‘குற்றப் பரம்பரை’ பட சர்ச்சை இயக்குநர் பாலாவின் பேட்டிக்கு பிறகு மேலும் சூடு பிடித்திருக்கிறது.
இயக்குநர் பாலா விடுத்த எச்சரிக்கை செய்திக்கு பதிலளிக்கும்விதமாக இயக்குநர் ரத்னகுமார் நேற்று எம்.எம். தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அவர் பேசும்போது, “இயக்குநர் பாலா ‘என்னை யார் என்றே தெரியாது’ என்று பேசியிருக்கிறார். என்னை யார் என்று தெரியாதவர்களுக்காக என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காக என்னைப் பற்றிச் சொல்கிறேன். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘கடல் பூக்கள்’ ஆகிய படங்களுக்கு நான்தான் கதை எழுதினேன். இதில் ‘கடல் பூக்கள்’ படத்திற்காக சிறந்த கதைக்கான தேசிய விருதான ‘சாந்தாராம் விருது’ எனக்குக் கிடைத்திருக்கிறது.
‘குற்றப் பரம்பரை’ கதை நான் எழுதியது. ஆங்கிலேயர்கள் அவர்களது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த கைரேகைச் சட்டத்தை எதிர்த்து உசிலம்பட்டியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. 1920-ல் பெருங்காமநல்லூரில் நடந்த கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டார்கள். அன்று அந்தப் போராட்டத்தில் ரத்தம் சிந்தி உயிர் நீத்தவர்களில் ஒருவர் என் தாத்தா.
ஆக.. அந்தப் போராட்ட வீரர்களின் பரம்பரையைச் சேர்ந்தவன் நான் என்பதால் இந்தக் கதையை எனது கடமையாக நினைத்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, பல இடங்களுக்குச் சென்று தகவல்களை திரட்டி ‘குற்றப் பரம்பரை’ என்ற பெயரில் எழுதினேன். 1993-ல் அந்தக் கதையை தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவும் செய்து வைத்திருக்கிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அப்போதே இதனைப் படமாக்க முன் வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், சரத்குமாரும் இதில் நடிப்பதாக இருந்தனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலும் பதிவானது. பின்னர் நடிகர் திலகத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.
அப்போது அந்தப் படத்தின் கதை உருவாக்கத்தின்போது என்னுடன் டிஸ்கஷனில் கலந்து கொண்டவர்தான் இந்த வேல.ராம்மூர்த்தி. அந்தப் படம் எடுக்கத் தாமதமாகி கிடப்பில் போட்டவுடன், அந்தக் கலந்துரையாடலின்போது நாங்கள் பகிர்ந்து கொண்ட பல சம்பவங்களைத் தொகுத்து ‘கூட்டாஞ்சோறு’ என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் வேல.ராம்மூர்த்தி. இதே ‘கூட்டாஞ்சோறு’ என்கிற புத்தகம்தான் சமீபத்திய மறுபதிப்பில் ‘குற்றப் பரம்பரை’ என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. ஆக அந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள், அனைத்தும் என்னுடையதுதான்.
அந்தக் கதைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு மேலும் கொஞ்சம் கற்பனை கலந்து தான் படம் எடுக்கப் போவதாக பாலா சொல்கிறார். எப்படியிருந்தாலும் அது என்னுடைய கதைதானே..?
நான் எழுதிய ‘குற்றப் பரம்பரை’ கதையின் கிளைமாக்ஸில் ஒரே வெட்டில் தலை துண்டானது என்று எழுதியிருக்கிறேன். வேல.ராமமூர்த்தி இருபது வெட்டு வெட்டுவதாக எழுதியிருக்கிறார். இது கதை திருட்டில்லாமல் வேறென்ன..?
2002-ல் ‘கூட்டாஞ்சோறு’ வெளியானபோதே வேல.ராம்மூர்த்தியிடம் இது பற்றிக் கேட்டேன். ‘அண்ணே.. நான் எழுதினது வேறண்ணே..’ என்று சொல்லி சமாளித்தார். ‘கூட்டாஞ்சோறு’ன்னு பெயர் வைத்ததுகூட பரவாயில்லை.. இப்போது ‘குற்றப் பரம்பரை’ன்னு ஏன் பெயர் மாற்றம் செய்தார்கள்..? இப்போது இதை திரைப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே திட்டமிட்டு ‘குற்றப் பரம்பரை’ என்று புத்தகத்துக்கு மறு பெயரிட்டு வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்.
இது பற்றி முதலிலேயே பாலாவிடம் கேட்டபோது, அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. எழுத்தாளர்கள் சங்கத்தில் நான் முறையிட்டேன். அவர்கள் பாலாவை இது தொடர்பாக விசாரிக்க நினைத்தபோது, அவர்களால் பாலாவையோ, வேல.ராம்மூர்த்தியையோ தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
இயக்குநர் பாரதிராஜா பாலாவிடம் கேட்டபோது அந்தக் கதையை நான் எடுக்கவில்லை என்று அவர் மறுக்கவே இல்லை. அதனால்தான் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. இதன் பிறகுதான் பாரதிராஜா, ‘என் பாலா என் எச்சிலை திங்கமாட்டான்’ என்று பேட்டியளிக்க வேண்டி வந்த்து. இதேபோல் இது பற்றி வேல.ராம்மூர்த்தியிடம் கேட்டபோது, ‘குற்றப் பரம்பரை, கதை நாய்க்குக்கூட தெரியும்’ என்று சொல்கிறார். பாரதிராஜாவை இப்படி வேல.ராம்மூர்த்தி மூலமாக திட்ட வைத்து வேடிக்கை பார்க்கிறார் பாலா.
இயக்குநர் பாலா தான் எடுத்த ‘அவன் இவன்’, ‘பிதாமகன்’ படங்களைப் போல ‘குற்றப் பரம்பரை’யையும் எடுத்து அந்த வரலாற்று காவியத்தை கேவலப்படுத்திவிடக் கூடாது. பெருங்காமநல்லூர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வாரிசுகள்கூட இந்தக் கதையை பாரதிராஜாதான் படமாக்க வேண்டும் என்கிறார்கள்.
இப்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ கதையைப் படமாக்க வேண்டுமென்றால்கூட இயக்குநர் பி.ஆர்.பந்தலு, உரையாடல் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி, கதை வடிவம் கொடுத்த ம.பொ.சிவஞானம் ஆகியோரின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கித்தான் படமாக்க முடியும். இதுதான் இப்போதைய சட்டம்.
என் கதையைத் திருடியவர்கள் விரைவில் அகப்படுவார்கள். என்னுடைய 30 வருட உழைப்பை யாரோ ஒருவர் சுரண்டிவிட்டுப் போக நான் அனுமதிக்க மாட்டேன். என் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆதாரம் இருக்கிறது. அதனால் தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் எனக்கு நியாயம் வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என்னுடைய கதை, வசனத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘குற்றப் பரம்பரை’ படத்துக்கு பூஜை போட்டுவிட்டோம். மிக விரைவில் படப்பிடிப்பை துவக்கவிருக்கிறோம்.
எனக்கும் என் குடும்பத்திற்கும் தமிழக காவல்துறையும், நீதித் துறையும் பாதுகாப்பளிக்கும் என்றும் நம்புகிறேன்..” என்றார்.