இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டியிருப்பதோடு, சூர்யாவுக்காக கதை வைத்திருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
தீபாவளியையொட்டி ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் வெளியாகியுள்ளது. படம் வெளியான இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது ‘அண்ணாத்த’ படம்.
இருந்தாலும் இந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் கலவையாகவே வந்து கொண்டிருக்கின்றன. டிவி சீரியல் போல் உள்ளது என்றும், சிவாவின் முந்தைய படங்களின் கதைகளில் கொஞ்சம், கொஞ்சம் கலந்து இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார் என்றும் பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ”சூர்யா சாரின் ‘சூரரைப் போற்று’, ’ஜெய் பீம்’ இரண்டு படங்களையும் பார்த்தேன். சூப்பராக உள்ளது. இரண்டும் மிகச் சிறந்த படங்கள். மிகச் சிறந்த இயக்குநர்கள். மிகச் சிறந்த நடிப்பைும் வழங்கியுள்ளார் சூர்யா சார். ’ஜெய் பீம்’ படத்தில் சூர்யா சார், மணிகண்டன் சார் அனைவரது நடிப்பும் மிகவும் பிடித்திருந்தது. அடுத்ததாக சூர்யா சாருடன் பணிபுரிய நான் ஆவலுடன் இருக்கிறேன். அவருக்காக செம சுவாரசியமான கதை தயார் செய்து வைத்துள்ளேன்…” என்று சொல்லியிருக்கிறார்.
‘அண்ணாத்த’ படத்திற்கு எழுந்திருக்கும் விமர்சனங்களினால் இனி ரஜினி பக்கமும் போக முடியாது… அஜீத் பக்கமும் போக முடியாத நிலை உருவாகியிருப்பதால் சூர்யா பக்கம் தூண்டிலை வீசிப் பார்ப்போம் என்றுதான் இயக்குநர் சிவா இப்படி சொல்லியிருப்பதாக தமிழ்த் திரையுலகத்தினர் கிசுகிசுத்து வருகிறார்கள்.