தனது மகனான நடிகர் விஜய்யிடம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
2 மாதங்களுக்கு முன்பாக தனது மகனும், நடிகருமான விஜய்யின் பெயரில் ஒரு புதிய கட்சியைத் துவக்குவதாகச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதையடுத்து அப்பா துவங்கியுள்ள கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது. அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பிறகு அந்தக் கட்சியில் செயலாளராக பொறுப்பேற்று கையெழுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், விஜய்யின் அம்மாவுமான ஷோபா சந்திரசேகர் அந்தப் பொறுப்பில் விலகிவிட்டதாக அறிவித்தார்.
அதோடு கடந்த 2 ஆண்டுகளாகவே எஸ்.ஏ.சியும், விஜய்யும் பேசிக் கொள்வதில்லை என்று அவரது அம்மா ஷோபாவே பேட்டியளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சில நாட்கள் அமைதி காத்திருந்த எஸ்.ஏ.சி. மீண்டும் தனது பெயரில் ஒரு கட்சியைத் துவக்குவதாக அறிவித்தார். இந்தக் கட்சியின் அறிவிப்பு நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களையும், செயலாளர்களையும் அழைத்திருந்தார்.
இப்போதும் விஜய்யின் ரசிகர்கள் யாரும் இந்தக் கட்சியைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இருந்ததால் அதிகமாக கட்சி நடவடிக்கைள் பற்றித் தெரியாமல் இருந்தது.
இப்போது திடீரென்று தான் செய்ததெல்லாம் தவறுகள் என்றால் அதற்காக தனது மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்பதாக பகிரங்கமாக ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சி.
அந்தப் பேட்டியில் இயக்குநர் எஸ்.ஏ.சி. பேசும்போது, “எந்தக் காலத்துலேயும் புள்ளைக கெட்டுப் போகணும்ன்னு தகப்பனுங்க நினைக்க மாட்டாங்க. குறிப்பா நான் நினைக்கவே மாட்டேன். நான் உனக்காகவே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். உன்னையேதான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.
நான் செஞ்ச ஒரு சின்ன விஷயம்.. சின்னதோ.. பெரிசோ.. மறந்திருச்சு.. மன்னிச்சிரு. நீ என்னை என்னிக்கு மன்னிக்குறியோ அன்னிக்கு அது புரியும். ஒரு கூண்டுக்குள்ள இருக்குற. அந்தக் கூண்டைவிட்டுவிட்டு வெளில வா. உள்ள சிக்கிக்கிட்டீன்னா கஷ்டம்.
ஒரு அப்பனா சொல்றேன். நான் நடிக்கலை. நடிக்கத் தெரியாது. ஒரு தகப்பனா சொல்றேன். அப்பன் புள்ளைககிட்ட நடிக்க மாட்டான். எல்லா புள்ளைகளும் நல்லாயிருக்கணும்ன்னுதான் அப்பாமார்கள் நினைப்பாங்க. நான் செஞ்சது அத்தனையும் வரலாறா திரும்பி வரும். நான் செஞ்ச தப்பை ஒரு அப்பனா சொல்றேன்.. அன்னிக்கே மன்னிப்பு கேட்டுட்டேன். இன்னைக்கு திருப்பியும் கேக்குறேன்.. என்னை மன்னிச்சிரு…” என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
மகன், அப்பாவை மன்னிப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும்.