full screen background image

“கல்யாணமாகி தனிக்குடித்தனம் பண்றீங்க போலிருக்கே..?” விஷாலை பதற வைத்த கேள்வி..!

“கல்யாணமாகி தனிக்குடித்தனம் பண்றீங்க போலிருக்கே..?” விஷாலை பதற வைத்த கேள்வி..!

நடிகர் விஷால் நேற்று தனது பிறந்த நாளை ரெசிடன்ஸி ஹோட்டலில் பத்திரிகையாளர் முன்னிலையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.

தன்னுடைய தங்கையுடன் வந்திருந்தார் விஷால். கேக்கை வெட்டியுடன் முதல் கேக் துண்டை தங்கைக்கு கொடுத்தும். தங்கையிடம் இருந்தும் பெற்றுக் கொண்டார்.

IMG_4206

அவருடன் வந்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினர் ஆளுயர மாலையை போட்டு கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். அரசியல் பேச்சின்போது அவரது இரு புறமும் நின்றிருந்த அவரது ரசிகர்களிடத்தில் இருந்து முதல் கைதட்டல் கிளம்பியது..!

அவர் மேடையில் பேசியதில் இருந்து சில பகுதிகள்..

IMG_4225

“இன்று முழுவதும் எனக்கு பிடித்த விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு பிடித்த கறுப்பு சட்டை அணிந்து இருக்கிறேன். பிடித்த நண்பர்களை சந்தித்து இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். பிறந்தநாள்.. கொஞ்சம் ஸ்பெஷல்.

என் கையில் காசு இல்லாதபோதே பல நல்ல விஷயங்களை செய்து கொண்டிருந்தேன். இப்போது காசு இருக்கிறது. இன்னும் நல்ல விஷயங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். அரசியலுக்கு வந்துதான் பொதுமக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியலுக்கு வராமலும் செய்யலாம்.

IMG_4214

எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மீண்டும் நான் கல்லூரியில் சேர்ந்து ‘அரசியல் அறிவியல்’ படிக்க வேண்டும். இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதுமில்லை.

சினிமாவில் செய்ய வேண்டிய வேலையே நிறைய இருக்கிறது. திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பதில், முதல் ஆளாக முன்னால் நிற்பேன். எந்த பெரிய தாதாவாக இருந்தாலும் பயப்பட மாட்டேன். திருட்டு வி.சி.டி. என் படுக்கை அறைக்குள் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன். இதற்காக என் உயிரை கொடுக்கவும் நான் தயார்.

இந்த பிரச்சினைக்காக, ரஜினிகாந்த், விஜய் உள்பட அனைத்து நடிகர்–நடிகைகளும் இறங்க வேண்டும். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். தமிழ் திரையுலகின் அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்தால், திருட்டு வி.சி.டி.யை ஒரே மாதத்தில் ஒழித்து விடலாம்.

இந்த விஷயத்துல முதல் தப்பு திரையுலகத்தின் மீதுதான். திருட்டு வி.சி.டி. திருடர்களை நாம்தான் வளர்த்துவிட்டோம். அது தப்பு என்பதை வெளியுலகுக்கு புரிய வைக்காததும் எங்கள் தப்புதான்.

படத்தில் மட்டும் அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக இருக்க விரும்புகிறேன். அதனால்தான் காரைக்குடியில் திருட்டு வி.சி.டி. விற்றவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தேன்.

