“ஆவணங்களைத் தேடித் தருகிறோம்”- விஷாலின் புகாருக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி விளக்கம்

“ஆவணங்களைத் தேடித் தருகிறோம்”- விஷாலின் புகாருக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி விளக்கம்

“நான் திரைப்படத் தயாரிப்புச் செலவுக்காகக் கடன் வாங்கியபோது கொடுத்திருந்த ஆவணங்களைத் கடனைக் கட்டிய பிறகும் திருப்பித் தரவில்லை…” என்று கூறி பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது காவல் துறையில் நடிகர் விஷால் கொடுத்துள்ள புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள விளக்கத்தில்.. “நடிகர் விஷால் தயாரித்து, நடித்த இரும்புத்திரை’ என்ற படத்திற்காக நானும், பட அதிபர் திருப்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து 3 கோடி ரூபாயை கடனாக கொடுத்திருந்தோம்.

அந்தக் கடன் பணத்தை விஷால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனால் கடனுக்காக விஷால் கொடுத்திருந்த ஆவணங்களை, திருப்பூர் சுப்பிரமணியம்தான் வைத்திருந்தார். அவர் அந்த ஆவணங்களை தனது நண்பரும் சினிமா இயக்குநருமான சிவகுமாரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

சிவகுமார் திடீரென மரணம் அடைந்து விட்டார். இதனால், விஷாலுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய ஆவணங்களை சிவகுமார் எங்கு வைத்திருந்தார் என்பதை தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இது பற்றி விஷாலிடம் சொல்லி, வக்கீல் மூலமாக “ஆவணங்கள் காணாமல் போனது பற்றியும், விஷால் கடனை திருப்பி கொடுத்து விட்டார் என்றும், எதிர்காலத்தில் இது தொடர்பாக எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டோம்…” என்றும் பத்திரமாக எழுதி கொடுத்து விட்டோம்.

இந்த நிலையில் விஷால் ஏன் திடீரென்று போலீசுக்கு போனார் என்று தெரியவில்லை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆவணங்களை தொடர்ந்து தேடச் சொல்லி இருக்கிறேன். ஆவணங்கள் கிடைக்கும்பட்சத்தில், அவற்றை பத்திரமாக விஷாலிடம் கொடுத்து விடுவோம்..” என்று தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி தெரிவித்துள்ளார்.

Our Score