நடிகர் ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘The Show People’ தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர்.
‘V.S.O.P’ என சுருக்கமாக அழைக்கப்பட்டுவரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள். சமீபத்தில் வெளியான ‘V.S.O.P.’ திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆர்யா, சந்தானத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்தது பற்றி மகிழ்ச்சியோடு பேசினார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
“V.S.O.P.ன்னா ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்பதன் சுருக்கம். நீரவ்ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, D இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது இந்த V.S.O.P. திரைப்படம்..” என்று ஆரம்பித்தார் இயக்குனர்.
காதல், ஃப்ரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா. மக்களும் நம்மிடம் இருந்து அதைதான் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம். இந்தப் படத்திலும் அதே கதைதான்..
ஆர்யாவும், சந்தானமும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இவர்களுக்கிடையே பெண்களால் ஏற்படும் பிரச்சினைகளை மிக, மிக கலாட்டாவான திரைக்கதையில் காமெடியாக சொல்லியிருக்கிறோம்.
படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் வருகிறார்கள்.
ரசிகர்கள் அனைவரையும் இந்தப் படத்தின் டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் V.S.O.P வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ திரைப்படம் மீண்டும் நினைவில் நிறுத்தும்.” என்று உறுதியுடன் கூறினார் இயக்குநர் எம்.ராஜேஷ்.










