full screen background image

“ஹீரோக்களை திட்டாதீங்க..” – தயாரிப்பாளர் ராஜனுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் அட்வைஸ்..!

“ஹீரோக்களை திட்டாதீங்க..” – தயாரிப்பாளர் ராஜனுக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் அட்வைஸ்..!

தமிழ்ச் சினிமா ஹீரோக்கள் பலரும் பல சந்தர்ப்பங்களில் பல சங்கத்தினருக்கும் உதவிகளை வழங்கியிருக்கிறார்கள்” என்றார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற ‘சிட்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இதைத் தெரிவித்தார்.

இயக்குநர் R.V.உதயகுமார் மேலும் பேசும்போது, “படம் என்பது வேறு; குணாதிசியம் வேறு. ஒரு மென்மையானவன், வன்மையானவனாகிறான் என்பதை படமாக எடுக்கலாம். அதுதான் இந்தப் படத்திலும் காட்டபட்டுள்ளது. ஒரு அப்பாவி எப்படி சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

தயாரிப்பாளர் கே.ராஜன் ஹீரோக்களை அதிகமாக திட்டுகிறார். அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போன்று சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை. என்னை கூட்டி போய் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த். யாரும் பசியுடன் இருப்பது விஜய்காந்துக்குப் பிடிக்காது. அவர்களை இழுத்துப் போய் சாப்பாட்டு போட்டவர் விஜயகாந்த்.

கொரோனா காலத்தில் இயக்குநர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, “எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கிறர்கள்..?” என கேட்டு உதவியவர்.  எழுத்தாளர் சங்கத்திற்கும் உதவினார். கேட்காமலயே உதவிய இன்னொருவர் அஜித் குமார். தோல்வி படத்திற்கு பிறகு அதே நிறுவனத்திற்கு படம் செய்து கொடுப்பவர் அவர்.  சிலருக்கு தான, தர்மங்கள் பற்றி தெரியவில்லை. நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலர் உதவியிருக்கிறார்கள். அவர்களை வாழ்த்த வேண்டும்.

வாழ்ந்து பார்த்தால்தான் இயக்குநராக முடியும். சில டூபாக்கூர் இயக்குனர்கள் உள்ளனர். சிவாஜி சார், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிரபு என்னை அழைத்து சிவாஜி சாரிடம் கதை சொல்ல சொன்னார். நான் முதல் நாள் பார்த்த ஆங்கில படத்தின் கதையை கூறினேன். அதை கேட்ட அவர், இப்போதெல்லாம் பலர் சப்டில் ஆக்டிங், நேச்சுரல் ஆக்டிங் என சொல்கிறார்கள். நான் அதிகமாக நடித்துவிட்டேன், நான் மாற்றி நடிக்க வேண்டும் என்றார். சாகும் தருவாயிலும் நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த ஒப்பற்ற கலைஞன் அவர்.

இப்பொழுது சினிமாவை பிசினஸ் ஆக்கிவிட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குநராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்தப் படம் தமிழ் தயாரிப்பாளர், மலையாள குழுவினருடன் இணைந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார். முன்பெல்லாம் எல்லா மொழி படங்களுமே சென்னையில்தான் எடுக்கப்பட்டது. இப்பொழுதுதான் பான் இந்தியா என்ற வார்த்தை உள்ளது. ஆனால் முன்னரே அப்படித்தான் இந்திய சினிமாவில் திரைப்படங்கள் உருவாகின. அதை மாற்றியவர்கள் வியாபாரிகள்தான்.

இசையமைப்பாளர் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநரும்தான் கூற வேண்டும். இசையமைப்பாளர் பாடல்களை சிறப்பாக உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப் படம்தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ஹீரோயின் பெயரில் என் பெயரும் உள்ளது.  அதனால் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

 
Our Score