“பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்களை ஒவ்வொரு திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் பதிவிட வேண்டும்…” என்று இயக்குநர் விஜய்ஸ்ரீஜி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“மத்திய தணிக்கைக் குழுவின் ஆலோசனைப்படி ‘மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம்’ என்ற வாசகங்கள் ஒவ்வொரு திரைப்படத்தின் துவக்கத்திலும் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள்வரை அந்த பதிவு அனைத்துத் திரைப்படங்களிலும் பதிவிடப்பட்டு வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக 2019 மார்ச் 1-ம் தேதியன்று வெளியான எங்களது ‘தாதா-87’ படத்தின் டைட்டில் கார்டில், ‘பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்’ என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக நாங்களே பதிவிட்டோம்.
தற்சமயம் இந்தியாவையே கண்ணீரில் ஆழ்த்தியிருக்கும் ஹத்ராஸ் சம்பவத்தில் நம் தேசத்தின் மகள் ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு இறந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தோம்.
எங்களது ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஒரு சில கயவர்களால் பெண் ஒருவள் சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும் படமாக்கியிருக்கிறோம்.
‘தாதா-87’ படத்தில் சாருஹாசன் பேசிய ‘பெண்களை தொட்டால் கொளுத்துவேன்’ என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை அத்திரைப்படத்தின் வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் அதுவே சட்டமாகியிருக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும்.
தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும், மாநில அரசும், இந்திய நீதித் துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு மது மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வை மத்திய செய்தி தொடர்பு அமைச்சகமும், தணிக்கை குழுவினரும் ஒருங்கிணைந்து, 2012 செப்டம்பர் 26 முதல் திரைப்பட டைட்டில் கார்டுகளில் புகையிலை எச்சரிக்கை விழிப்புணர்வை பதிய வைத்தார்கள்.
இதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையையும் திரைப்படங்களின் டைட்டில் கார்டில் பதிவிட உத்தரவிடுங்கள் என ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ மற்றும் ‘பவுடர்’ படத்தின் படக் குழுவினர் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்…”
இவ்வாறு இயக்குநர் விஜய்ஸ்ரீஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.