இயக்குநர் சுசி கணேசன் மீண்டும் தமிழில் படம் இயக்க வருகிறார்.
2002-ம் ஆண்டு ‘பைவ் ஸ்டார்’ என்ற படத்தை இயக்கியதன் மூலமாக தனது இயக்குநர் பணியை தமிழ்த் திரையுலகத்தில் துவக்கினார் மணிரத்னத்தின் சீடரான இயக்குநர் சுசி கணேசன்.
2003-ம் ஆண்டு ‘திருட்டுப் பயலே’, 2004-ம் ஆண்டு ‘விரும்புகிறேன்’ மற்றும் 2009-ம் ஆண்டு ‘கந்தசாமி’ என்ற நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இதன் பின்பு முழுமையாக பாலிவுட் பக்கம் ஒதுங்கினார் சுசி கணேசன். ஹிந்தியில் இதுவரையிலும் 2 படங்களை இயக்கியிருக்கிறார் சுசி கணேசன். தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.
இதையடுத்து தற்போது அடுத்து தமிழில் தான் இயக்கவிருக்கும் படத்தின் தலைப்பினை சுசி கணேசன் அறிவித்துள்ளார். அந்தப் புதிய தமிழ்ப் படத்திற்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார்.
1980-களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க, முழுக்க உண்மை சம்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது.
இந்தப் படத்தை சுசி கணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ளளது.
இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத புதுமையான முயற்சிகளோடு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.