தமிழ்த் திரையுலகம் செய்யாத ஒரு நற்செயலை இந்தி பட இயக்குநர் பால்கி செய்யவிருக்கிறார்.
கடந்த 45 ஆண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா இதுவரையில் 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். இவருடைய 1000-மாவது படம் பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’.
இந்த நல்ல செய்தியை தெரிந்து கொண்ட இந்தி பட இயக்குநரான பால்கி, நம்முடைய இசைஞானிக்கு மும்பையில் மிகப் பெரிய அளவிலான ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பாராட்டு விழா வரும் ஜனவரி 30-ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த விழாவில் லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருடன் முன்னணி பாடகர், பாடகிகளும், நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இயக்குநர் பால்கி இசைஞானி மேல் அலாதி பிரியம் கொண்டவர். மிகுந்த மரியாதை கொண்டவர். பாசமுள்ளவர். அவர் இயக்கிய ‘சீனி கம்’, மற்றும் ‘பா’ ஆகிய படங்களுக்கு எத்தனையோ ஹிந்தி இசையமைப்பாளர்கள் இருந்தும் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து இசைஞானியிடம் சரணடைந்தார். அந்த இரண்டு படங்களின் இசையும் இன்றைக்கும் ஹிந்தி திரையுலகில் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
இத்தனை பாசமுடைய பால்கி இந்த விழாவை ஏற்பாடு செய்தது பொருத்தம்தான்..
தமிழ்த் திரையுலகம் இந்த விலை மதிப்பில்லாத சாதனைக்காக இசைஞானிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறது..?