தமிழ் சினிமாவின் இரண்டு சிறந்த இயக்குநர்கள், வெங்கட் பிரபு மற்றும் எம்.ராஜேஷ். தங்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கும் இந்த இருவரும், ஒரு திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காதே..?
அப்படி ஒரு திரைப்படமாக அமைய இருக்கிறது அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவாவின் தயாரிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷின் கதையில், வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் புதிய திரைப்படம்.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற ‘டூப்பா டூ ஆப்’ வெளியீட்டு விழாவில் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக இயக்குநர் வெங்கட் பிரபுவால் அறிவிக்கப்பட்டது.
இது பற்றி பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, “எங்களின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான தருணம். எங்கள் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் 25-ம் ஆண்டை முன்னிட்டு, இதுவரை ரசிகர்கள் எங்கள் நிறுவனத்திற்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அவர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி சொல்லும்விதத்தில் இந்த பிரம்மாண்டமான கூட்டணியோடு நாங்கள் இணைந்திருக்கிறோம்.
நகைச்சுவை படங்களை உருவாக்குவதில் ஜாம்பவான்களாக திகழும் வெங்கட் பிரபு – ராஜேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கும் இந்த படத்தை தயாரிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.
ராஜேஷின் கதையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார் வெங்கட் பிரபு. நான் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘சரோஜா’ படத்தை தயாரித்திருக்கிறேன். தற்போது ராஜேஷின் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தையும் தயாரித்து வருகிறேன். இவர்கள் இருவரின் திறமையின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கைதான் இந்த புதிய திரைப்படம்…” என்று உற்சாகத்துடன் கூறினார்.
நடிகர்கள் லிஸ்ட்ல நிச்சயமா பிரேம்ஜி இருப்பாருல்ல..!? அது போதும் நமக்கு..!