பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 61.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளைச் சாவடைந்த நிலையில் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் காலமானார்.

எஸ்.பி.ஜனநாதன் முதன்முதலாக கார்த்திக் நடித்த ‘சோலைக்குயில்’ படத்தில்தான் துணை இயக்குநராகப் பணியாற்றி தமிழ்ச் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்பு நிறைய படங்களில் துணை, இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2003-ம் ஆண்டு ‘இயற்கை’ என்ற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அதையடுத்து 2006-ம் ஆண்டு ‘ஈ’, 2009-ம் ஆண்டு ‘பேராண்மை’, 2015-ம் ஆண்டு ‘பொறம்போக்கு என்னும் பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

2015-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியிருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’ என்ற படத்தை எழுதி, இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் கடும் உழைப்புடன், ஓய்வில்லாமல் உழைத்ததினால்தான் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜனநாதன்.

மூளைச் சாவடைந்ததால் வெண்டிலேட்டர் மூலமாக உயிர்ப்புடன் அவரை வைத்திருந்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தார்கள். இன்று காலை 10.07 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளராக அவர் இருந்த காலக்கட்டத்தில் துணை இயக்குநர்களுக்குத் தேவையான பல உதவிகளையும், வழிமுறைகளையும் செய்திருந்தார் ஜனநாதன்.

ஜனநாதன் இயக்கிய முதல் படமான ‘இயற்கை’ படம் 2003-ம் வருடத்தின் சிறந்தத் தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய மறைவு தமிழ்த் திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

Our Score