“கே.பாலசந்தரின் பிறந்த நாளை இயக்குநர்கள் தினமாகக் கொண்டாட வேண்டும்..”

“கே.பாலசந்தரின் பிறந்த நாளை இயக்குநர்கள் தினமாகக் கொண்டாட வேண்டும்..”

‘இயக்குநர் சிகரம்’ மறைந்த திரு.கே.பாலசந்தர் அவர்களின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று மாலை சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை இயக்குநர் சிகரத்தின் உதவியாளரான மதுரை என்.மோகன் முன்னெடுத்து நடத்தினார்.

இவ்விழாவில், இயக்குநர் சிகரத்தின் சிஷ்யரான சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் விவேக், டெல்லி கணேஷ்,  நடிகை சச்சு, இயக்குநர்கள் மனோபாலா, பேரரசு, ரமேஷ் கண்ணா, சுரேஷ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.பி.உதயகுமார், அஸ்லாம், ஐந்து கோவிலான், எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிகர், நடிகைகளும் கவிதாலயா மற்றும் மின் பிம்பங்களில் பணியாற்றிய பல ஊழியர்களும், திரைத்துறையைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு இயக்குநர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

r.v.udhayakumar-2

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் பேசும்போது, "என் வாழ்க்கையில் நான் இயக்கிய திரைப்படங்களைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டிய ஒரேயொரு இயக்குநர் கே.பாலசந்தர்தான்.

நான் இயக்கிய ‘கிழக்கு வாசல்’ படத்தைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

r.v.udhayakumar-1

அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘பச்ச மலைப் பூவு ஒண்ணு’ என்ற பாடலில் ரேவதி ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போலவும், கார்த்திக் பாடலை பாடிக் கொண்டே செல்வது போலவும் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் ஊஞ்சலில் ரேவதி ஆடும்போது அதே வேகத்தில் அதே திசையில் கேமிராவும் ஆடுவதைப் போல ஷூட் செய்திருந்தேன். இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு 'எப்படிய்யா அதை எடுத்த..?' என்று கேட்டுப் பாராட்டியிருந்தார். இதை என்னால் மறக்க முடியாது.

r.v.udhayakumar-3

உலகத்தில் ‘ஆண்கள் தினம்’, ‘பெண்கள் தினம்’ என்றெல்லாம் இருப்பதை போல ‘இயக்குநர்கள் தினம்’ என்பதும் இருக்க வேண்டும். அது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பிறந்த நாளாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளிடம் பேசி அரசு ஆணையாகவே இதனை வெளிக்கொணர வேண்டும்…" என்றார்.