைக்காக வைச்சுட்டோம். ஆனால், இது சரியா இப்படி அமைஞ்சிருச்சு. நானும் “ச்சும்மா சினிமாவுக்காக வந்திருச்சு. ஸாரி ஸார்”ன்னு சொல்லி சமாளிச்சிட்டேன்.. ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லியிருக்கலாம் சிபி. இல்லைன்னா இதை மட்டும் நீக்கியிருக்கலாம்..” என்று இயக்குநர் சிபியிடம் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.