இயக்குனரும் தயாரிப்பாளருமான சரண் சமீபத்தில் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது தெரிந்த்தே.. இவர் மீது புகார் கொடுத்த சிவகாசி சபையர் லித்தோ பிரஸ்ஸின் பங்குதாரர் ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில்தான் சரண் கைது செய்யப்பட்டார்.
சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு அவர் தயாரித்த இரண்டு தமிழ்ப் படங்களுக்கு போஸ்டர் அடித்தவகையில் சிவகாசியில் உள்ள சபையர் லித்தோ பிரஸ்ஸுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையில் பிரச்சினை எழுந்து அதன் விளைவாகத்தான் சரண் கைது செய்யப்பட்டார்.
சரணின் கைதுக்கு அப்போதே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. ஞானசேகரன் எம்ப்ட்டி செக்கில் கூடுதல் தொகையை நிரப்பி வங்கியில் டெபாசிட் செய்த்தால்தான் செக் ரிட்டர்ன் ஆனது. இயக்குநர் சரண் அவருக்குக் கொடுக்க வேண்டிய தொகையைவிடவும் கூடுதலாக நிரப்பியது ஞானசேகரனின் குற்றம் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டின அமைப்புகள்.
இந்தப் பிரச்சினையில் இரு தரப்புமே சமாதானமாகப் போக விரும்பியதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் ஒரு சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று பிலிம் சேம்பரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் சரண் மற்றும் சிவகாசி சபையர் லித்தோ பிரஸின் உரிமையாளரான ஞானசேகரனும் இதில் கலந்து கொண்டனர்.
இயக்குனர் சரண் நெல்லையில் படப்பிடிப்பில் இருக்கும்போது கைது செய்யப்பட்ட விதம் தவறு என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஞானசேகரன் சரணிடம் பாக்கி பணத்தை வாங்குவதுதான் நோக்கம் என்றாலும் அவரை கைது செய்த விதம் முறையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வால் சரண் மன உளைச்சலுக்கு ஆளானதை உணர்ந்து ஞானசேகரன் இந்தக் கூட்டத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மேலும் சரண் மீது நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாகவும் ஞானசேகரன் உறுதியளித்தார்.
மேற்படி உறுதிமொழிகளையடுத்து, கூட்டமைப்பினர் முன்னிலையில் இயக்குனர் சரண், ஞானசேகரன் ஆகியோர் முழு மனதுடன் சமரச ஒப்பந்த்ததை ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர்.
இதன் பின் ‘இன்னும் சில தயாரிப்பாளர்கள் தங்களது நிறுவனத்திற்குத் தர வேண்டிய பாக்கி கணக்கு விவரங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் தெரிவிக்கின்றேன்’ என்றும், ‘சங்க நிர்வாகிகள் இதேபோல் மத்தியஸ்தம் செய்து, பாக்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து தரும்படியும்’ கேட்டுக் கொண்டார் ஞானசேகரன்.
‘இவருடைய கோரிக்கைக்கு சங்கம் முழு ஒத்துழைப்பு தரும்’ என்று சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ‘இனிமேல் போஸ்டர்கள் அச்சடிக்கும் போதும், பணத் தொகைக்கான பில் போடும்போதும் தயாரிப்பாளர்கள் கம்பெனியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினருக்குமிடையில் பிரச்சினை ஏற்படும் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற ஷரத்து அந்த ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.