பிரசாந்த் நடிக்கவிருக்கும் ஹிந்தி ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குவதற்காக ஒத்துக் கொண்டிருந்த இயக்குநர் மோகன்ராஜா, தற்போது அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
2018-ம் ஆண்டு வெளியான ‘அந்தாதூன்’ திரைப்படம் வெறும் 32 கோடியில் தயாரிக்கப்பட்டு 457 கோடி ரூபாயை உலகம் முழுவதும் சம்பாதித்தது. இந்தப் படத்தின் தமிழ் மொழியாக்க உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார்.
தனது மகனும், நடிகருமான பிரசாந்தை வைத்து தமிழில் இந்தப் படத்தை இயக்கி வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்த மொழி மாற்றுப் படத்தின் இயக்குநராக மோகன்ராஜாவையும் ஒப்பந்தம் செய்திருந்தார். கதாநாயகிக்கான வேட்டை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்… இந்தக் கொரோனா லாக் டவுன் வந்துவிட இந்தப் பட வேலைகள் அப்படியே நின்று போயிருந்தன.
இப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடர்ந்திருக்கும் நிலையில் இந்தப் படத்தின் வேலைகளும் ஆரம்பித்தன. ஆனால், என்ன காரணத்தினாலோ இயக்குநர் மோகன்ராஜா இப்போது இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் அடுத்து ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
தயாரிப்பாளர் தியாகராஜன் இப்போது தனது படத்திற்கான நாயகி வேட்டையோடு, இயக்குநருக்கான தேடுதல் வேட்டையையும் துவக்கியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்..!