சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளியாகிறது

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தினர்.

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்’ திரைப்படம், அவரது ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களிடையேயும்  மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக பல தகவல்கள் பரவிய நிலையில், தற்போது படத்தைத் தயாரித்திருக்கும் K.J.R.Studios மற்றும் SK Productions நிறுவனங்கள் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளன.

இந்த டாக்டர்’ படம் அடுத்த மாதம் நிச்சயமாக திரையரங்குகளில் வெளியாகும் என்பதுதான் அந்த மகிழ்ச்சி செய்தி. 

கடந்த மாதம் இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக அறிவித்திருந்தார்கள். தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு தியேட்டரில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக KJR Studios சார்பில் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கோட்டபாடி  J.ராஜேஷ் பேசும்போது, “எங்களுடைய டாக்டர்’ திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த திரைப்படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

தமிழில் இதுவரையிலும் பார்த்திராத.. புதுமையான, பிளாக் காமெடி வகையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால்  துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது.

இந்த ‘டாக்டர்’ திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில்  பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியன. அப்போதும் டாக்டர்’ படத்தை  பெரிய திரைக்கு கொண்டு வருவதே எனது முதல் தேர்வாக இருந்தது.

எதிர்காலம் குறித்த  நிச்சயமற்ற தன்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் தொழில் துறையினரின் அழுத்தங்களுக்கு மத்தியில்  வெளியீட்டுக்காக காத்திருப்பது கடினமான முடிவாக இருந்தது.

இப்போது மீண்டும் அனைத்தும் இயல்பு  நிலைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மேலும் உங்கள் ஆவலை நிறைவேற்றும் வகையில்  டாக்டர்’ திரைப்படத்தை தியேட்டர்களில் கொண்டு வருகிறோம். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும்.

தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களும் தங்கள் வியாபாரத்தை புதுப்பித்து, மறுமலர்ச்சி தரவும் ‘டாக்டர்’ திரைப்படம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

SK Productions இணை தயாரிப்பாளரான கலை அரசு பேசும்போது, “எங்களின் இந்த ‘டாக்டர்’ படம் தியேட்டரில் வெளியாவது, குழுவில் உள்ள அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.  தயாரிப்பாளர் கோட்டபாடி  J.ராஜேஷ் அவர்களின்  துல்லியமான திட்டமிடல் மற்றும் தியேட்டர் வெளியீட்டில் உறுதியாக அவர் இருந்ததற்கு நன்றி.

ஒரு தொற்றுநோய் பரவிய கடினமான காலங்களில், நாடு முழுவதும் உள்ள மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள்கூட சமரசம் செய்து, OTT வெளியீட்டில் படத்தை வெளியிட அணுகிய போதும், அவர் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இத்திரைப்படம் இருக்கும் என்று இந்த திரைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்தார்.

சிவகார்த்திகேயன்-இயக்குநர் நெல்சன் திலீப்குமார்-அனிருத் ஆகிய  மூவரின் கூட்டணி  ரசிகர்களுக்கு 100% சிறப்பான பொழுதுபோக்கு சினிமா அனுபவத்தை தந்து, அரங்குகளை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.

தியேட்டர்களில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ‘டாக்டர்’ படத்தைப் பார்க்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை அனுபவிக்க, நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்…” என்றார்.

Our Score