காரைக்குடில நான் தங்கியிருந்தப்போ ஒரு கேபிள் டிவில திருட்டு டிவிடில படம் போட்டாங்க. நான் போலீஸோட போய் அவங்களை பிடிச்சேன். அங்க இருந்த தம்பிகிட்ட ஏண்டா இது உனக்கே தப்புன்னு தோணலையான்னு கேட்டேன். அவன் சொல்றான்.. சத்தியமா எனக்குத் தெரியாது.. எல்லா டிவிடியும் நல்ல டிவிடின்னுதான் நினைச்சேன்றான். சத்தியமா அவனுக்கு இத பத்தியே தெரியலை.. டிவிடியை வாங்கிக் கொடுத்துட்டு இன்ன நேரத்துல இதை போட்டிருன்னு மட்டும் சொல்றாங்களாம். இவன் போடுறானாம்.. எனக்கே பாவமா இருந்துச்சு.. இப்போ இவன் ஜெயிலுக்கு போனா அவன் லைபும் ஸ்பாயில் ஆயிரும்.. அதுனால பாவம்.. போகட்டும் விட்ருங்கன்னு போலீஸ்கிட்ட சொல்லிட்டேன்..

நடிகர் சங்க விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு என்னன்னா.. நடிகர் சங்கக் கட்டிடம் இருந்த இடத்துல புதுசா ஒரு பெரிய கட்டிடம் கட்டணும்.. இதுதான் என்னோட ஆசை.. இப்போதைய தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகிய இருவருக்கும் நான் எதிரானவன் அல்ல.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் நாடகங்களில் நடித்து கட்டியது தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நான், ஜீவா, கார்த்தி, ஆர்யா போன்றவர்கள் ஆசைப்படுகிறோம்.

இதற்காக, சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்து தர தயாராக இருக்கிறோம். நலிந்த தயாரிப்பாளர், நலிந்த வினியோகஸ்தர், நலிந்த தியேட்டர் அதிபர் என்று இருப்பது போல், நலிந்த நடிகர் என்று ஒருவர் இருக்கவே கூடாது. இதுதான் எனது ஆசை..” என்று டச்சிங்காகவே பேசினார்.

பேசி முடித்ததும் விஷாலை நோக்கி கேள்விகள் பறந்தன. அத்தனைக்கும் பொறுமையாகவே பதில் சொன்னார் விஷால்.

“நடிகர் சங்கம் விஷயமா  உங்க பேச்சை கேள்விப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர், அந்த பையன் நியாயமாதானே பேசுறான் என்று விமர்சித்தாராமே… கேள்விப்பட்டீங்களா?’ என்றொரு கேள்வியை மூத்த நிருபர் கேட்க, “நானும் அந்த மேட்டரை ‘தினமலர்’ல படிச்சேன். பட்… எனக்கு தெரியாது. அந்த விஷயத்துல என் மனசுக்கு எது நேர்மைன்னு பட்டுச்சோ அதைத்தான் பேசினேன்..”  என்றார் விஷால்.

எப்போதும் கேட்கப்படும் அதே கேள்வி மறுபடியும் விஷாலிடம் பறந்தது.. “கல்யாணம் எப்போ?” – இதைக் கேட்டவுடன் வெட்கத்தில் சிரித்தார் விஷால். பார்க்கவே காமெடியாகத்தான் இருந்தது.. இது மாதிரி ஒரு சினிமாலகூட ஆக்சனை காட்டியது கிடையாது விஷால்..!

“அடுத்த வருஷம் டிசம்பர்வரைக்கும் கிடையாது. ஏன்னா… எனக்குன்னு சில லட்சியங்கள் இருக்கு. அதையெல்லாம் முடிச்சுட்டுதான் கல்யாணம் மத்த விஷயமெல்லாம்..” என்றார். இதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டிருந்தது..

மறுபடியும் ஒரு கேள்வி.. “உங்களுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி.. இப்போ வொய்ப்கூடத்தான் தனிக்குடித்தனம் நடத்துறீங்கன்னு சொல்றாங்களே…?..” என்று எழுந்தது ஒரு கேள்வி.. கூட்டம் கலகலக்க.. “என்னது.. விட்டா எனக்கு குழந்தை இருக்குன்னுகூட சொல்வீங்க போலிருக்கே. இப்படியெல்லாமா இமாஜின் செய்வீங்க..?” என்றார் சங்கடத்துடன்..!

இந்த ஒரு கேள்வியோடு நிகழ்ச்சிக்கு மங்களம் பாடிவிட்டார்கள்..!

Our Score