“என்னையும் அடிச்சிராதீங்க ஸார்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் வேண்டுகோள் வைத்த ரஜினி..!

“என்னையும் அடிச்சிராதீங்க ஸார்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் வேண்டுகோள் வைத்த ரஜினி..!

இயக்குநர் எஸ் .விஜயசேகரனின் இயக்கத்தில் உருவான ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று மாலை லீ மேஜிக் தியேட்டரில் நடைபெற்றது.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போஸ்டரை வெளியிட, இயக்குநர் தளபதி அதனை பெற்றுக் கொண்டார்.

அப்போது இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த விழாவில் பேசிய சிலர் #MeToo குறிப்பிட்டார்கள். இது என்ன #MeToo..? ஏ டூ..? பி டூ..? இது என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே எனக்குப் புரியவில்லை.

IMG_0270

ஒரு ஆணும், இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வது சரியானதே என்றது உச்சநீதிமன்றம். ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம். ஆனால் அதே சமயம் ஒரு ஆண், ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும்..? அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லின்க்கே விடுபட்டு போகும். இது இயற்கைக்கு எதிரானதே..?

நான் படங்களை இயக்கிய காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் எனக்கு வந்ததில்லை. காரணம் எனக்கு ரொம்பவே கோபம் வரும். கோபம் வந்தால் யாராக இருந்தாலும் பட்டென்று அடித்துவிடுவேன். நல்லா நடிக்கலைன்னா எனக்கு ரொம்ப கோபம் வரும்.. படப்பிடிப்புத் தளத்தில் சில நடிகைகளை இதுபோல் அடித்திருக்கிறேன். இதனாலேயே எந்த நடிகையும் கடைசிவரையிலும் என் பக்கத்திலேயே வர மாட்டார்கள்.

‘பொன்னுமணி’ படத்தின் ஒரு காட்சியில் சவுந்தர்யாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட 11 டேக்வரைக்கும் போயும் நான் எதிர்பார்த்ததுபோல நடிப்பு வரவில்லை. ரொம்பவே கோபம் வந்து சவுந்தர்யாவை அடித்துவிட்டேன். அடித்த வேகத்தில் அந்தப் பெண் கீழே விழுந்துவிட்டார். பின்பு சட்டென எழுந்து சகஜம் போல இருந்தார். நானும் கொஞ்சம், அப்படி இப்படி இருந்தேன். ஆனால் நான் அடித்த வேகத்தில் சவுந்தர்யாவின் கன்னம் வீங்கிவிட்டது. இதைப் பார்த்த நடிகர் கார்த்திக் எனக்குப் பதிலாக பேக் அப் என்று சொல்லிவிட்டார். இதுபோல் செய்தால் எந்தப் பெண் என் பக்கத்தில் வருவார்..?

என்னுடைய இந்தக் கோபம் பற்றி யாரோ ரஜினி ஸாரிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் நானும் சேர்ந்து படம் செய்யலாம் என்று பேசினோம். ‘நாம ரெண்டு பேரும் ஒரு படம் பண்ணணும் ஸார்’ என்றார் ரஜினி. ‘நானும் சரிங்க ஸார். செய்வோம்’ என்றேன். ‘உங்களுக்கு எந்த மாதிரியான தயாரிப்பாளர் வேணும்?’ என்றார்.

நானும் ஏவி.எம்., விஜயா-வாஹினி, சத்யா மூவிஸ் மாதிரி பெரிய நிறுவனங்களை சொன்னேன். ‘சரி.. உங்க விருப்பப்படியே செய்வோம்’ என்றார். பின்பு, ‘ஸார் உங்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப கோவப்படுவீங்களாம்.. அடிச்சிருவீங்கன்னுல்லாம் சொல்றாங்களே..?’ என்றார். நானும், ‘ஆமாம் ஸார்.. நல்லா நடிக்கலைன்னா எனக்குக் கோவம் வரும். பட்டுன்னு அடிச்சிருவேன்’ என்றேன். உடனே ரஜினி ‘என்னையெல்லாம் அடிச்சிராதீங்க ஸார்’ என்றார் பட்டென்று..! நானும் சிரித்துவிட்டேன்..!

என் இயக்கத்தில் நடித்த  ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த், கார்த்திக் எல்லோருமே கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு அப்படி என்ன ராசின்னு தெரியலை..!

இப்போது சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தரமான படங்களாக எடுங்கள். மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள். நிச்சயம் தியேட்டர்களை தருவார்கள்.

நான் வரி விலக்கு அளிக்கும் கமிட்டியில் இருந்தபோது அதற்காக பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை. சினிமாக்காரனான என்னாலேயே பத்து நிமிடம்கூட அந்தப் படத்தைப் பார்க்க முடியலை. அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான்..? அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்..?

அப்படியொரு நாள் ஒரு படத்தைப் பார்த்தேன். படம் பார்த்து முடிச்சிட்டு வெளியே வந்து யாருய்யா அந்த புரொடியூஸர்ன்னு கேட்டேன். ஒருத்தர் ஓடி வந்து நான்தான் ஸாருன்னு சொன்னார். அவரைப் பத்தி விசாரிச்சப்போ அதிர்ச்சியாயிருந்தது.

அவர் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கிய ஒரு ஆசிரியர். தன்னுடைய அத்தனை சொத்துக்களையும் விற்றுத்தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். ஒரு பைசாகூட வராது என்கிற நிலைமை. இந்த லட்சணத்துல அந்தப் படத்தோட இயக்குநர் தனக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் தரலைன்னு சங்கத்துல புகார் கொடுத்திருக்கிறதா சொன்னார். அன்றைக்கு படத்தை பிரிவியூ போட்டதுக்குக்கூட அவரால காசு கட்ட முடியலை. நான் என் வீட்டுக்குப் போன் செய்து சொல்லி என் வீ்ட்டம்மா டிரைவர்கிட்ட 3000 ரூபாய் கொடுத்துவிட்டாங்க. அந்தப் பணத்தை வைத்து நான்தான் அந்த மீதிப் பணத்தைக் கட்டினேன். இப்படி ஒவ்வொரு தயாரிப்பாளரையும் ஏமாற்றினால் தமிழ்ச் சினிமா துறை எப்படி நல்லாயிருக்கும்..?

கடைசீல இந்த பத்திரிகைகாரங்கதான் ரொம்பப் பாவம். எவ்வளவு குப்பை படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து அந்தத் தண்டணையை அனுபவித்தே தீருகிறார்கள். படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே ஓடிப் போய் விடுகிறார். பத்திரிக்கையாளர்களும் இந்த சீனுக்கு, அடுத்த சீன் நல்லா இருக்கும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசிவரைக்கும் பார்த்துவிடுகிறார்கள். பார்க்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களை நினைத்தால்தான் எனக்கு பாவமாக இருக்கிறது…” என்றார்.

விழாவில் இயக்குநர் தளபதி, நடிகர்கள் நபி நந்தி, சரத், சுவாசிகா, எலிசபெத், சுப்புராஜ் இயக்குநர் எஸ்.விஜயசேகரன்,  இசையமைப்பாளர் மரியா மனோகர் ஆகியோரும் பேசினார்கள். 

 

Our Score