“தமிழ்த் திரையுலகத்தில் ‘திரைக்கதை மன்னன்’ என்று பெயரெடுத்த நடிகரும், கதாசிரியரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தற்போதைய திரை ஆர்வலர்கள், புதிய துணை இயக்குநர்களுக்காக திரைக்கதை வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘3.6.9.’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் சித்ரா லட்சுமணன் பேசும்போது, “இன்றைய திரைப்பட உலகம் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் 1,000 கோடியில் படமெடுக்கிறார்கள். பாக்யராஜின் சிஷ்யன் பார்த்திபன் ஒரு ஷாட்டில் இப்போது படமெடுத்து வைத்திருக்கிறார். இங்கே இவர்கள் இப்படியொரு புதிய சாதனையைப் படைத்துள்ளார்கள். இந்த இரண்டு படக் குழுவினருக்கும் இடையில் இருக்கும் ஒரே ஒற்றுமை, இந்த இரண்டு படங்களிலும் இயக்குநர் கே.பாக்யராஜ் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதுதான்.
ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இவர்களின் தைரியமும் திட்டமிடலும் கவர்கிறது. இயக்குநரின் தெளிவு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது திரைக்கதைதான் பெரிய சிக்கலாக இருக்கிறது. எந்தப் படத்திலும் திரைக்கதை சரியில்லை என்றுதான் முதலில் பேச்சு வருகிறது, திரைக்கதையில் வித்தகரான பாக்யராஜ் இப்போது இருக்கும் திரை ஆர்வலர்களுக்கு ஒரு திரைக்கதை வகுப்பை நடத்த வேண்டுமென இங்கு கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.