இயக்குநர் களஞ்சியத்தின் விபத்து பற்றிய எபிசோடின் அடுத்த கதையும் வெளியாகியுள்ளது..
நடிகை அஞ்சலியின் சித்தி மகன் திருமணத்திற்காக ஆந்திரா சென்றபோது ஓங்கோல் அருகே நடந்த விபத்தொன்றில் சிக்கி இயக்குநர் களஞ்சியமும் அவரது நண்பர்களும் படுகாயமடைந்தார்கள் என்பதும், இந்த விபத்தில் அருண்குமார் என்ற துணை இயக்குநர் மரணமடைந்ததும் தெரிந்ததே..!
கடந்த 24-ம் தேதி திருச்சி அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட களஞ்சியம் அங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் 25-ம் தேதியன்று அவரது நண்பர்கள் பெயரில் ஒரு அறிக்கை பத்திரிகையாளர்களுக்கு பறந்து வந்தது.
அதில் களஞ்சியம் சுயநினைவில்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதனால் செலவுக்குப் பணமில்லாமல் தவிக்கிறார். நடிகை அஞ்சலி ஊர் சுற்றிப் புராணம் படத்திற்காக வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் களஞ்சியத்தின் உயிர் காக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தார்கள்.(இந்தச் செய்தி இந்தப் பதிவில் உள்ளது)
ஆனால் மறுநாள் லோக்கல் பத்திரிகை நிருபர்கள் மருத்துவமனைக்கு சென்று களஞ்சியத்தை புகைப்படமெடுத்து பேட்டியெடுத்து களஞ்சியம் நன்றாகவே உள்ளார். சீரியஸ் இல்லை. தெளிவாகவே இருக்கிறார் என்று குட்டை உடைக்க.. களஞ்சியத்தின் மீது கடுப்பானது மீடியா உலகம்.(இந்தச் செய்தியும் இந்தப் பதிவில் உள்ளது.)
இப்போது ‘ஜீனியர் விகடன்’ பத்திரிகைக்கு களஞ்சியம் அளித்துள்ள பேட்டியில் “அந்த அறிக்கையை யார் வெளியிட்டது என்பதே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் காசு வாங்கி மருத்துவச் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.
இவரும் இப்போ இ்லலைன்றாரு.. அப்போ யார்தான்யா அன்னிக்கு அம்புட்டு உருக்கமா எழுதி ஊரைக் கெடுத்தது..? ஊமைக் குசும்பன்கள் நிறைய பேரு கோடம்பாக்கத்துல இருக்காங்க போலிருக்கு..!










