full screen background image

“ஹன்ஸிகாவை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்..” –  டி. ராஜேந்தரின் உணர்ச்சிகரமான பேச்சு..!

“ஹன்ஸிகாவை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்..” –  டி. ராஜேந்தரின் உணர்ச்சிகரமான பேச்சு..!

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்துள்ள படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தை பி.டி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல்  சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.

டி.இமான் இசையில் இப்படத்தின் ‘அத்துவுட்டா’  என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பாடலை  இயக்குநர் டி.ராஜேந்தர் வெளியிட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.

IMG_9615

பாடலை  வெளியிட்டு இயக்குநர் டி.ராஜேந்தர் பேசும்போது.  ”நான் ‘புலி’ படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன். எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது.

அந்த விழாவில் நான் புலியை அப்படி அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள். ஆனால் சில டிவிகளில் விமர்சித்தார்கள். அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். புலி பற்றி அவ்வளவு  நான் பேசக் காரணம், ஈழத் தமிழர்களின் ஆதரவாளன் நான். அதனால்தான் அப்படி பேசினேன்.

நான் சிறு சேமிப்புத் துறையில் அமைச்சர் போல தலைவர் பதவியில் இருந்தேன். அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் இருந்தேன். அப்படி நல்ல  பதவிகளில் இருந்தபோதே ஈழத் தமிழர்களுக்காக பதவியை உதறியவன். புலிப் பேச்சை பலரும் விமர்சித்ததும் மன உளைச்சலுக்கு ஆளானேன். யாரை கிண்டல் செய்யவில்லை? கடவுளையே கிண்டல் செய்யவில்லையா..? நான் ஒன்றுமே இல்லை.

வாலு’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது எனக்கு ஓடி வந்து உதவியது இளைய தளபதி விஜய் மட்டும்தான். அப்போது அவர் பி.டி.செல்வகுமாரை தூதராக அனுப்பி உதவினார். அப்போது  உதவிய ஒரே இதயம் அவர் மட்டும்தான். ‘புலி’ படப் பிரச்சினையில்  ‘உடுக்கை இழந்தவன் கை போல’ நட்புக்காக உதவினேன். நட்புக்கு உதவுவது தவறா..? அதனால்தான் ‘புலி’  வெளியீட்டுக்காக   நானும் ஓடி வந்து போராடினேன். சண்டை போட்டேன். ‘புலி’ படம் வெளிவர நான் உதவினேன் என்று பி.டி.செல்வகுமாரைவிட கேரளாவை சேர்ந்த தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் சொன்னதில்தான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏனென்றால் தமிழ் சினிமாவில் நன்றி மறந்தவர்கள் அதிகம்.

இன்று  அடுக்கு மொழியில் பேச நான் இங்கே வரவில்லை. இன்று நல்ல தமிழை கேட்க ஆளில்லை. அன்று நான் ‘இது குழந்தை பாடும் தாலாட்டு.. இது இரவு நேர பூபாளம், இது மேற்கில் தோன்றும் உதயம்’ என்று எழுதினேன். அன்று தமிழை ரசித்தார்கள். தமிழ் தெரிந்தது. இன்று ‘உடுக்கை இழந்தவன் கை போல’  என்று  வள்ளுவர் சொன்னதைக்கூட தெரியாதவன் இருக்கிறான்.

நான் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு  பாடல்கள், இசை, எடிட்டிங், இயக்கம் என்று அனைத்தையும் செய்தவன். இன்று ஒரு பீப் பாடலால் ஏகப்பட்ட பிரச்சினைகள். ஒரு தந்தையாக எல்லாவற்றையும் மீறி வந்து கொண்டிருக்கிறேன். இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம்  அதனால்தான் இன்று கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீங்களும் என்னை மாதிரி சினிமாவில்  இருந்து விடாதீர்கள். கஷ்டப்படுவீர்கள்.

இப்படத்தில் நடித்துள்ள ஜீவா, சிபிராஜ்  இருவருமே  நல்ல பிள்ளைகள். காரணம் அவர்கள் அப்பாக்களை  எனக்குப் பிடிக்கும்.

IMG_9585

இந்த ஹன்சிகா நல்ல பொண்ணு. ஒரு குழந்தை மாதிரி. இந்தப் பொண்ணோட சிரிப்பே ஒரு அழகு. எனக்காக ‘வாலு’ படத்தில் முடிக்காமல் இருந்த ஒரு பாடல் காட்சியில் நடிக்க அழைத்தவுடன் எதுவும் கேட்காமல் ஓடி வந்து அத்தனை நாட்களும் அமைதி காத்து எனக்காக நடித்துக் கொடுத்தார். இதற்காக இந்தப் பொண்ணுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்தப் பொண்ணு செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்…” என்றார்.

Our Score