லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘அம்மணி’ டிரைலரை வெளியிட்டார் எஸ்.ஜே.சூர்யா 

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘அம்மணி’ டிரைலரை வெளியிட்டார் எஸ்.ஜே.சூர்யா 

பொதுவாகவே "உனக்கு நான்... எனக்கு நீ...." என்ற வசனத்தை காதல் காட்சிகளிலும், காதலை மையமாக கொண்டு உருவான திரைப்படங்களிலும்தான் ரசிகர்கள் கேட்டிருப்பார்கள்.

ஆனால் இதே வசனத்தோடு ஆரம்பமாகும் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'அம்மணி' படத்தின் டிரைலரானது, ரசிகர்களை காதலில் இருந்து வேறொரு உணர்ச்சிகரமான பாதையில் பயணிக்க வைக்கிறது.

ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கையை கருவாக கொண்டு உருவாகி இருக்கும் 'அம்மணி' திரைப்படத்தை 'டேக்  என்டர்டைன்மெண்ட்' சார்பில் வெண் கோவிந்தா தயாரித்து இருக்கிறார்.

87 நொடிகள் ஓடக் கூடிய இந்த 'அம்மணி' திரைப்படத்தின் டிரைலரை, நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா கடந்த செப்டம்பர் 17-ம் தேதி அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.      

"முழுக்க, முழுக்க கதைக் களத்தின் மீது நம்பிக்கையை வைத்து வெளிவந்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றிருக்கின்றன.  'காக்கா முட்டை’, ‘ஜோக்கர்’ போல சில திரைப்படங்கள் அதற்கு சிறந்த உதாரணம். தற்போது 'அம்மணி' படத்தின் டிரைலரை பார்க்கும்பொழுதும், அந்த படத்தின் பாடல்களை கேட்கும்பொழுதும் நான் அப்படித்தான் உணர்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு வலுவான கதையம்சம் நிறைந்த திரைப்படத்தை தேர்வு செய்ததற்கு, என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான வெண் கோவிந்தா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல் இத்தகைய சிறப்பம்சமான கதை களத்தோடு களம் இறங்கி இருக்கும் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

'சாலம்மா' மற்றும் 'அம்மணி' ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களை பெரிய திரையில் காண நான் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்...." என்றார் எஸ்.ஜே.சூர்யா.