சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நிமிர்ந்து நில்” படத்தில் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கைதட்டல்களையும் பெற்ற நடிகர்.. தொழில் முறையில் நடிகரல்ல.. நல்ல இயக்குநராக வேண்டும் என்பதற்காக கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தவர். சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தவுடன், இயக்குநராக வாய்ப்பு தேடும் படலத்துடன் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்துவிட்டார்.
‘போராளி’ படத்தில் ‘குடிகார குமார்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து ‘குட்டிபுலி’ படத்தில் சரண்யாவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம். ‘புலிவால்’ படத்தில் விமல் நண்பன். இப்போது ‘நிமிர்ந்து நில்’ படத்தில் லஞ்சம் வாங்குவதையே தொழிலாக கொண்டு பின்பு திருந்தி கதாநாயகன் ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தான் மூலம் இன்று தமிழகம் முழுவதும் தெரிந்த நட்சத்திரமாகிவிட்டார் போராளி திலீபன். ஆனாலும் ஒரு திரைப்படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை வேடத்தில் நடித்துவிட வேண்டும் என்பதுதான் இவரது தலையாய ஆசை..
திலீபனின் வாழ்க்கை கேரியர் இதுதான்.
“கோவையில் டிப்ளமோ படித்துவிட்டு சென்னைக்கு வந்து இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக சேர்ந்து ‘வானத்தை போல’, ‘உன்னை நினைத்து’ போன்ற படங்களில் பணியாற்றினேன். பிறகு கஸ்தூரி ராஜாவிடம் ‘டிரீம்ஸ்’, கே.பாலச்சந்தரிடம் ‘பொய்’ சமுத்திரகனியிடம் ‘நெறஞ்ச மனசு’ சுசீந்திரனிடம் ‘ராஜாபாட்டை’ போன்ற படங்களிலும் உதவியாளராக பணியாற்றினேன். ” என்கிறார் போராளி திலீபன்.
தற்போது இவர் “வெள்ளை குதிரையில் ராஜகுமாரன்” என்ற படத்தினை இயக்கி கொண்டிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் போராளி திலீபன் மருந்துக்குக்கூட மேக்கப் போடவில்லையாம்.. ஒன்லி டைரக்ஷன் மட்டும்தானாம்.
“என்னை நல்ல நடிகனாக்கிப் பார்த்த என் குருநாதர் சமுத்திரகனி அவர்களுக்கு என் ஆயுள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்…” என்கிறார் போராளி திலீபன்.