full screen background image

விஷால் கைப்பிடிக்கப் போவது வரலட்சுமியையா..? தனலட்சுமியையா..?

விஷால் கைப்பிடிக்கப் போவது வரலட்சுமியையா..? தனலட்சுமியையா..?

உண்மையில் பொங்கல் ரிலீஸ் படங்களில் முதலிடத்தில் இடம் பிடித்து வசூலை வாரிக் குவித்திருக்கும் ‘ஐ’ படக் குழுவினர்தான் சக்ஸ்ஸ் பிரஸ்மீட்டை நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், இப்போதைக்கு கூட்டத்தைக் கூட்டினால் வம்பை விலைக்கு வாங்கிய கதையாகிவிடும் என்பதால் ஷங்கர் மெளனம் சாதிக்க.. இதையே சாக்காக வைத்து தயாரிப்பு நிறுவனமும் தற்போதைக்கு அமைதியாகிவிட்டது.

ஆனால் அமைதியாக சொல்லி வைத்து களத்தில் குதித்து வெற்றி வாகை சூடியுள்ள ‘ஆம்பள’ படக் குழுவினர் சக்ஸஸ் பிரஸ்மீட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டனர். கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் அளவுக்கு இதில் விநியோகஸ்தர்களுக்கும், விஷாலுக்கும் லாபம் கிடைத்திருக்கிறது என்கிறது கோடம்பாக்க கிசுகிசு வட்டாரம்.

அனைத்து ஆண்களும் வந்து மேடையில் அமர்ந்து கொள்ள “என்ன இது ஆம்பளன்ற டைட்டிலுக்கு பொருத்தமா இருக்கே..?” என்று சுந்தர்.சி.யிடம் ஒரு நிருபர் கேட்டவுடன், “அடுத்த படம் பொம்பளை வைச்சுன்னு லேடீஸை உக்கார வைச்சிர்றேன்..” என்றார் சிரித்துக் கொண்டே. ஆனால் மகளிரணியின் சார்பில் கொஞ்சம் தாமதமாக வந்து மேடையேறினார் ஐஸ்வர்யா.

முதலில் பேசிய  அனைவருமே சொல்லி வைத்தாற்போல் தயாரிப்பாளர் விஷாலுக்கும், இயக்குநர் சுந்தர்.சி.க்கும் நன்றியைச் சொல்லிவிட்டு எஸ்கேப்பானார்கள்.

விஷால் பேசும்போது, “இந்த வெற்றி விழா நான் 2012-ல நடிச்ச ‘மதகஜராஜா’ படத்துக்காக வைத்திருக்க வேண்டியது. ஆனா இன்னைக்குவரைக்கும் அந்தப் படம் ரிலீசாகல. ‘மதகஜராஜா’ படத்தைத் துவக்கியபோதே அதனை 2012 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் துவக்கினோம், ஆனால் அது இப்போவரைக்கும் முடியலை. அந்தப் படம் ஏன் ரிலீஸாகலைன்னு எனக்கும் இன்னிவரைக்கும் தெரியலை. பட்.. அந்தப் படம் சூப்பரா வந்திருக்கு. தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாருக்குமே சந்தோஷத்தை தரக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட படம் அது.

மதகஜராஜா ரிலீஸ் ஆகாதுன்னு சொன்னவுடனேயே சுந்தர்.சி சார்கிட்ட ‘உடனே நாம ஒரு படம் பண்றோம் ஸார்’ன்னு சொன்னேன். அதை செஞ்சு காட்டிட்டு இன்னைக்கு அதோட சக்சஸ்ல மீட்ல, உங்களையெல்லாம் மீட் பண்றேன். இதுவும் சந்தோஷமா இருக்கு.

ஒரு படம் வெளியாகலைன்ற ஆதங்கம், அந்தப் படத்தோட தயாரிப்பாளரைவிட ஒரு நடிகனுக்குத்தான் அதிகமா இருக்கும். ஏன்னா அவன் அடுத்த வெற்றியை தொட திரும்பவும் 80 நாட்கள் வேலை செய்து இழந்த அந்த இடத்தைப் பிடிக்கணும்.

இப்போ ‘ஆம்பள’ ரிலீசாகி நல்லா போய்க்கிட்டிருக்கு. இந்தப் படத்தோட வெற்றியைப் பார்த்தாவது ‘மதகஜராஜா’வின் தயாரிப்பாளர் அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவார்னு நெனைக்கிறேன். ஆனால் ஒன்று, அந்தப் படம் எப்போது வந்தாலும் கண்டிப்பா ஹிட் ஆகும்.

