திருமாருதி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மாருதி T.பாலகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘விரைவில் இசை’.
திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதைதான் இந்த ‘விரைவில் இசை’ திரைப்படம். வெவ்வேறு திசையில், போக்கில் செல்கிற இரு வேறு காதல் கதைதான் என்றும் இந்தப் படத்தைக் கூறலாம்.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். மகேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பரவலாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரன் மிஸ்டர் மகேந்திரனாகிய பின்பு ‘விழா’ படத்திற்கு பின்பு நடிக்கும் படம் இது. அவருடன் ‘உடும்பன்’ நாயகன் திலீப்பும் சம பங்கு வேடமேற்கிறார். ஒரு நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணாவும், இன்னொரு நாயகியாக அர்ப்பணாவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டியே, மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகனான சஞ்சய் சங்கர் இதில் முழு நீள நகைச்சுவை நடிகராக அறிமுகமாவதுதான்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் முன்னிலையில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் வெளியிட தயாரிப்பாளர் கேயார், மற்றும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இருவரும் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் எஸ்.பி. முத்துராமன் பேசும்போது, “இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது சிரமம். இந்த நிலையில் இங்கே புதிதாக படம் தயாரிக்க வந்துள்ள தயாரிப்பாளர் திருமாருதி பிக்சர்ஸ் டி.பாலகிருஷ்ணனை வரவேற்கிறேன்.
நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கியிருக்கிறேன். ரஜினியிடம் அன்று கண்ட அதே ஸ்டைல், அதே வேகம், துறுதுறுப்பை இந்த மகேந்திரனிடம் காண்கிறேன். அந்த வேகம் ஆர்வம், ஈடுபாடு இவரிடமும் இருக்கின்றன. இவரும் நன்றாக உழைத்து வெற்றி பெற வேண்டும்.
நான் 70 படங்கள் இயக்கியிருக்கிறேன் நான் இயக்கிய முதல் படமான ‘கனிமுத்து பாப்பா’ படத்தின் நாயகர்களாக முத்துராமன், ஜெய்சங்கர் இருவரும் நடித்தார்கள். முதல் படத்தில் நடித்தபோது அவர்கள் பரபரப்பாக இருந்தார்கள். நான் அவசரம், அவசரமாக எடுத்தேன். அப்போது அவர்கள் என்னைக் கூப்பிட்டு ‘அவசரப்பட வேண்டாம் ஸார். நீங்க நினைக்கிற மாதிரியே நிதானமாக இருங்க. தேதிகள் கூடுதலாக தேவையெனில் தருகிறோம்…’ என்றார்கள். அதற்கு பின்பு நானும் மிக நிதானமாகவே அந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட்டேன். அந்தப் படத்தின் வெற்றிதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு அவர்களும் ஒரு காரணம்.
ஜெய்சங்கர் நல்ல மனிதர். பலருக்கும் பணத்தை வாரி வழங்கியவர்.. நான் இயக்கிய முதல் கலர் படம் ‘துணிவே துணை.’ இந்தப் படத்தின் நாயகனும் ஜெய்சங்கர்தான். அவர் நடித்த சில படங்கள் வெளியீட்டுச் சிக்கலில் இருந்தது தனது சம்பளத்தில் பாதியை விட்டுக் கொடுத்து பாதியை மட்டுமே வாங்கிக் கொண்டார். அந்த அளவுக்கு நல்லவர் ஜெய்சங்கர்.
அவருடைய மகன் இந்தப் படத்தில் இத்தனையாண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறார். இவரும் அவரைப் போலவே மிகப் பெரிய வெற்றியினைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார் எஸ்.பி.முத்துராமன்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேயார் பேசும்போது, “ஜெய்சங்கர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை வாழ வைத்தவர். அவர் பல தயாரிப்பாளர்களின் ரிட்டர்ன் செக்குகளை வைத்திருந்தவர். இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு உதவியவர். மனித நேயமுள்ளவர். இப்போது அவரது மகன் நடிக்க வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.