full screen background image

தனுஷூடனான மோதலைத் தவிர்த்தார் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன்…!

தனுஷூடனான மோதலைத் தவிர்த்தார் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன்…!

சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்.’ 

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் சென்ற வருடக் கடைசியில் வெளியாகியிருக்க வேண்டியது. தியேட்டர்களில் 50 சதவிகிதப் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவினால் சுதாரித்து பின் வாங்கியது.

பின்பு மாஸ்டர்’ படம் ரிலீஸாகி அதன் ரிசல்ட்டை பார்த்த பின்பு வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள். மாஸ்டரின் ரிசல்ட் சக்ஸஸாக வர கோடை விடுமுறையில் இதனைக் கொண்டு வரலாம். அதுதான் சிவகார்த்திகேயனின் ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க சரியாக இருக்கும் என்று எண்ணி ஏப்ரல் மாதம் 2 அல்லது 9-ம் தேதியன்று வெளியிடலாம் என்று காத்திருந்தார்கள்.

இந்தப் படத்திற்காக தனுஷும் காத்திருந்தார் போலும். அவருடைய ‘கர்ணன்’ திரைப்படத்தையும் இந்த ‘டாக்டர்’ படத்துடன் மோதவிடலாம் என்று யாரோ ஒரு ‘நலம் விரும்பி’ கொடுத்த ஐடியாவை செயல்படுத்த தயாராக இருந்தார் தனுஷ்.

ஆனால் ஏப்ரல் மாதம் ‘டாக்டர்’ வெளியாகும் தேதி உறுதியாகத் தெரியாததால் ‘ஏப்ரல் ரிலீஸ்’ என்று மட்டுமே ‘கர்ணன்’ விளம்பரத்தில் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால், இதை ஊகித்த சிவகார்த்திகேயன், ஒரு வாரத்திற்கு முன்பாக மார்ச் 26, வெள்ளிக்கிழமையன்று தனது ‘டாக்டர்’ படத்தைக் கொண்டு வருவதாக அறிவித்துவிட்டார்.

இது தனுஷ் வட்டாரங்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருக்கிறது. ஏனெனில் தனுஷ் இப்போதைக்கு தனது பரம எதிரியாக நினைப்பது சிம்புவை அல்ல. சிவகார்த்திகேயனைத்தான்.

சிவகார்த்திகேயனை தனுஷ்தான் துவக்கக் காலத்தில் பெருமளவுக்கு வளர்த்துவிட்டார். பாண்டிராஜின் ‘மெரீனா’ படத்திற்குப் பிறகு ‘3’ படத்தில் தனுஷ்தான் சிவகார்த்திகேயனை தனது நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பெயர் வாங்கிக் கொடுத்தார்.

இதையடுத்து தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இது சூப்பர் ஹிட்டானது. மீண்டும் தனுஷ் தனது தயாரிப்பில் உருவான ‘காக்கி சட்டை’ படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். இதுவும் ஹிட்டானது.

இதன் பின்பு தனுஷின் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்திற்கு சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டபோது, சம்பளப் பிரச்சினையில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதுதான் பிரச்சினைக்கு மூல காரணம் என்கிறார்கள்.

“நான்தானே வளர்த்தேன். என்கிட்டயே 5 விரலைக் காட்டினால் எப்படி..?” என்று தனுஷ் கோபப்பட்டிருக்கிறார். “இப்போ நாங்களும் பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டாமா..? அதே போர்ன்விட்டாவையும், குளுகோஸையும் இப்பவும் சாப்பிட முடியுமா..?” என்று சிவகார்த்திகேயன் தனக்கே உரிய பாணியில் திருப்பிக் கேட்க.. இருவருக்கும் இடையில் தூதாக வந்தவர்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.. பிரச்சினை பெரிதாகிவிட்டது.

அன்று துவங்கி அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் இன்றுவரையிலும் பேசிக் கொள்ள முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் பெரிதாகியிருக்கின்றன.

இந்த நிலையில்தான் தனக்காக தனுஷ் காத்திருப்பது தெரிந்ததும், சிவகார்த்திகேயன் முந்திக் கொண்டு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தனது ‘டாக்டர்’ படத்தைக் கொண்டு வந்து போட்டியைத் தவிர்த்துவிட்டார்.

இனிமேலும் தனுஷூம் மார்ச் 26-யன்றே போட்டிக்கு வருவாரா…? அல்லது முன்பே திட்டமிட்டபடி ஏப்ரல் 2 அல்லது 9-ம் தேதியன்று ‘கர்ணனைக்’ கொண்டு வருவாரா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்புக்குள்ள நிலவரம்.!

Our Score