‘வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குநர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது.
புதுமுக இயக்குநர் J.வடிவேல் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘கள்ளப்படம்’. சினிமாவில் சாதிக்க போராடும் நான்கு இளைஞர்களின் கதைதான் இந்தப் படம். வரும் மார்ச்-20-ம் தேதியன்று வெளிவருகிறது.
இந்தப் படத்தில் மிஷ்கினின் ஸ்டைலில் குத்துப் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது பற்றி கூறிய இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல், “மிஷ்கின் சார் இனிமேல் தனது படங்களில் பாடல்களை தவிர்க்கப் போவதாக கூறியுள்ளார். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருக்குள் இருக்கும் இசை ஞானத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போலவே படமாக்கப்பட்டுள்ளது.
இந்த பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. அந்த பாடல் மிஷ்கின் சார் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது.
மிஷ்கின் சாரையே எழுதக் கேட்டு பின் பாடவும் கேட்டோம். இரண்டையும் எங்களை வாழ்த்தும் வகையில் செய்து கொடுத்தார் எனது குரு. ஒருவகையில் இது நான் அவருக்குச் செய்யும் குரு காணிக்கைதான்..! ” என்று நன்றியுணர்ச்சியுடன் கூறினார் இயக்குநர் வடிவேல்.









