1990-களில் வெளிவந்த ‘புலன்விசாரணை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தயாரித்த இந்த ‘புலன்விசாரணை’ திரைப்படத்தில்தான் பிரபல இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்குநராக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இந்தப் படமும் இதற்கடுத்து செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படமும் ராவுத்தர் பிலிம்ஸிற்கும், விஜயகாந்திற்கும் மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்த படம். அத்தோடு ஆர்.கே.செல்வமணிக்கும் மிகப் பெரிய இயக்குநர் என்ற அந்தஸ்தையும் வழங்கியது.
கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்த ‘புலன் விசாரணை’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து சரித்திரம் படைத்தது. அதில் வில்லனாக அறிமுகமாகிய நடிகர் சரத்குமார் அதற்கு பிறகு தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.
இந்த அளவுக்கு பேசப்பட்ட படமான இதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகியுள்ளது. இதனையும் இப்ராகிம் ராவுத்தரே தயாரித்திருக்கிறார். ஆர்.கே.செல்வமணியே இயக்கியிருக்கிறார்.
2009-ம் ஆண்டில் இந்தப் படம் துவக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் ஷூட்டிங் முடிக்கப்பட்டாலும் மிக நீண்ட தாமதத்திற்கு பின்பு இந்தாண்டுதான் ரிலீஸாகவுள்ளது. படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறதாம்.
இதில் நடிகர் பிரசாந்த், ராதாரவி, பிரகாஷ்ராஜ், மன்சூரலிகான், ஆனந்தராஜ், நடிகைகள் கார்த்திகா, பாருல் யாதவ், அஸ்வினி, குயிலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் ஆர்.கே. வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா, குலுமணாலி, மும்பை, டில்லி உள்பட இந்தியாவில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
படம் பற்றி கூறிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “ஆட்டோ சங்கரின் கதையை மையமாக வைத்து முதல் பாகத்தை உருவாக்கியிருந்தேன். முதல் பாகத்தில் ஆனந்தராஜ் ஆட்டோ சங்கராக நடித்திருந்தார். இப்போது ஆட்டோ சங்கர் சிறையில் இருந்து தப்பிச் செல்வதில் இருந்து இரண்டாம் பாகம் துவங்குகிறது. அவனைப் பிடிக்க வரும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் பிரசாந்த் நடிக்கிறார்.
பெட்ரோலியத்தை கண்டு பிடித்து எடுக்கும் முயற்சியில் நடக்கும் ஒரு குற்றத்தை மையக் கருவாக கையாண்டிருக்கிறேன்.
‘புலன் விசாரணை’யின் முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிக பிரமாண்டமாகவும், அழகாகவும் படமாக்கப்பட்டிருந்கது. அதேபோல இந்த இரண்டாம் பாகத்திலும் ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாராகியுள்ளது.
குலுமணாலியில் 1000 ஆடி பள்ளத்தில் ஆம்னி பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி விழும் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும். அந்த அளவுக்கு மிக அற்புதமாக அதனை படமாக்கியிருக்கிறோம்..” என்கிறார் இயக்குநர் செல்வமணி.
இந்தக் காட்சியை படமாக்கும்போது அந்த இடத்தின் வெப்ப நிலை மைனஸ் டிகிரியில் சென்றுவிட்டதால் பல இடங்களிலும் பனி உறைந்துபோய்விட மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர முடியாமல் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பியிருக்கின்றனர் படக் குழுவினர். மறுபடியும் சில மாதங்கள் காத்திருந்து வெயில் காலத்தில் திரும்பவும் அதே இடத்திற்குச் சென்று அந்தக் காட்சியை படமாக்கியிருக்கின்றனர்.
மேலும், காஷ்மீரில் போலீஸ் ஜீப் ஒன்று வெடித்து சிதறுவது மாதிரியான காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிஹருக்கும்போது அங்கு வந்த ராணுவம் மற்றும் காவல் துறையினர் அது நிஜமான வெடி விபத்தோ என்று நினைத்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தயாரிப்பு நிர்வாகியையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் ராணுவம் மற்றும் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது சினிமாவுக்காக நடத்தப்பட்ட வெடி விபத்து என்பதை விளக்கிச் சொல்லிவிட்டு அந்தக் காட்சியையும் படமாக்கிவிட்டு வந்திருக்கிறார்கள்.
மேலும் மாலத்தீவிலும் இந்தப் படத்திற்காக சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அங்கே படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் இந்த ‘புலன் விசாரணை’யின் இரண்டாம் பாகம்தானாம். மாலத்தீவில் படகுகள் சேஸிங் காட்சிகளும், நடுக்கடலில் விமானம் இறங்கி, ஏறுவது போன்ற அதிசயத்தக்க காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.
நடுக்கடலில் இந்திய பெட்ரோலிய ஆராய்ச்சி துறை ஆழ்குழாய் கிணறு அமைத்து குரூடு ஆயில் எடுத்து வரும் பிளாண்ட்டிலும் முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனால் பாதியிலேயே அதிகாரிகள் படப்பிடிப்புக்கு தடை போட்டுவிட.. வேறு வழியில்லாமல் நடுக்கடலில் அந்த பிளாண்ட் போன்று செட்டு அமைக்கப்பட்டு அங்கு மீதமான காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் கடைசியாக 2007-ம் ஆண்டு ‘குற்றப்பத்திரிகை’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன் பின்பு ஏழாண்டுகள் கழித்து இந்தாண்டுதான் இயக்குநர் செல்வமணியின் 14-வது படமான இந்த ‘புலன் விசாரணை இரண்டாம் பாகம்’ வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி போட்டுக் கொடுத்த பிரம்மாண்டம் என்ற ராஜபாட்டையில், அதற்குப் பிறகு பல இயக்குநர்கள் நடந்து சென்றே ஜெயித்துவிட்டார்கள். இன்றைக்கும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள். இயக்குநர் செல்வமணியின் இந்த மீள்வருகை அவருக்குப் பெருமை சேர்க்கும்வகையில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.