தன்னுடைய மருத்துவச் செலவுகளுக்காக அஞ்சலியிடம் கொடுத்த முன் பணத்தைத் திருப்பிக் கேட்ட பிரச்சினையில் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று பிளேட்டை திருப்பிப் போட்டிருக்கும் இயக்குநர் களஞ்சியம் அஞ்சலி தன் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் இது குறித்து ஜூ.வி.க்கு அளித்துள்ள பேட்டியில், “பூஜ்ஜியமாக இருந்த அஞ்சலியின் முன் ஒன்று போட்டவன் நான். நான் அவருடைய பணத்தை நம்பியில்லை. தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக என் மீது பொய்க் குற்றச்சாட்டை அஞ்சலி வெளியிட்டார். இது குறித்து அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அவருக்கும் அவரது சித்திக்கும் பிரச்சினை என்பதற்காக எனது படமான ‘ஊர் சுற்றிபு புராண’த்தில் நடிக்க மறுக்கிறார் அஞ்சலி. இதற்கு திரைப்பட சங்கங்களின் உதவியை நாடியிருக்கிறேன். இந்தப் பிரச்சினைக்காக நான் எந்த வழக்கும் தொடரவில்லை.
அஞ்சலி எனது படத்தில் நடிக்காமல் போனால் அதுவொரு மோசமான முன்னுதாரணமாகிவிடும். நடிகன், நடிகை யாராவது யாரையாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டால் பணம் போட்டு படத்தை எடுத்தவன் வீதியில் நிலை வரும்.
இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அஞ்சலியை எந்தப் படத்திலும் நடிக்க வைக்காமல் செய்ய என்னால் முடியும். ஆனால் நான் அதைச் செய்யாமல் இப்போதும் சினிமா சங்கங்களையே நம்பியுள்ளேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
இவர் சங்கங்களை நம்புறது இருக்கட்டும்.. சங்கங்கள் இவரை நம்பலையே..? இதை இவர் எப்போ புரிஞ்சுக்கப் போறார்..?