இன்னொரு படம் அதே மாதிரி செய்து வெற்றியடையணும்னு எங்களுக்குள்ள ஒரு வெறியே இருந்தது. அதுக்காகத்தான் கடுமையா உழைச்சோம். மத்தவங்க எல்லாம் உற்சாகமா பொங்கல் கொண்டாட்டத்துல இருந்த வேளையில நாங்க மட்டும் செல்போனையெல்லாம் அணைச்சு வச்சுட்டு வீட்ல அமைதியா தூங்கி ரெஸ்ட் எடுத்தோம். ஏன்னா இந்தப் பட ரிலீஸ்வரையிலும் தூக்கம், சாப்பாடு பற்றியெல்லாம் யோசிக்காம உழைச்சிருக்கோம்.

அதேபோல் இந்தப் பட ஆடியோ விழாவுல இந்தப் படத்தை பொங்கலுக்கு கண்டிப்பா ரிலீஸ் பண்ணிடுவேன்னுதான் சொன்னேன். வேற எதுவும் சொல்ல்லை. பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் வரப் போகுதுன்னு சத்தியமா எனக்கு அப்ப தெரியவே தெரியாது. ஆனா ஆர்யா இந்தப் படத்தோட ஆடியோ பங்ஷன்ல, “என்கூட எவன் வந்தாலும் வெட்டுவேன்’னு நான் சொன்னதா சொல்லிட்டுப் போயிட்டான். சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்லை. இந்தப் பிரச்சினை பத்திரிகைகள்ல வந்து பெரிய இஷ்யூவாயிருச்சு.  இதேமாதிரிதான் இதுக்கு முன்னாடி நடந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஆடியோ விழால லஷ்மி மேனனுக்கும் ஒரு இது.. ஏதோ தொடர்பு இருக்குன்னு விஷ்ணு பய கொளுத்திப் போட்டுட்டுப் போயிட்டான். எங்க நம்மளைத் தேடி போலீஸ் வருமோன்னு பயந்துகிட்டிருந்தேன். நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை.. அதனால, இனிமே என் படத்துக்கு ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனே வைக்கப் போறதில்ல. அப்படியே வச்சாலும் என் ஃபிரண்ட்ஸ் எவனையும் கூப்பிடப் போறதில்லை..!” என்றார்.

கேள்வி நேரத்தில் விஷாலிடம் “ஆம்பள’ படத்துல ‘தலைவர்’ பதவியை நீங்க ஏத்துக்க இருக்கிறதா ரெண்டு இடத்தில டயலாக் வருதே. அது நடிகர் சங்கத் தலைவர் பதவியை மனசுல வச்சுத்தானே..?” என்று கேட்டதற்கு, “அப்படியெல்லாம் யோசிச்சு வைக்கலை..” என்றார் பொத்தாம் பொதுவாக.

இன்னொரு கேள்வியாக, “தனலட்சுமியோ, வரலட்சுமியோ ஏதோ ஒரு பொண்ணு’ன்னு சந்தானம் பேசுற மாதிரி வசனம் வருதே… அதுவும் இப்படித்தானா..?” என்று கேட்க விஷால் பதில் சொல்லாமல் சிரித்தார்.

உடனேயே உற்சாகமான சதீஷ் மீண்டும் மைக்கைப் பிடித்து, “அதாவது விஷாலு.. வரலட்சுமியை எங்களுக்குத் தெரியும். தனலட்சுமி யாருன்னு பிரஸ் கேட்கிறாங்க..!” என்று விஷாலிடம் போட்டுக் கொடுக்க… விஷால், “ஒரு ரைமிங்குக்காக அப்படி எழுதப்பட்ட வசனம் அது. அதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்லை” என்று முழு பூசணிக்காயை சேற்றில் மறைத்தார்.

என்னிக்காச்சும் ஒரு நாள் வெளில வந்துதானே ஆவணும்..? அது எங்களுக்குத் தெரிஞ்ச வரலட்சுமியா? அல்லது எங்களுக்குத் தெரியாத யாரோ ஒரு தனலட்சுமியான்னு அப்போ பார்த்துக்கலாம்.

Our Score