ஆகஸ்ட்-15-ல் ரிலீஸாகவிருக்கும் தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் பற்றி இயக்குநர் பார்த்திபன் கொடுத்திருக்கும் விளம்பர கோரிக்கை..!
“ஸ்ஸ்ஸ்…! அப்பாடா…. எப்படா ரிலீஸ் என முடிவாகி(ஆகஸ்ட் 15) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளை ஒப்பந்தம் செய்தல், விளம்பர தீப்பந்தங்கள் ஏற்றுதல், வியாபார தந்திரங்களுக்குள் சிக்காமல் இளம் ரசிகர்களின் இமைகளுக்கும் கண்களுக்கும் இடையே சிம்கார்டாய் இணைப்பது எப்படி..?
ஆள் வைத்தாவது நம் மூச்சை வாங்க வைத்துவிட்டு, சற்று நேரம் நாம் ஓய்வெடுக்கலாமா என யோசிக்க வைத்தது சில நாட்களின் வேலைப் பளு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆயிரம் பேரை வாழ வைத்தாலும் “என்னை வாழ வைக்கும்” என ரசிகர்களை குறிப்பிடுவார். அப்படி அந்த மகானே குறிப்பிட்ட ரசிகர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ‘என்னை வாழ வைக்க’…
அது, ஆகஸ்ட் 15-இல் வெளியாகும் என் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை அன்றே பார்த்து வெற்றியாக்குவது..!
ஏன்?… அந்நியன் எவனின் கருவையும் களவாடாமல், இப்படி இரவெல்லாம் கண் விழித்து கவனமாய் செதுக்கிய ஒரு ‘ஒரிஜினல்’ திரைப்படத்திற்கு கிடைக்கும் மகத்தான வெற்றியே என்னை உயிர்ப்புர செய்யும்.
எவ்வளவு நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது…?”
வாங்க ஸார் வாங்க.. நல்ல படைப்புகளை எதிர்கொள்ள தமிழ் ரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.. நிச்சயம் ஆதரவுக் கரம் கொடுப்பார்கள்..!